Sunday, November 29, 2020

வரலாற்றுப்_பயணங்கள் :83 திருக்கோழம்பியமுடைய மகாதேவர் ,திருக்கோழம்பியம்.

 திருக்கோழம்பியமுடைய மகாதேவர் ,

திருக்கோழம்பியம்.
பனை மரத்திற்கு தலைகனம் கொடுத்த வான்குருவியின் கூடுகளையும், நிலமகளின் செல்லப்பிள்ளையான நாணத்தினால் தலை கவிழ்ந்த பொன்வண்ண நெற்கதிர்களையுங் காணும் பொழுது ,பயணித்து களைத்திருந்த நமது சோர்வு, காட்டுப்பூனையைக் கண்ட பச்சைக்கிளி நொடிப்பொழுதில் பறந்து மறைவதைப் போல, மறைந்து புத்துணர்ச்சி அடையச் செய்து விடுகிறது....
திருக்கயிலாயத்தில் இயற்கை வனத்தில் வீற்றிருக்கும் மகாதேவரே , சோலைகள் சூழ்ந்த கோழம்பியத்தின் இயற்கை எழிலில் மயங்கி கோவில் கொண்டுள்ளார் என அப்பர் பெருமானும்,
மெல்லிய தனங்களை உடைய உமாதேவியை இடப்பாகத்தில் வைத்த உமையொருபாகன் காவிரிக் கரையின் வனப்பில் குடி கொண்டுள்ளான் என்று ஞானசம்பந்தரும் கோழம்பத்தில் குடிகொண்டுள்ள இறைவன் மீது பகிர்ந்து பதிகம் பாடியுள்ளனர் .
மாமன்னர் உத்தம சோழர் காலத்தில் செம்பியன் மாதேவியார் கற்றளியாக எடுப்பித்த திருக்கோவில்களில் இந்த கோவிலும் ஒன்றாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது....
உத்தம சோழரின் 16 வது ஆட்சி ஆண்டில் அவரின் மனைவிகளில் ஒருவரான ஆரூரன் பொன்னம்பலத்தடிகள் என்பவரின் மகளாக திருக்கோழம்பமுடைய மகாதேவியார் மதுராந்தகன் உமாஹட்டராகியாருக்கு ,( அதாவது மகாதேவரின் மனைவியை அரசரின் மனைவிக்கு மகளாக பாவித்து ) முப்பத்தஞ்சு கழஞ்சு பொன் கொடுத்து நிலம் வாங்கி இறையிலி நிலமாக கொடுத்து திருநொந்தா விளக்கேற்ற நிவந்தம் அளித்து கல்வெட்டாக சாசன படுத்தியுள்ளனர்....
மேலும் கோப்பரகேசரி ஆட்சியாண்டில் மற்றுமொருவர் 14 காசு கொடுத்து நிலம் வாங்கி அந்த வருமானத்தை விளக்கேற்ற நிவந்தம் அளித்துள்ளனர்....
மேலும் பல கல்வெட்டுகள் புனரமைப்பில், வரலாறு இழந்து போனது என்பது வருத்தமான உண்மை, குலோத்துங்கன், ராஜராஜன்,ராஜேந்திர சோழன், போன்றவர்களின் கல்வெட்டுகள் இருந்ததாக அறியமுடிகின்றது... திருவாவடுதுறை, திருவாலங்காடு தெற்கு போன்ற ஊர்களின் அருகிலுள்ள இந்தத் திருக்கோவில் , நிச்சயமாக சோழர்கள் காலத்தில் மிக முக்கியமானதொரு திருக்கோவில் ஆகவே இருந்திருக்க வேண்டும்...
கல்வெட்டுகள் மறைந்தாலும் இங்குள்ள சிலைகள் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் நம் பாதத்தின் வேகத்தைத் தேக்கி நிறுத்தும் என்பதை உள்சென்று கருவறையை சுற்றி வரும்போது அறியலாம்.
பட்டப்பகலிலேயே சில்வண்டுகளின் ரீங்காரம் காதில் இசை மீட்டும் ஓசையை கேட்கும் விதமாக அடர்ந்த சோலைகள் இன்றளவும் சூழப்பட்டுள்ள இந்த திருக்கோவிலின் மதில் சுவருக்கு உள்ளே , நந்தி மண்டபம் ,கொடிமரம் கடந்து செல்லும்போது மூன்று அடுக்கு கோபுரம் வாயிலாக அமைந்துள்ளது.
இந்த நந்தி மண்டபத்திற்கு வடக்குப் புறத்தில் சௌந்தரவல்லி தாயார் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார்.
கோவிலின் கர்பக்கிருகத்தில் திருக்கோழம்பியமுடைய மகாதேவர் சுயம்பு மூர்த்தியாகவும், கர்ப்பகிரகத்திற்கு அடுத்து அர்த்த மண்டபமும், மகா மண்டபமும் , மகாமண்டபத்தின் வாயில்களை சோழர் கட்டடக் கலைக்கே உரித்தான அழகிய வடிவமைப்புடன் கூடிய துவாரபாலகர்கள் காவல் புரிகின்றனர்.
சோழர் காலத்தின் அற்புதமான கற்றளிகளில் ஒன்றான இந்த திருக்கோவிலின் கோஷ்டத்தில் சற்று அதிகமாகவே சிற்பங்களை காண முடிகிறது. அதாவது கோஷ்டத்தின் தெற்குச் சுவரில் விநாயகர், நடராஜர் ,அகத்தியர் மற்றும் தக்ஷிணாமூர்த்தி ஆகியோர்கள் தங்கள் பரிவாரங்களுடன் காணப்படுவதுடன் ஒவ்வொரு சிலையின் மகர தோரணத்தில் நடராஜ மூர்த்தியின் வெவ்வேறு பாடல் காட்சிகளும் புடைப்புச் சிற்பங்களாக காணப்படுவதுடன் அகத்தியருக்கு அருகில், சில மாந்தர்கள் சிவனை வழிபடுவது போல ஒரு புடைப்புச் சிற்பமும் உள்ளது...
கோஷ்டத்தின் மேற்குப் புறத்தில் அடி முடி காணாத அருணாச்சலேஸ்வரரின், முடியையும் , அடியையும் காண அன்னமாகவும் வராக மூர்த்தியாகவும் வடிவமைத்த பிரம்மா மற்றும் விஷ்ணமூர்த்தியின் சிற்பமும்,
வடக்குப் புறத்தில் நான்முகன், ரிஷபத்தில் சாய்ந்த நிலையில் உள்ள அர்த்தநாரீஸ்வரர், எருமையின் மீது ஒய்யாரமாக கால் பதித்து நிற்கும் மகிஷாசுரமர்த்தினி, மற்றும் பிட்சாடனர் ஆகியோர்களின் சிற்பத்தையும் கண்டுகளிக்கலாம்.
மேற்குப் புறத்தில் அமைந்துள்ள விநாயகர், பல்வேறு லிங்க ரூபங்கள், வள்ளி தெய்வயானை சமேத முருகன், கஜங்கள் அணைப்பில் உள்ள வேழத்திருமகள் சிறு சிறு கோயில்களில் விட்டிருக்கின்றனர்....
இந்த திருக்கோவிலின் புராணக் கதைகள் மிகவும் சுவாரசியமானது... இந்தக் கோவிலின் கருவறை லிங்கத்தின் ஆவுடையில் காணப்படும் ,சில கால் தடங்கள் பசுக்களின் கால்தடம் போல உள்ளது என்று புராணங்கள் சொல்கின்றது என்றும் , அதனாலேயே இந்த ஊருக்கு திருக்கோழம்பியம் என்ற பெயர் வந்தது என்றும் சொல்லப்படுகின்றது...


