Sunday, November 29, 2020

வரலாற்றுப்_பயணங்கள் :83 திருக்கோழம்பியமுடைய மகாதேவர் ,திருக்கோழம்பியம்.

 திருக்கோழம்பியமுடைய மகாதேவர் ,

திருக்கோழம்பியம்.
பனை மரத்திற்கு தலைகனம் கொடுத்த வான்குருவியின் கூடுகளையும், நிலமகளின் செல்லப்பிள்ளையான நாணத்தினால் தலை கவிழ்ந்த பொன்வண்ண நெற்கதிர்களையுங் காணும் பொழுது ,பயணித்து களைத்திருந்த நமது சோர்வு, காட்டுப்பூனையைக் கண்ட பச்சைக்கிளி நொடிப்பொழுதில் பறந்து மறைவதைப் போல, மறைந்து புத்துணர்ச்சி அடையச் செய்து விடுகிறது....
திருக்கயிலாயத்தில் இயற்கை வனத்தில் வீற்றிருக்கும் மகாதேவரே , சோலைகள் சூழ்ந்த கோழம்பியத்தின் இயற்கை எழிலில் மயங்கி கோவில் கொண்டுள்ளார் என அப்பர் பெருமானும்,
மெல்லிய தனங்களை உடைய உமாதேவியை இடப்பாகத்தில் வைத்த உமையொருபாகன் காவிரிக் கரையின் வனப்பில் குடி கொண்டுள்ளான் என்று ஞானசம்பந்தரும் கோழம்பத்தில் குடிகொண்டுள்ள இறைவன் மீது பகிர்ந்து பதிகம் பாடியுள்ளனர் .
மாமன்னர் உத்தம சோழர் காலத்தில் செம்பியன் மாதேவியார் கற்றளியாக எடுப்பித்த திருக்கோவில்களில் இந்த கோவிலும் ஒன்றாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது....
உத்தம சோழரின் 16 வது ஆட்சி ஆண்டில் அவரின் மனைவிகளில் ஒருவரான ஆரூரன் பொன்னம்பலத்தடிகள் என்பவரின் மகளாக திருக்கோழம்பமுடைய மகாதேவியார் மதுராந்தகன் உமாஹட்டராகியாருக்கு ,( அதாவது மகாதேவரின் மனைவியை அரசரின் மனைவிக்கு மகளாக பாவித்து ) முப்பத்தஞ்சு கழஞ்சு பொன் கொடுத்து நிலம் வாங்கி இறையிலி நிலமாக கொடுத்து திருநொந்தா விளக்கேற்ற நிவந்தம் அளித்து கல்வெட்டாக சாசன படுத்தியுள்ளனர்....
மேலும் கோப்பரகேசரி ஆட்சியாண்டில் மற்றுமொருவர் 14 காசு கொடுத்து நிலம் வாங்கி அந்த வருமானத்தை விளக்கேற்ற நிவந்தம் அளித்துள்ளனர்....
மேலும் பல கல்வெட்டுகள் புனரமைப்பில், வரலாறு இழந்து போனது என்பது வருத்தமான உண்மை, குலோத்துங்கன், ராஜராஜன்,ராஜேந்திர சோழன், போன்றவர்களின் கல்வெட்டுகள் இருந்ததாக அறியமுடிகின்றது... திருவாவடுதுறை, திருவாலங்காடு தெற்கு போன்ற ஊர்களின் அருகிலுள்ள இந்தத் திருக்கோவில் , நிச்சயமாக சோழர்கள் காலத்தில் மிக முக்கியமானதொரு திருக்கோவில் ஆகவே இருந்திருக்க வேண்டும்...
கல்வெட்டுகள் மறைந்தாலும் இங்குள்ள சிலைகள் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் நம் பாதத்தின் வேகத்தைத் தேக்கி நிறுத்தும் என்பதை உள்சென்று கருவறையை சுற்றி வரும்போது அறியலாம்.
பட்டப்பகலிலேயே சில்வண்டுகளின் ரீங்காரம் காதில் இசை மீட்டும் ஓசையை கேட்கும் விதமாக அடர்ந்த சோலைகள் இன்றளவும் சூழப்பட்டுள்ள இந்த திருக்கோவிலின் மதில் சுவருக்கு உள்ளே , நந்தி மண்டபம் ,கொடிமரம் கடந்து செல்லும்போது மூன்று அடுக்கு கோபுரம் வாயிலாக அமைந்துள்ளது.
