திருஅயனிஸீவரமுடைய நாயனார்,
வழுவூர்,வந்தவாசி
தடாகத்தில் புனலுடன் காலையிலிருந்த பின்பனி லேசாக பிரிய மனமில்லாமல் விடைபெற்றுக் கொண்டிருக்க,
வாசமிக்க மண்ணின் ஸ்பரிசத்தில் மெய்மறந்து புல்லின் பரவசத்தை கண்டு புள்ளினங்கள் பாடி களித்துக் கொண்டிருக்க, இந்த அழகை காண மெல்லமெல்ல கதிரவன் கண் திறக்க, பனை மரங்களின் பாதுகாப்பில் இருந்த ஏரிக்கரையின் மீது பசுக்களும், காளைகளும் , புதிதாக பிறந்த கன்று குட்டிகள் செய்யும் லீலைகளைக் கண்டு கொண்டு வரிசையாக வரிசையாக வந்து கொண்டிருந்தது.... ஒருவேளை அவைகளும் புனலாட வருகின்றதோ....
ஆமாம் இன்று மாட்டுப்பொங்கல் உழவர்களுக்கு நண்பனான, எங்கள் உறவுகளோடு கலந்து போன செல்வங்களுக்கு படையல் வைப்பதில், எங்களுக்கு எப்பொழுதுமே அதிகமான ஆர்வம்தான்..... குளித்து முடித்த கையோடு அவைகளுக்கு ஒப்பனை களும் நடக்கும்..... இந்த எதார்த்த நாடகத்தில் குளித்து வந்த நானும் அதிக நேரம் மெய் மறந்து தான் போனேன்.....
குளித்துமுடித்து ஏரிக் கரையின் அருகில் , ஊரின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள, எங்கள் குலதெய்வமான முத்துநாயகி அம்மன் திருக்கோவிலில், கல் பிரபையுடன் அழகாக வீற்றிருந்த அன்னையை வணங்கிவிட்டு கிழக்கு நோக்கி பிரம்மபுரீஸ்வரரை வழிபட செல்லும் வழியில், வலதுபுறத்தில் சாலையின் அருகே தனியாக வீற்றிருக்கும் விஷ்ணு துர்க்கையை துதித்துவிட்டு, ஊரில் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் தெற்கு வாயில் வழியாக உள்ளே நுழைந்ததும் நேராக நம்மை வரவேற்று
அருள்பாலிக்கிறார் பச்சை கல்லினாலான விநாயகமூர்த்தி.... அருகில் சிதிலமடைந்த பைரவர், விநாயகர், அழகிய கல்யானை மற்றும் தக்ஷிணாமூர்த்தி சிலைகளும் காணப்படுகின்றது. இவற்றைக் கடந்து உள்ளே நுழையும்போது பல சுவாரஸ்யமான புராணக் கதைகளை தாங்கியிருக்கும் ஒரு பெரிய தூண் மண்டபம். இந்த மண்டபத்தின் வடக்குப் பகுதியில் காமரசவல்லி அன்னை ஆவுடையில், தெற்கு நோக்கி நின்ற நிலையில், இரண்டு துவார பாலகிகளுடன் அருள்பாலிக்கின்றார். மண்டபத்தின் மேற்கு பகுதியில் பிரம்மபுரீஸ்வரரின் பிரதான நுழைவாயிலில் நுழைந்ததும் மகா மண்டபத்தை காத்து நிற்கும் துவார பாலகர்கள் மற்றும் நர்த்தன கணபதி மற்றும் முருகன் ஆகியோர்களின் அழகிய சிற்பங்களைக் காணலாம் ....