                                                     வான்குருவியின் கூடு   

                     திருக்கோழம்பியம் மகாதேவர் திருக்கோவிலில் நுழை வாயிலில் நுழைந்ததும் காணப்படும் மரங்களடர்ந்த 3 நிலை கோபுரமும், பலிபீடமும் நந்தியும்...


துவாரபாலகர்கள்

திண்டி முண்டி காவல் காக்க கருவறையில் வீற்றிருக்கும் திருக்கோழம்பியமுடைய மகாதேவர்🥰🥰


கோஷ்டத்தில் அமைந்திருக்கும் விநாயகர், நடராஜர் மற்றும் அகத்தியர் புடைப்புச் சிற்பங்கள்.

உணவு பரிவாரங்களுடன் விநாயகமூர்த்தி

லேசான புன்முறுவலுடன் முயலகன் மீது ஒரு காலை தூக்கி தாண்டவமாடும் தாண்டவமூர்த்தி...

சிஷ்யர்களுடன் குறுமுனி

காவல் பரிவாரங்களுடன் மகா தேவரை வணங்கி நிற்கும் இவர் இந்தத் திருக்கோவிலுக்கு நிவந்தம் அளித்த அரச குடும்பத்தினர் ஆக இருக்கலாம்...

குரு தட்சிணாமூர்த்தி

அடிமுடி இல்லை அண்ணாமலையார், நான்முகன் மற்றும் விஷ்ணு மூர்த்தி
முகத்தின் இடது புறத்தில் ஏன் இந்த குறுநகை கணவனின் பாதி உடலைப் பெற்றதால் வந்த ஆனந்த புன்னகையும் இது, உமையாளின் மனதை உள்வாங்கிய சிற்பிகள் நாம் வணங்கத் தக்கவர்கள் தான். பாதத்திலிருந்து தலை வரை உள்ள மாற்றங்களை கவனத்துடன் செதுக்கியுள்ளனர் இல்லையில்லை படைத்துள்ளனர்..... சாமரம் வீசும் பெண்களின் குறுஞ்சிற்ப்பங்களும் அழகு
தாயே என் அரசனும், என் நாடும் , என்னைச் சார்ந்து வரும் நலமுடன் வாழ என் தலையை நானே உனக்கு அர்ப்பணிக்கிறேன் இதோ ஏற்றுக்கொள் என்று பணியும் பக்தனை அன்புடன் ஏற்றுக் கொண்டிருக்கும் மகிஷாசுரமர்த்தினி.....

ஆண்களில் அழகன் முருகன் என்றும் ராமன் என்றும் கூறுவார் இந்த பிச்சாடனர் அழகை காணாதோர்..... ரிஷிபத்தினிகள் கிறங்கடித்த பேரழகன் அல்லவா....

விநாயகமூர்த்தி

வள்ளி தெய்வயானை சமேத முருகக்கடவுள்

கமலத்தில் வீற்றிருக்கும் வீரத்திருமகள் கரத்தில் உள்ள தாமரைக்கு நீர் சொரியும் களிறுகள்




இன்னும் சற்று கோபத்துடன் காணப்படும் சண்டிகேஸ்வரர், ஐயா கோபத்தைத் தணித்துக் கொள்ளுங்கள் தாங்கள் ஆட்கொள்ளப்பட்டு விட்டீர்கள்

பைரவர்

ஏன் இந்தப் புன்னகை இறைவனை சதா கண்டுகொண்டே இருப்பதாலா

திருக்கோழம்பியம் மகாதேவர்

சௌந்தரநாயகி அன்னை

குலோத்துங்கன் கல்வெட்டு

பயணத்தினால் பெற்ற பேறு




அந்தி நேரத்தில் கதிரவன் கடலிலோ அல்லது மலையிலோ ஒளிந்துகொள்ளும் அற்புதமான காட்சிகளை நாம் கண்டிருப்போம் , ஆனால் சோழநாட்டில் வயல்வெளிகளில் சூரியன் தஞ்சம் புகும் அழகே தனி அழகு , அதாவது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வயல்வெளிகளில்....

திருவாவடுதுறையில் இருந்து திருக்கோழம்பியத்திற்கு செல்லும் வழியில் , சாலையின் ஓரத்தில் காணப்படும் மாந்தன் மாந்தியுடன் காணப்படும் தவைத்தாய்....


