திருப்பழனத்து மகாதேவர்
பெரியநாயகி, ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் , திருப்பழனம்.
புனல் ஓடிய பொன்னியில் மணல் ஓடிய தருணத்தில் நான் ஓடினேன் மழலையாக...
திருவையாற்றில் இருந்து குடமூக்கு செல்லும் தடம் , பெரும்பாலும் காவிரிக்கரை வழியாகவே செல்லும்.... பொன்னியின் இரண்டு கரைகளிலும் வனங்கள் மட்டுமல்ல , திருத்தலங்களும் முளைத்து இருப்பதை காணலாம்... இங்கு காணப்படும் கற்றளிகளுக்கு வித்திட்டவர் சோழ சாம்ராஜ்யத்தின் ஆணிவேரான கோதண்டராமன் என்னும் சைவக் பிரியன்.
காவிரியின் இரு கரைகளிலும் பல கோயில்கள் எடுப்பித்தான் என்று அன்பில் செப்பேடு புகழ்கிறது.. அத்தகைய திருத்தலங்கள் பெரும்பாலும் குயில் பாடும் சோலைகளுக்கு நடுவே அமைந்திருப்பது மற்றுமொரு சிறப்பு... இறைவனை இயற்கையாக கண்டார்களா அல்லது இயற்கையை இறைவனாக கண்டார்களா என்னும் ஐயம் ஏற்படும் வகையில் தேவாரப் பாடல்களில் தந்திருக்கின்றார்கள் ....
அத்தகைய சிறப்புமிக்க ஸ்தலம் திருப்பழனம் மகாதேவர் கோயில்.
பழனம் என்பது நீர் நிலையில் உள்ள விளை நிலங்களும், கதலிவனம் என்று கூறப்படுகிறது , நடுபகலிலும் பட்சிகளின் காதல் கீதம்... கேட்கலாம் அத்தகையதொரு இயற்கை வனப்பு மிக்க பகுதி....
கதிரவன் கல்லின் மீது கொண்ட காதலால் கொதித்துக் கொண்டிருந்த கற்கள் மீது கால்கள் நடனமாடிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை..... எங்கும் பசுமை நமது பாதை மட்டும் வெம்மை...
வாகீச பெருமானால் 5 பதிகமும், திருஞானசம்பந்தரால் ஒரு பதிகமும் பாடல்பெற்ற இந்தத் திருத்தலம் ஆறாம் நூற்றாண்டிற்கும் முந்தைய பழமையானது என்பதை உணர்ந்து கொள்ளலாம்...
மேலும் அவர்களின் பதிகங்களில் காணப்படும் இயற்கை வர்ணிப்பு கொண்டு இந்த இடம் இவ்வாறு இருந்திருக்க வேண்டும் என்பதையும் ஊகிக்க முடிகிறது...
கட்டடக் கலைக்கு உதாரணமாகத் திகழும் முழு கற்றளியாக இந்தக்கோவில் சோழ மகா சாம்ராஜ்யத்தின் ஆணிவேராக விளங்கிய ஆதித்தசோழர் (871-907) காலத்தில் கற்றளியாக கட்டப்பட்டது .
சிற்பங்களாலும், கட்டடக்கலையாலும் ஈர்க்ப்பட்டோர் இந்த கோயிலுக்கு செல்லும் பொழுது, பழைய விட்டலாச்சாரியா படத்தில் வருவது போல தன் உருவத்தை பெரிதாக்கி கொண்டு இந்தக் அழகிய கோயில் விமானத்தை ஆலிங்கனம் செய்ய முடியவில்லையே என்று ஒரு ஆதங்கம் துளிர்விடும் ...
இந்தத் திருக்கோவில் கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபத்தை கொண்டது, முகப்பு மண்டபம்,விழா மண்டபம் சுற்றுச் சுவர்கள், பதினாறுகால் மண்டபம், மடப்பள்ளி அருகில் இருக்கும் அம்மன் கோவில் ஆகியவை பிற்காலத்தில் வெவ்வேறு அரசர்களால் வெவ்வேறு அரசுகளால் கட்டப்பட்டன .... அவை ஒருபுறமிருக்க ,சோழ வேந்தன் எடுப்பித்த சுற்றில்,
மகா மண்டபத்தில் இருந்து வெளியேறுவதற்கு இரண்டு புறமும் அந்தாராளவழி உள்ளது, நாகர அமைப்பைச் சேர்ந்த இந்தத் திருக்கோவில் , கோவில் கட்டடக் கலைக்கு ஒரு முன்னுதாரணமாக கருதலாம் ... உபபீடம் , தாங்குதளம் பாதச்சுவர் , பிரஸ்தரம், ஹாரா, அடுத்த தளம் , கழுத்து , கிரீவம் தூபி என அனைத்து பாகங்களையும் கொண்டும், ஒவ்வொரு பாகமும் தனிச் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ள இந்த கோவில் விமானம் பார்த்துக் கொண்டே இருக்கத் தூண்டும்....