உற்சவர் சிலைகளை தாங்கி நிற்கும் மகாமண்டபத்தில் உள்ள அர்த்த மண்டபத்தை கடந்து கர்ப்பகிரகத்தில் சதுர ஆவுடையில் எட்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த பிரம்மபுரீஸ்வரர் லிங்க ரூபத்தில் கிழக்கு நோக்கி விற்றிருக்கிறார்.... பிற்கால சோழர்கள் முதல், சம்புவராயர்கள் விஜயநகரப் பேரரசர்கள் , நாயக்க மன்னர்கள் என தொடர்ந்து பல காலம் வரை முக்கியத்துவம் பெற்றிருந்த வழுவூர் கிராமத்தின் பல கதையை தாங்கி நிற்கின்றன கர்ப்பகிரக சுவர்கள். கர்ப்ப கிரகத்தை சுற்றி அமைந்துள்ள சுற்றுப்பாதை ஒரு வரிசையிலான தூண்களை கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல், வழக்கமான கோஷ்ட தெய்வங்கள், சப்த மாதர்களின் சிலைகளும், வள்ளி தெய்வயானை சமேத முருகன் சிலைகளும் காணப்படுகின்றது.
ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் திரிபுவன தேவன் அதாவது மூன்றாம் குலோத்துங்க சோழ தேவரின்(கிபி 1178-1216)
17 ஆம் ஆட்சியாண்டில்
புரவரிநல்லூர் கிராமத்தில் கோயில் நிவந்தங்கள் வழங்கப்பட்டமைக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டமையும்,
செங்கோணி வீரப்பெருமாள் என்கின்ற குலோத்துங்க சோழ சம்புவரையர் செய்த புனரமைப்புப் பணிகளையும் ஆவணப் படுத்தியுள்ளனர்.
மேலும் அதே ஆட்சியாண்டில் அம்மையப்ப சாவகர் என்பவர் நந்தா விளக்கு எரிக்க நிவந்தம் அளித்துள்ளார்.
27ஆம் ஆட்சியாண்டு, (பாண்டியன் முடித்தலைக் கொண்டு மதுரையை ஆண்ட சோழதேவர்)
வெண்குன்ற கோட்டத்து, ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து, இரும்பேடு நாட்டின் வழுவூர் கோயில் வீற்றிருக்கும் திரு அயனிஸீவரமுடைய நாயனார் கோவிலில் ஆறு நந்தா விளக்கெரிக்க தானம் வழங்கியதை ஆவணப் படுத்தியுள்ளனர்.
இவரது முப்பத்தி எட்டாம் ஆட்சியாண்டில் புத்துளன் பெரியான் சம்புவரைய பல்லவரையன் என்பவரால் இத்திருக்கோயிலுக்கு பணம் தானமாக அளிக்கப்பட்டுள்ளது.
வீரராஜேந்திர சோழ தேவரின் 7 ஆம் ஆட்சியாண்டில் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து, காழியூர் கோட்டத்து , மாகரல் நாட்டு, ஆர்ப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் திருப்பள்ளிஎழுச்சிக்கு அமுது படைக்க நிலதானம் வழங்கியுள்ளார். மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கு வீர ராஜேந்திரன் என்ற ஒரு பெயரும் உண்டு , ஆனால் அவர் காலத்தில்தான் இந்த நிவந்தம் வழங்கப்பட்டுள்ளதா!! என்பது தெரியவில்லை...
ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் ராஜராஜ சோழ தேவரின் (கிபி 1216 - 1256 )
23 ஆம் ஆட்சியாண்டில் வழுவூர் திருஅயனிசுரமுடைய நாயனாருக்கு நந்தா விளக்கெரிக்க 22 காசுகள் அடியார் ஒருவர் தானம் அளித்துள்ளார். இருபத்தி மூன்றாம் ஆட்சியாண்டு என்பதால் இவர் மூன்றாம் இராஜராஜசோழனாகக் கருதலாம்.
திருபுவனச் சக்கரவர்த்தி குலசேகர தேவரின்
(கிபி 1268 - 1285) ஐந்தாம் ஆட்சியாண்டில் , சறுக்கிப்பாரு கிராமத்தினர் திருஅயனிசுரமுடைய நாயினார் திருக்கோவிலுக்கு இரும்பை நாட்டைச் சேர்ந்த சாத்தூர் என்னும் கிராமத்தை தானம் வழங்கியுள்ளனர்...
