திருச்சிரமணத்து மலை என்கிற
சிதறால் மலை.
மேற்குத் தொடர்ச்சியின் வனப்பு தெற்கிலிருந்து சிறிதுசிறிதாக தனா பிரம்மாண்டத்தைக் கூட்டிக் கொண்டே வடக்கு நோக்கி வளர்ந்து கொண்டும் , நெளிந்து நடை பழகிக் கொண்டும், ஒய்யாரத்தைப் பிரதிபலித்தாலும் , இந்த அழகிய மலைத்தொடர் ஒவ்வொரு இடத்திலும் பல்வேறு பரிமாணங்களைப் பெற்று இயற்கையின் ஒட்டுமொத்த அழகையும், வசீகரத்தையும் தனக்குள்ளே புதைத்து வைத்துக் கொண்டிருக்கின்றது.
தென்மேற்குப் பருவக்காற்றின் கார்மேகங்கள் அனைத்தையும் ஆசையாக தனக்குள்ளே உறிஞ்சி , வளப்படுத்திக் கொள்ளும் இந்த மலைத்தொடரின் தெற்கு மூலையில் உள்ள ஒரு அழகிய இடம் சிதறால்...
பொருநை என்னும் தாமிரபரணி ஆறு தழுவி நிற்கும் இந்த சிதறால் மலைக்குன்று ஏறக்குறைய இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிலிருந்தே , இயற்கையில் மூழ்கித் திளைத்து சமணர்களின் வாசஸ்தலமாக இருந்திருக்கின்றது...
பகலிலேயே ராகோழிகளின் மெல்லிய ஓசையும் , பலா மரங்களில் மொய்க்கும் தேனீக்களின் ரீங்காரமும் கேட்குமளவிற்கு அமைதி குடிகொண்டிருக்கும் அற்புதமான வனம் , இரண்டு புறங்களிலும் குடை பிடித்துக் கொண்டிருக்கும் மரங்களின் நடுவே காணப்படும் சரிவான பாதையில் நடந்து செல்லும் சிறிது நேரத்திலேயே நாம் புரிந்துகொள்ளலாம் , சமணர்களின் இந்த இடத்தை ஏன் தேர்வு செய்தார்கள் என்பதை...
அதிக மரங்கள் மட்டுமல்ல, பாறைகளின் மீதும் கருமை தட்டி கிடைக்கும் பாசிகளை பார்க்கும்போது, இந்த இடத்திற்கு நீர்மேகங்கள் அடிக்கடி வந்து குடியேறும் என்பதையும் உணர்ந்து கொள்ளலாம்...
அழகிய பாதை முடியும் இடத்தில் குறுகிய பாதை , அதற்குமேல் வழியில்லை என்று நினைக்கும் அளவிற்கு மிகக் குறுகிய பாதை... அதை நெருங்க நெருங்க உள்ளிருந்து காற்று பலகாட்டு மலர்களின் வாசத்தை சுமந்து கொண்டு வேகமாக அந்தப் பாதையில் வந்து நம்மை கிறங்கடிக்கும்.... நம்மையறியாமல் புன்னகையோடு அந்த பாதையை கடக்கும் பொழுது, பரந்து விரிந்த ஓரிடம் , அருகில் தடாகம், தடாகத்தை அடுத்து மிகப் பெரிய பள்ளத்தாக்கு, கண்ணுக்கெட்டிய தூரம் வரை மலைகளும் மலைகளில் பச்சை பசேலென மரங்களும் நம் கண்களை அகலமாக விரிக்க வைக்கின்றது...
கி மு நான்காம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசை நிறுவிய மாமன்னர் "சந்திரகுப்த மௌரியர்" (கி மு 322 - 297 ) தனது குருவான "பத்ரபாகு" என்ற சமண முனிவருடன்
வெள்ளைக்குளம் என்றும், "சரவணபெலகுளா" என்றும் அழைக்கப்படும் கருநாடகத்தில் உள்ள மலையில் வந்து துறவு வாழ்க்கையை மேற்கொண்டு சமணத்தை தெற்கில் பரப்புகிறார்..... அவருடன் வந்த சீடர்களில் ஒருவரான "விசாகா" என்பவர் மேலும் தெற்கு நோக்கி வந்து இந்த எழில் கொஞ்சும் மலையைத் தேர்ந்தெடுத்து இங்கிருந்து பாண்டிய , சேர நாடுகளில் சமணத்தைப் பரப்பினார்கள் என்ற செய்தி ஒன்றும் உலவுகிறது.
இந்தப் பகுதியில் மூன்று முக்கியமான இடங்கள் உள்ளது, அவற்றில் ஒன்று பாறைகளில் குடையப்பட்ட பல்வேறு தீர்த்தங்கரரின் தத்ரூபமான உருவங்கள் , அவர்களும் கின்னரர்களும், யக்ஷர்கள், யக்ஷட்சிகளுடன் , அவர்களின் வாகனங்களுடனும் புடை சூழ்ந்து காணப்படும் அருமையான சிற்பங்களை இவ்விடத்தில் காணலாம்...
இரண்டாவது மூன்று கருவறைகள் கொண்ட ஒரு கோயில், அவற்றில் ஒன்றில் வர்த்தமான மகாவீரரும், மற்றொன்றில் பாசுபத நாதரும், மூன்றாவதாக பகவதி அம்மன் சிலையும் உள்ளது. ஆனால் இதை பார்க்கும்போது பிற்காலத்தில் இணைக்கப்பட்டதாகவே தோன்றுகிறது.