Wednesday, June 24, 2020

வரலாற்றுப்_பயணங்கள்:82:திருச்சிரமணத்து மலை-சிதறால்

திருச்சிரமணத்து மலை என்கிற
சிதறால் மலை.
மேற்குத் தொடர்ச்சியின் வனப்பு தெற்கிலிருந்து சிறிதுசிறிதாக தனா பிரம்மாண்டத்தைக் கூட்டிக் கொண்டே வடக்கு நோக்கி வளர்ந்து கொண்டும் , நெளிந்து நடை பழகிக் கொண்டும், ஒய்யாரத்தைப் பிரதிபலித்தாலும் , இந்த அழகிய மலைத்தொடர் ஒவ்வொரு இடத்திலும் பல்வேறு பரிமாணங்களைப் பெற்று இயற்கையின் ஒட்டுமொத்த அழகையும், வசீகரத்தையும் தனக்குள்ளே புதைத்து வைத்துக் கொண்டிருக்கின்றது.
தென்மேற்குப் பருவக்காற்றின் கார்மேகங்கள் அனைத்தையும் ஆசையாக தனக்குள்ளே உறிஞ்சி , வளப்படுத்திக் கொள்ளும் இந்த மலைத்தொடரின் தெற்கு மூலையில் உள்ள ஒரு அழகிய இடம் சிதறால்...
பொருநை என்னும் தாமிரபரணி ஆறு தழுவி நிற்கும் இந்த சிதறால் மலைக்குன்று ஏறக்குறைய இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிலிருந்தே , இயற்கையில் மூழ்கித் திளைத்து சமணர்களின் வாசஸ்தலமாக இருந்திருக்கின்றது...
பகலிலேயே ராகோழிகளின் மெல்லிய ஓசையும் , பலா மரங்களில் மொய்க்கும் தேனீக்களின் ரீங்காரமும் கேட்குமளவிற்கு அமைதி குடிகொண்டிருக்கும் அற்புதமான வனம் , இரண்டு புறங்களிலும் குடை பிடித்துக் கொண்டிருக்கும் மரங்களின் நடுவே காணப்படும் சரிவான பாதையில் நடந்து செல்லும் சிறிது நேரத்திலேயே நாம் புரிந்துகொள்ளலாம் , சமணர்களின் இந்த இடத்தை ஏன் தேர்வு செய்தார்கள் என்பதை...
அதிக மரங்கள் மட்டுமல்ல, பாறைகளின் மீதும் கருமை தட்டி கிடைக்கும் பாசிகளை பார்க்கும்போது, இந்த இடத்திற்கு நீர்மேகங்கள் அடிக்கடி வந்து குடியேறும் என்பதையும் உணர்ந்து கொள்ளலாம்...
அழகிய பாதை முடியும் இடத்தில் குறுகிய பாதை , அதற்குமேல் வழியில்லை என்று நினைக்கும் அளவிற்கு மிகக் குறுகிய பாதை... அதை நெருங்க நெருங்க உள்ளிருந்து காற்று பலகாட்டு மலர்களின் வாசத்தை சுமந்து கொண்டு வேகமாக அந்தப் பாதையில் வந்து நம்மை கிறங்கடிக்கும்.... நம்மையறியாமல் புன்னகையோடு அந்த பாதையை கடக்கும் பொழுது, பரந்து விரிந்த ஓரிடம் , அருகில் தடாகம், தடாகத்தை அடுத்து மிகப் பெரிய பள்ளத்தாக்கு, கண்ணுக்கெட்டிய தூரம் வரை மலைகளும் மலைகளில் பச்சை பசேலென மரங்களும் நம் கண்களை அகலமாக விரிக்க வைக்கின்றது...
கி மு நான்காம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசை நிறுவிய மாமன்னர் "சந்திரகுப்த மௌரியர்" (கி மு 322 - 297 ) தனது குருவான "பத்ரபாகு" என்ற சமண முனிவருடன்
வெள்ளைக்குளம் என்றும், "சரவணபெலகுளா" என்றும் அழைக்கப்படும் கருநாடகத்தில் உள்ள மலையில் வந்து துறவு வாழ்க்கையை மேற்கொண்டு சமணத்தை தெற்கில் பரப்புகிறார்..... அவருடன் வந்த சீடர்களில் ஒருவரான "விசாகா" என்பவர் மேலும் தெற்கு நோக்கி வந்து இந்த எழில் கொஞ்சும் மலையைத் தேர்ந்தெடுத்து இங்கிருந்து பாண்டிய , சேர நாடுகளில் சமணத்தைப் பரப்பினார்கள் என்ற செய்தி ஒன்றும் உலவுகிறது.