விஜயநகரப் பேரரசின் சங்கம மரபுச் சார்ந்த வீரவிஜய புக்கராயன்( கிபி 1422-1424) என்பவர் காலத்தில் இந்த ஊர் காலிகாதின்ட சோழ நல்லூர் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.
புஜபல பராக்கிரம வீரர் நரசிங்க ராயரின் மகனான அச்சுத தேவராயர்
(கிபி 1529-1542) காலத்திலும் இந்த திருக்கோவில் பல நிவந்தங்களை பெற்றுள்ளது.
இவரை அடுத்து ஆட்சிக்கு வந்த சதாசிவராயர் காலத்தின்
(கிபி 1542 - 1570) நிவந்த கல்வெட்டு ஒன்று காமரசவல்லி அம்மன் திருக்கோவிலின் சுற்றுச்சுவரில் காணப்படுவதால், அம்மன் கோவில் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னால் நிறுவப் பட்டுள்ளது என்பதையும் அறியலாம்...
குளத்தின் அருகே அமைந்த கல் பலகையில் நிருபதுங்க போத்தரையரின் ஆறாம் ஆட்சியாண்டில் வழுவூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் குலத்திற்கு தூம்பு அமைத்துக் கொடுத்துள்ளார் என்ற கல்வெட்டுக் காணப்படுகிறது...
வழுவூர் மக்களின் பிரதான தொழிலான கைத்தறிகான வரி மற்றும் பல வரிகளையும் மாற்றி அமைக்கப்பட்டதற்கான கல்வெட்டும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது....
கோவிலை விட்டு வெளியே வந்ததும் விசித்திரமான ஒலிகள் காதுகளை துளைக்க, திடீரென்று மூளையில் சில வித்தியாசமான உருவங்கள் தென்பட்டன, நீண்ட கனவு கலைந்தது போல் ஒர் உணர்வு, ஆஹா இது என்ன என்று யோசிக்கும் போதுதான் புரிந்தது நான் எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் பயணித்து விட்டேன் என்று....
நான் முன்பு பார்த்த மாட்டுவண்டிகள் இல்லை ஒரு சில மாடுகளை அலங்காரம் செய்துகொண்டு அப்புறமும் இப்புறமும் போய்க்கொண்டிருந்தது ஆனால் கிராமத்துப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நிறைய பேர் கூடி அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள் அதுமட்டுமல்லாமல் டிராக்டர்களில் அணிவகுப்பும் அதிகமாகி இருந்தது, ஓ.....நாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம் அல்லவா.....
கைக்கோள வகுப்பைச் சார்ந்தவர்கள் போர்ப் படைகளில் அங்கம் வகித்து இருக்கின்றார்கள் என்று நாம் அறிந்ததே.... படைகளில் அங்கம் வகிக்கும் போர்வீரர்கள் இருக்கும் இடத்தில் அரிகண்டம் அல்லது நவகண்டம் சிலைகள் இருப்பது எதார்த்தமான விஷயம் இந்த ஊரில் ஏறக்குறைய எட்டு வருடங்களுக்கு மேலாக அத்தகைய சிலை ஏதேனும் உள்ளதா என்று தேடி திரிந்து இருக்கிறேன். ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் எதார்த்தமாக இந்த பிரம்மபுரீஸ்வரர் கோவிலை பராமரிக்கும் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அருகில் பொன்னியம்மன் கோவில் உள்ளது அதை சென்று பார்த்து வாருங்கள் என்று கூறினார்.... அந்த இடமும் மிகவும் ரம்மியமாக இருந்தது... இந்த வருடம் தை மாதத்திலும் நல்ல மழை பெய்ததால் ஏரியில் கலங்கள் விழுந்து கோவிலுக்கு மிக அருகில் சென்று கொண்டிருந்தது.... நாங்கள் செல்லும்போது, கோவில் பூட்டப்பட்டு இருந்தாலும், நான் எதிர்பார்த்த ஒன்று கிடைத்து விட்டது அரிகண்ட சிலை , அதை பார்க்கும் போது தான் எவ்வளவு பெருமிதம்... நம் முன்னோர்களின் அர்ப்பணிப்பு, தைரியம் , விசுவாசம் அத்தனையையும் நமக்கு உணர்த்துகிறது இந்த ஒற்றைச் சிலை அவர்களின் வீரமிக்க திருப்பாதங்களை பணிகிறேன்.....
பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் வழுவூர்
திருஅயனிஸீவரமுடிய நாயனார்
காமரசவல்லி அன்னை
தென்கிழக்கில் அமைந்துள்ள திருக்குளம்
திருக்கோவிலின் தெற்கு புறத்தில் நுழைவாயிலில் ஒரு பாகம்
பச்சைக் கல்லால் ஆன கரிமுகன் மற்றும் வேழம்
பைரவர்
நர்த்தன கணபதி
துவாரபாலகர்
துவாரபாலகர்
திரிபுவனச் சக்கரவர்த்திகள் திருபுவன தேவர்....
கர்ப்பக்கிரகத்தின் பின்புறத்தில் அமைந்துள்ள சைவ சமயக் குரவர்கள் மற்றும் அன்னையர் எழுவர்
சப்த கன்னிகள்
வெற்றிக்களிப்பில் துர்கா தேவி
பூதகியிடம் மாட்டிக்கொண்ட கோகுலக்கண்ணன் , இல்லை இல்லை கோகுல கண்ணனிடம் மாட்டிக்கொண்ட பூதகி......
மான் ஈன்றெடுக்கும் பெண் மகவு
வேடுவ தலைவனிடம் பெண் குழந்தை
தினைப்புனம்
தினைப்புனம் காத்து நிற்கும் வள்ளி
குறும்பு செய்யும் முதியவர்
யானைக்கு பயந்து அழகனை அணைக்கும் வள்ளி
வள்ளி திருமணம்
மார்க்கண்டேய புராணம்
லிங்கத்தை அணைத்து நிற்கும் காமாட்சி அன்னை
தழுவுதல் இனிது
அர்ஜுனன் தபசு
திண்ணனின் காதல்
அரிகண்டம், இந்த வீர புருஷனின் பாதங்களைத் தொட்டு வணங்க முடியாதது.... சிறு வருத்தம்....
கொப்பளிக்கும் காமம்
வேடுவ தலைவனான நம்பிராஜனுக்கும் அவன் மனைவிக்கும் பெண் குழந்தைகள் இல்லை, வருத்தமுற்ற அவன் பெண் குழந்தைக்காக இறைவனை வேண்டுகிறார்,மாய சக்தி படைத்த சிலமுகி என்ற முனிவரின் அருளால், மானின் வயிற்றில் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது , அந்தக் குழந்தைக்கு வள்ளி என்று பெயரிட்டு சீராட்டி வளர்க்கின்றனர் , பருவமடைந்த வள்ளி அவர்களின் குல வழக்கப்படி தினைப்புனம் காக்கிறாள் , அப்பொழுது அங்கு வந்த வயதான நபர் ஒருவர் அவள் மீது காதல் கொண்டு, அவளை வம்புக்கு இழுக்கிறார். ஒன்றும் பலனில்லை , அந்த வயதானவர் ஏதோ ஒரு மந்திரம் கூற ஒரு யானை வருகிறது, என் அந்த வேழத்தைக் கண்டு பயம் கொண்ட வள்ளி பயந்து நடுங்கி வயதானவரை அணைக்க , வயதான தோற்றம் காற்றில் கரைந்து பேரழகன் ஒருவனை அனைத்து இருப்பது வள்ளிக்கு தெரிகிறது , நாணாமுறுகிறாள்... கரி மறைந்து கரிமுகன் தோன்ற , பேரழகன் முருகன் என்று அறிய வள்ளி திருமணம் சுபமாக நடந்தேறுகிறது..... ஒரு பெண்ணின் பிறவி முதல் திருமணம் வரை உள்ள இந்த நீண்ட நிகழ்ச்சியை ஒரு கல்லில் அமைந்த துணியினால் விளக்கியுள்ளனர் எனது அருமை சிற்பிகள்.....