வழக்கமாக கோயில்களில் இருப்பது போல அல்லாமல் கோஷ்டத்தில் சப்தரிஷிகளுடன் தென்முக தெய்வம் தக்ஷிணாமூர்த்தி முதலிலேயே காணப்படுகின்றார் அடுத்த விநாயகரும், வடக்குப் புறத்தில் விஷ்ணு துர்க்கையும் காணப்படுகின்றனர்... அதுமட்டுமல்லாமல் சிவனின் பல்வேறு ரூபங்கள் கோஷ்டத்தில் மிக நுட்பமான வடிவில் புடைப்புச் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் தூண்களும் அழகிய நுணுக்கங்களுடன் ஒரே மாதிரி அல்லாமல் வெவ்வேறு மாதிரி அமைப்பை பெற்றுள்ளது மேலும் ஒரு சிறப்பு. அவைகளில் காணப்படும் மாலை தொங்கலும் மேலும் வசீகரிக்கிறது.... அதிட்டானத்தில் இருந்து பிரஸ்தரம் வரை , பல வரலாற்றுச் செய்திகளை கல்வெட்டுகள் மூலம் நமக்கு எடுத்துரைப்பதுடன் பிரகாரத்தில் அமைந்துள்ள கூடுகளில் பல்வேறு அழகிய குறிஞ்சிற்ப்பங்கள் நம்மை வியக்க வைக்கின்றது.....
பெரும்பாலான கோவில்களில் பார்க்கமுடியாத , நின்ற நிலையில் பல்வேறு இசைக் கருவிகளை கையிலேந்தி உள்ள அப்ஸரஸ்களையும்,
விருத்தஸ்புடிதம் எனும் தூண் போன்ற அமைப்பையும் இந்தக் கோவில் விமானத்தில் பிரஸ்தரத்திற்கு மேல் உள்ள தளத்தில் காணலாம்....
மேலும் கிரீவ கோஷ்ட பகுதியில் சிவனின் பல்வேறு ரூபங்கள் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளன. தெற்கு புறத்தில் வசிகரிக்கும் விநாயகரும் மேற்கு புறத்தில் அர்த்தநாரீஸ்வரர் கிழக்கு புறத்தில் ஆலிங்கன மூர்த்தி மிகவும் கவரும் விதத்தில் அமைந்துள்ளது கழுத்துப் பகுதியில் சிறப்பு....
எட்டு திசைகளிலும் தலை வாகனமான ரிஷபம் அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டு மேலும் கழுத்திற்கு ஆபரணமாக அழகு சேர்க்கின்றது....
இன்னும் ஒரு நூறு கதைகள் பேசலாம் இந்த திருக்கோவிலின் சிற்பங்களையும், கட்டிடக் கலைகளைப் பற்றியும்.....
முதலாம் ஆதித்த சோழர் காலத்தில் பல்வேறு நிவந்தங்களை இந்தத் திருக்கோவில் பெற்றிருக்கின்றது என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறியலாம், இவரது 17 ஆவது ஆட்சியாண்டில் சோழ பெருமானடிகள் தேவியார் தென்னவன் மாதேவியார் என்பவர் நொந்தா விளக்கு எரிப்பதற்கு நிவந்தம் அளித்துள்ளார், இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் ஆதித்த சோழன் சோழர் "பெருமானடிகள் பெருநற்கிள்ளி சோழன்" என்றும் , "உலக பெருமான்" என்றும் பெயர்களில் அழைக்கப்பட்டார் என்பது அறிய முடிகிறது...
மதுரை கொண்ட கோப்பரகேசரி (907 -955) மூன்றாவது ஆட்சியாண்டில் "சோழ பெருமானடிகள் பரகேசரி பற்மர் தேவியர் சோழமாதேவியார் தாயார் முள்ளூர் நங்கையார் " என்பவர் 30 கழஞ்சு பொன் நொந்தா விளக்கு எரிப்பதற்கு நிவந்தம் அளித்துள்ளார்.