இந்தப் பகுதியில் மூன்று முக்கியமான இடங்கள் உள்ளது, அவற்றில் ஒன்று பாறைகளில் குடையப்பட்ட பல்வேறு தீர்த்தங்கரரின் தத்ரூபமான உருவங்கள் , அவர்களும் கின்னரர்களும், யக்ஷர்கள், யக்ஷட்சிகளுடன் , அவர்களின் வாகனங்களுடனும் புடை சூழ்ந்து காணப்படும் அருமையான சிற்பங்களை இவ்விடத்தில் காணலாம்...
இரண்டாவது மூன்று கருவறைகள் கொண்ட ஒரு கோயில், அவற்றில் ஒன்றில் வர்த்தமான மகாவீரரும், மற்றொன்றில் பாசுபத நாதரும், மூன்றாவதாக பகவதி அம்மன் சிலையும் உள்ளது. ஆனால் இதை பார்க்கும்போது பிற்காலத்தில் இணைக்கப்பட்டதாகவே தோன்றுகிறது.
இந்த கருவறையின் முன் காணப்படும் பெரிய மண்டபம், பலவகை வேலைப்பாடுகளுடன் கூடிய அற்புதமான தூண்களை கொண்டு அமைந்திருப்பதோடு மட்டுமல்லாமல் , தூண்களில் காணப்படும் புடைப்புச் சிற்பங்கள் பல்வேறு காலகட்டங்களில் கலவையாக காணப்படுகிறது.
மூன்றாவது மேற்கு நோக்கி அமைந்துள்ள இந்தக் கோயில் எதிரே உள்ள இயற்கையான தடாகம், மேகங்களின் இந்தக் குளத்தை வற்ற விடுவதேயில்லை...
ஆறாம் நூற்றாண்டில் விசித்திர சித்தர் சமண சமயத்தில் இருக்கும் பொழுது மிகச் செல்வாக்குப் பெற்றிருந்த சமண சமயம், ஏறக்குறைய அதே காலத்தில் நெடுமாற பாண்டியன் காலத்திலும் செல்வதாகவே இருந்து, அதாவது தருமசேனர் என்னும் வாகீசர் சமணத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறி, சைவ நெறிகளை பரப்பிய போது மகேந்திர பல்லவரும் சைவத்தை தழுவினார் , அதேபோன்று நெடுமாற பாண்டியன் சமண சமயத்திலிருந்து திருஞானசம்பந்தர் மூலம் சைவத்தை தழுவிய என்பதும் நாம் அறிந்த ஒன்று , அந்த காலகட்டத்திற்கு பிறகு சமணத்தின் வீழ்ச்சியும் , சைவ சமய எழுச்சியும் ஏற்பட்டதற்குப் பிறகு இந்த இடம் தன்னுடைய சிறப்பை இழந்திருக்கும் அல்லது சைவ சமயத்தின் தாக்கம் இந்த இடத்திலும் இருந்திருக்கும் என்று ஊகிக்கலாம்.
2300 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றை பதித்துள்ள இந்த இடத்தை,
இயற்கை அன்னையின் நெருங்கிய அணைப்பில் இருக்கும் இந்த இடத்தை,
நாம் எளிதாக கடந்து சென்று விட முடிவதில்லை .
மீண்டும் ஒருமுறை இந்த இடத்தை நடுநிசியில் முழு பவுர்ணமி நிலவில் , தடாகத்தின் அருகில் அமர்ந்து , முழு மதியை பிரதிபலிக்கும் தடாகத்தின் நீருடன் , ஈரமான பன்னீரை சுமந்துவரும் காற்றுடன் , இரவில் ஒலி எழுப்பும் உயிரினங்களோடு நானும் ரசிக்க விரும்புகிறேன்
இப்போது மட்டுமல்ல பல ஆயிரம் காலங்கள் இது இப்படியே வனப்புடன் இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை...
சமயங்களும் மக்களின் பழக்க வழக்கங்களும் எப்படித்தான் மாறினாலும் இயற்கை அன்னை எப்பொழுதும் மாறுவதில்லை