இந்த கருவறையின் முன் காணப்படும் பெரிய மண்டபம், பலவகை வேலைப்பாடுகளுடன் கூடிய அற்புதமான தூண்களை கொண்டு அமைந்திருப்பதோடு மட்டுமல்லாமல் , தூண்களில் காணப்படும் புடைப்புச் சிற்பங்கள் பல்வேறு காலகட்டங்களில் கலவையாக காணப்படுகிறது.
மூன்றாவது மேற்கு நோக்கி அமைந்துள்ள இந்தக் கோயில் எதிரே உள்ள இயற்கையான தடாகம், மேகங்களின் இந்தக் குளத்தை வற்ற விடுவதேயில்லை...
ஆறாம் நூற்றாண்டில் விசித்திர சித்தர் சமண சமயத்தில் இருக்கும் பொழுது மிகச் செல்வாக்குப் பெற்றிருந்த சமண சமயம், ஏறக்குறைய அதே காலத்தில் நெடுமாற பாண்டியன் காலத்திலும் செல்வதாகவே இருந்து, அதாவது தருமசேனர் என்னும் வாகீசர் சமணத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறி, சைவ நெறிகளை பரப்பிய போது மகேந்திர பல்லவரும் சைவத்தை தழுவினார் , அதேபோன்று நெடுமாற பாண்டியன் சமண சமயத்திலிருந்து திருஞானசம்பந்தர் மூலம் சைவத்தை தழுவிய என்பதும் நாம் அறிந்த ஒன்று , அந்த காலகட்டத்திற்கு பிறகு சமணத்தின் வீழ்ச்சியும் , சைவ சமய எழுச்சியும் ஏற்பட்டதற்குப் பிறகு இந்த இடம் தன்னுடைய சிறப்பை இழந்திருக்கும் அல்லது சைவ சமயத்தின் தாக்கம் இந்த இடத்திலும் இருந்திருக்கும் என்று ஊகிக்கலாம்.
2300 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றை பதித்துள்ள இந்த இடத்தை,
இயற்கை அன்னையின் நெருங்கிய அணைப்பில் இருக்கும் இந்த இடத்தை,
நாம் எளிதாக கடந்து சென்று விட முடிவதில்லை .
மீண்டும் ஒருமுறை இந்த இடத்தை நடுநிசியில் முழு பவுர்ணமி நிலவில் , தடாகத்தின் அருகில் அமர்ந்து , முழு மதியை பிரதிபலிக்கும் தடாகத்தின் நீருடன் , ஈரமான பன்னீரை சுமந்துவரும் காற்றுடன் , இரவில் ஒலி எழுப்பும் உயிரினங்களோடு நானும் ரசிக்க விரும்புகிறேன்
இப்போது மட்டுமல்ல பல ஆயிரம் காலங்கள் இது இப்படியே வனப்புடன் இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை...
சமயங்களும் மக்களின் பழக்க வழக்கங்களும் எப்படித்தான் மாறினாலும் இயற்கை அன்னை எப்பொழுதும் மாறுவதில்லை
சிதறால் மலை செல்லும் வழி
சமணர் நினைவிடத்திற்கு செல்லும் நுழைவாயில்
இந்தக் குறுகிய வழி வழியாக வரும் காற்று சொல்ல முடியா பரவசத்தை நம் மனதில் ஏற்படுத்தி விடுகிறது
நேமிநாதர் 22ஆவது தீர்த்தங்கரர்
பல்வேறு தீர்த்தங்கரர்கள் அமர்ந்த நிலையில் , கடைசியாக நேமிநாதர்
மகாவீரர் 24வது தீர்த்தங்கரர்
கோயிலின் எதிரே இயற்கையாக அமைந்துள்ள நீர்த்தேக்கம்
கோவிலின் நுழைவாயிலில் முன்னே உள்ள பலிபீடம்
கர்ப்பகிரகத்தில் உள்ள தீர்த்தங்கரர் மகாவீரர் திரு உருவச்சிலை
பாவை விளக்கு அல்லது பகவதி அம்மன் ???
கர்ப்பகிரகத்தில் உள்ள பார்சுவநாதர் சிலை
பார்சுவநாதர்
முயல் போல ஒரு உருவம் என்னவென்று சரியாக தெரியவில்லை. முயல் மட்டுமல்ல இங்குள்ள தூண்களில் ஆமை , யானை, பாம்பு போன்ற விலங்குகளும் காணப்படுகின்றது
மகாவீரர்
மோகினியிடம் தன்னை மறந்து நிற்கும் முனிவர்
முன் மண்டபத் தூண்கள்
தூண்களில் காணப்படும் வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள்
புடைப்புச் சிற்பமாக தீர்த்தங்கரர்கள்
பார்த்திபன் தடயங்களை தேடியபோது....
வரலாற்றுத் தடயங்களை தேடும்போது எவ்வளவு கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர்த்தும் படம்
தீர்த்தங்கரர் மற்றும் யட்க்ஷி
பாறைகளிலும் வேர் விட்டு வளரும்
சமணத்தை தழுவாமல் தழுவி நிற்கும் சைவர்....