மேலும் நில தானமும் சாவா மூவாப் பேராடு மற்றும் பொன் தானமும் இந்தத் திருக்கோயிலுக்கு அளித்துள்ளனர்...
இவரது 31 ஆவது ஆட்சியாண்டில் , கோவிலின் பல்வேறு பணிகளுக்காக ஒரு பெரிய நிலத்தை பகிர்ந்து , அந்தந்த பகுதியில் இருந்து வரும் வருமானம் , அந்தந்த பணிகளுக்காக பிரித்து அளிக்கப்பட்டுள்ளது இந்த நிலத்தை பற்றி குறிப்பிடும் போது , "கரிகால கரைக்கு வடக்கே" என்று நிலத்தின் எல்லையை குறிப்பிடுகின்றனர் அதாவது காவிரி கரைக்கு "கரிகால கரை" என்னும் பெயர் பயன்பாட்டில் இருந்திருக்கிறது என்பதை இங்குள்ள கல்வெட்டின் மூலம் அறியலாம்...
பராந்தகன் காலத்தில் பழுவேட்டரையரின் இளவரசி ஒருவர் சந்திரன் சூரியன் உள்ளவரை நொந்தா விளக்கு எரிப்பதற்கு ஆடுகள் தானமாக அளித்துள்ளார்
கோப்பரகேசரி வர்மன்(973 - 985) ஆட்சியாண்டில் அருமொழிதேவர் தெரிஞ்ச கைக்கோளப்படை சார்ந்த ஒருவர் இந்த திருக்கோவிலுக்கு தானம் அளித்துள்ளார்.... கைக்கோள படையைச் சேர்ந்த ஒருவர் நிவந்தம் அளிக்கும் அளவிற்கு வசதியுடன் வாழ்ந்து இருக்கிறார் என்பதையும் , அருமொழிதேவர் பெயரில் கைக்கோளப்படை கொண்டிருந்தது என்பதையும் அறியமுடிகிறது...
கோ ராஜராஜ கேசரி(985 - 1014) வருமர்க்கு ஒன்பதாம் ஆட்சியாண்டு 147 ஆம் நாள் கூற்று ஆழ்வாருக்கு மணி கூத்தன் என்பவன் தொண்ணூத்தி மூன்று கழஞ்சு பொன் தானமாக அளித்துள்ளார்
ராஜகேசரி வர்மனின் கேரள போரின் வெற்றி சின்னமாக, அவரிடமிருந்து அனுமதி பெற்று "கம்பன் மணியரான விக்கிரமசிங்க மூவேந்த வேளார்" என்பவர் ஒரு மரகத தேவர் சிலையை இந்த கோவிலில் நிர்மாணித்தார் என்றும் கல்வெட்டு மூலம் அறியலாம்... அது என்ன மூர்தத்தின் சிலை என்பது விபரம் இல்லை....
இந்தக் கோவிலின் அருகில் திருக்காமக் கோட்டம் உடைய பெரிய நாச்சியார் எனும் பெயருடைய அம்மனுக்கு என்று தனி சன்னதி மூன்றாம் குலோத்துங்க சோழர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது (1178 - 1216)....
இந்த திருக்கோவிலில் மணி நேரம் மழை துளியாக கரைந்து ஓடிவிடும் என்பதை நேரில் பார்க்கும்போது உணர்ந்து கொள்ளலாம்
அழகே உருவான வீணாதர மூர்த்தி
உமையொருபாகன்
திருக் காமக் கோட்டமுடைய பெரிய நாச்சியார்
அருமொழிதேவர் தெரிஞ்ச கைக்கோளர்....
நதிகள் எப்போதுமே தன்னை புதுப்பித்துக் கொண்டுதானிருக்கின்றன, அதிலும் சோழ நாட்டில் ஓடும் இந்த பொன்னி நதிக்கு மேலும் சிறப்புடையது , அதற்காகத்தான் சோழநாட்டு மக்கள் பொன்னிற ஆடை நெய்து போர்த்தி இருக்கின்றனர் போலும்.... மணல் .... சொல்லும்போதே ஒரு ஈர்ப்பு ஏற்படுகின்றது அல்லவா
ஆலிங்கன மூர்த்தி
முகப்பு மண்டபத் தூணில் நர்த்தனமாடும் கணபதி
ஸ்வஸ்தி ஸ்ரீ மதுரை கொண்ட கோப்பரகேசரி..