 சிதறால் மலை செல்லும் வழி

 சமணர் நினைவிடத்திற்கு செல்லும் நுழைவாயில்


 இந்தக் குறுகிய வழி வழியாக வரும் காற்று சொல்ல முடியா பரவசத்தை நம் மனதில் ஏற்படுத்தி விடுகிறது
 நேமிநாதர் 22ஆவது தீர்த்தங்கரர்
 பல்வேறு தீர்த்தங்கரர்கள் அமர்ந்த நிலையில் , கடைசியாக நேமிநாதர்🥰🥰
 மகாவீரர் 24வது தீர்த்தங்கரர்



 கோயிலின் எதிரே இயற்கையாக அமைந்துள்ள நீர்த்தேக்கம்
 கோவிலின் நுழைவாயிலில் முன்னே உள்ள பலிபீடம்


 கர்ப்பகிரகத்தில் உள்ள தீர்த்தங்கரர் மகாவீரர் திரு உருவச்சிலை
 பாவை விளக்கு அல்லது பகவதி அம்மன் ???
 கர்ப்பகிரகத்தில் உள்ள பார்சுவநாதர் சிலை
 பார்சுவநாதர்

 முயல் போல ஒரு உருவம் என்னவென்று சரியாக தெரியவில்லை. முயல் மட்டுமல்ல இங்குள்ள தூண்களில் ஆமை , யானை, பாம்பு போன்ற விலங்குகளும் காணப்படுகின்றது

 மகாவீரர்
 மோகினியிடம் தன்னை மறந்து நிற்கும் முனிவர்

 முன் மண்டபத் தூண்கள்
 தூண்களில் காணப்படும் வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள்
 புடைப்புச் சிற்பமாக தீர்த்தங்கரர்கள்
 பார்த்திபன் தடயங்களை தேடியபோது....
வரலாற்றுத் தடயங்களை தேடும்போது எவ்வளவு கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர்த்தும் படம்
 தீர்த்தங்கரர் மற்றும் யட்க்ஷி


தர்ம தேவதை என்று சொல்லப்படுகின்ற அம்பிகா யக்ஷட்சியின் ஒரு புடைப்புச் சிற்பம் இங்கு காணப்படுகின்றது, அவளைப் பற்றி ஒரு சுவாரசியமான கதை உண்டு, சமண சமயத்தைச் சார்ந்த இவள் சோமசர்மான் என்று வேதிகனை திருமணம் செய்து கொண்டிருந்தாள். பிரபாந்தரன் , சுமந்தரன் எனும் இரண்டு மகன்கள் உண்டு , ஒருநாள் கணவன் வைசிய குருக்களை அழைத்து வந்து பூஜை செய்ய வேண்டும் அதற்கு தகுந்த ஏற்பாடுகளை செய்ய என்று கூறிவிட்டு குருவுடன் ஆற்றங்கரைக்கு செல்கிறான், பூஜைக்குத் தேவையான அனைத்தையும் தயார் செய்துவிட்டு, உணவையும் தயார் செய்கிறாள் , அந்த சமயத்தில் மாதத்திற்கு ஒரு முறை உணவு உண்ணும் சமணத் துறவி ஒருவர் அவர் வீட்டு பக்கமாக செல்கிறார், அவரைப் பார்த்ததும் அவருக்கு உணவு அளிக்க வேண்டும் என்ற மிகுந்த ஆவலில் அவரிடம் சென்று வேண்டிக் கொள்ள அவரும் மனமுவந்து வந்து உணவு உண்கிறார்.... அவர் உணவு உண்டு அங்கிருந்து செல்லும்பொழுது திரும்பி வந்த இவள் கணவர் மற்றும் வேதிகர்கள் அதை கண்டு , வேறு ஒரு மதத்தை சார்ந்தவர் உண்ட வீட்டில் நாங்கள் உண்ண முடியாது என்று அங்கிருந்து சென்று விடுகின்றனர். இதனால் மிகுந்த கோபம் அடைந்த சோம ஷர்மா அவளை அடித்து துன்புறுத்துகிறார் துன்புறுத்தல் தாளமுடியாமல், காட்டுக்கு தன் மகன்களுடன் ஓடிவிட்ட அந்த பெண் , மகன்களின் பசியை கண்டு பொறுக்கமுடியாமல் இறைவனை வேண்ட "கற்பக தரு" ஒன்று அருகில் தோன்றி அவர்களின் பசியை ஆற்றியது, அதே சமயத்தில் ஊரில் தீவிபத்து ஏற்பட்டு அரண்மனை மற்றும் இவளின் வீடு தவிர அனைத்தும் தீக்கிரையாகி விடுகிறது இதன் காரணத்தை பெரியவர்கள் மூலம் அறிந்த சோமசர்மா தன் மனைவியைப் பார்க்க , கையில் ஒரு தடியின் உதவியைக் கொண்டு காட்டிற்குள் ஓடி வருகிறான்.. இதைக் கண்ட அவள் மீண்டும் தன்னை தாக்க தான் வருகிறான் என்று தவறாக யோசித்து தன் மகன்களுடன் தற்கொலை செய்து கொள்கிறாள், அவ்வாறு செய்துகொண்ட அவள் மீண்டும் பிறவி எடுக்காமல் தான் தொண்டு செய்ய வேண்டும் என இறைவனை வேண்டி தர்ம தேவதையாக மாறுகிறாள்.... இங்கிருக்கும் புடைப்பு சிற்பத்தில் காணப்படும் தர்ம தேவதை , தன்னுடைய உதவிக்கு இருக்கும் ஒரு சேடிப் பெண்ணையும், தனது இரண்டு மகன்களையும் மட்டுமல்லாமல், மனம் திருந்திய தன் கணவர் சிம்மவாகனம் ஆக மாறி இருப்பதையும் உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது....
 பாறைகளிலும் வேர் விட்டு வளரும்
 சமணத்தை தழுவாமல் தழுவி நிற்கும் சைவர்....




Popular Posts