விஷ்ணு துர்க்கை
சண்டிகேஸ்வரர்
திருப்பழனம் மகாதேவர்..... பழுவேட்டரையரின் இளவரசி ஒருவர் கொடுத்த நிவந்தம்
லிங்கோத்பவர்
யோகநிலையில் சிவன்
கங்காதர மூர்த்தி
கோஷ்டத்தில் மேற்குப்புறம்
தென்மேற்கு மூலையில் அமர்ந்துள்ள விநாயகர்
சப்த மாதர்கள், இவையும் வேறு எங்கோ இருந்து பாதுகாப்பிற்காக இங்கு கொண்டு வைக்கப்பட்டது போல் தனியாக காணப்படுகிறது
கோஷ்டத்தில் அமைந்துள்ள கஜசம்ஹாரமூர்த்தி
நாசிக் கூட்டில் தேரில் நின்றபடி நான்முகனுக்கு நடனமாடிக் காட்டும், திரிபுர சம்ஹார மூர்த்தி சிவனின் அழகிய புடைப்புச் சிற்பம் .....
கோஷ்டத்தில் அமைந்துள்ள விநாயகர்... நர்த்தனமாடும் அழகிய சிவன் புடைப்புச் சிற்பம் கொண்ட மகர தோரணம்...
தக்ஷிணாமூர்த்தி அமைந்துள்ள இடத்தில் இடம் பெற்றுள்ள அழகிய புடைப்புச் சிற்பங்கள்
தென்முகக் கடவுள் தக்ஷிணாமூர்த்தி அருகில், சிவலிங்கத்திற்கு பசு தானாக பால் சுரப்பது போன்றும் அருகில் ஒரு முனிவர் தவம் செய்வது போன்ற அழகிய ஒரு புடைப்புச் சிற்பம்
வேழத்திருமகளை முதன்மையாகக் கொண்டு பல்வேறு விவசாய உபகரணங்களையும் வடிவமைத்து, நிவந்த சாசனம் வடித்துள்ளனர் ....
சித்திரமேழி பெரிய நாட்டார்கள் என்னும் வணிகக் குழுவை சார்ந்த கல்வெட்டாக கருதப்படுகிறது , ஆனால் பெரும்பாலும் சிதைவுற்றள்ளது.ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் திருப்பழனம் ராஜ கோபுரத்திலிருந்து உள்ளே செல்லும் வழி
இரண்டாம் சுற்றில் உள்ளே நுழைந்ததும் , வலது புறத்தில் அமைந்துள்ள நந்தியுடன் கூடிய சிவலிங்கம் . வேறு பகுதியிலிருந்து இங்கு எடுத்துவந்து பாதுகாத்து வைத்திருக்கலாம்..
வடமேற்கு மூலையில் அமைந்துள்ள மண்டபம்
சண்டிகேஸ்வரர் சன்னதி மற்றும் மகா மண்டபத்தில் இருந்து வெளியே வரும் வழி
முதல் திருச்சுற்றில் அமைந்துள்ள மண்டபத்துடன் கூடிய பாதை
திருப்பழனம் மஹாதேவர் திருக்கோவிலின் கர்ப்பகிரக விமானத்தின் வடக்குப்பகுதி, கீழிருந்து மேலாக ஒவ்வொரு பகுதியிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அமைத்துள்ளனர், மற்ற கோவில்களைப் போல் அல்லாமல் இங்கு கோஷ்டத்தில் சிவனின் பல்வேறு உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது... பாதச்சுவருக்கு மேல் பூத வரிசையும், பிரஸ்தரத்தில் சீரான இடைவெளியில் நாசி கூடுகளும் , அதில் பல சிறிய புடைப்பு சிற்பங்கள் அமைந்துள்ளது, அதற்கு மேல் அழகிய யாழி வரிசையும் , அதற்கடுத்து இசைக்கருவிகளுடன் கூடிய அழகிய மங்கைகள் கிரீவ கோஷ்டத்தில், சிவரூபம் அமைப்பதுடன் இது நாகர அமைப்பைச் சார்ந்த விமானமாக அமைத்துள்ளனர்..
திருப்பழனத்து ஆழ்வார் திருக்கோவிலின் விமானம்