இந்த நந்தி மண்டபத்திற்கு வடக்குப் புறத்தில் சௌந்தரவல்லி தாயார் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார்.
கோவிலின் கர்பக்கிருகத்தில் திருக்கோழம்பியமுடைய மகாதேவர் சுயம்பு மூர்த்தியாகவும், கர்ப்பகிரகத்திற்கு அடுத்து அர்த்த மண்டபமும், மகா மண்டபமும் , மகாமண்டபத்தின் வாயில்களை சோழர் கட்டடக் கலைக்கே உரித்தான அழகிய வடிவமைப்புடன் கூடிய துவாரபாலகர்கள் காவல் புரிகின்றனர்.
சோழர் காலத்தின் அற்புதமான கற்றளிகளில் ஒன்றான இந்த திருக்கோவிலின் கோஷ்டத்தில் சற்று அதிகமாகவே சிற்பங்களை காண முடிகிறது. அதாவது கோஷ்டத்தின் தெற்குச் சுவரில் விநாயகர், நடராஜர் ,அகத்தியர் மற்றும் தக்ஷிணாமூர்த்தி ஆகியோர்கள் தங்கள் பரிவாரங்களுடன் காணப்படுவதுடன் ஒவ்வொரு சிலையின் மகர தோரணத்தில் நடராஜ மூர்த்தியின் வெவ்வேறு பாடல் காட்சிகளும் புடைப்புச் சிற்பங்களாக காணப்படுவதுடன் அகத்தியருக்கு அருகில், சில மாந்தர்கள் சிவனை வழிபடுவது போல ஒரு புடைப்புச் சிற்பமும் உள்ளது...
கோஷ்டத்தின் மேற்குப் புறத்தில் அடி முடி காணாத அருணாச்சலேஸ்வரரின், முடியையும் , அடியையும் காண அன்னமாகவும் வராக மூர்த்தியாகவும் வடிவமைத்த பிரம்மா மற்றும் விஷ்ணமூர்த்தியின் சிற்பமும்,
வடக்குப் புறத்தில் நான்முகன், ரிஷபத்தில் சாய்ந்த நிலையில் உள்ள அர்த்தநாரீஸ்வரர், எருமையின் மீது ஒய்யாரமாக கால் பதித்து நிற்கும் மகிஷாசுரமர்த்தினி, மற்றும் பிட்சாடனர் ஆகியோர்களின் சிற்பத்தையும் கண்டுகளிக்கலாம்.
மேற்குப் புறத்தில் அமைந்துள்ள விநாயகர், பல்வேறு லிங்க ரூபங்கள், வள்ளி தெய்வயானை சமேத முருகன், கஜங்கள் அணைப்பில் உள்ள வேழத்திருமகள் சிறு சிறு கோயில்களில் விட்டிருக்கின்றனர்....
இந்த திருக்கோவிலின் புராணக் கதைகள் மிகவும் சுவாரசியமானது... இந்தக் கோவிலின் கருவறை லிங்கத்தின் ஆவுடையில் காணப்படும் ,சில கால் தடங்கள் பசுக்களின் கால்தடம் போல உள்ளது என்று புராணங்கள் சொல்கின்றது என்றும் , அதனாலேயே இந்த ஊருக்கு திருக்கோழம்பியம் என்ற பெயர் வந்தது என்றும் சொல்லப்படுகின்றது...


                                                     வான்குருவியின் கூடு   

                     திருக்கோழம்பியம் மகாதேவர் திருக்கோவிலில் நுழை வாயிலில் நுழைந்ததும் காணப்படும் மரங்களடர்ந்த 3 நிலை கோபுரமும், பலிபீடமும் நந்தியும்...


துவாரபாலகர்கள்

திண்டி முண்டி காவல் காக்க கருவறையில் வீற்றிருக்கும் திருக்கோழம்பியமுடைய மகாதேவர்🥰🥰


கோஷ்டத்தில் அமைந்திருக்கும் விநாயகர், நடராஜர் மற்றும் அகத்தியர் புடைப்புச் சிற்பங்கள்.

உணவு பரிவாரங்களுடன் விநாயகமூர்த்தி

லேசான புன்முறுவலுடன் முயலகன் மீது ஒரு காலை தூக்கி தாண்டவமாடும் தாண்டவமூர்த்தி...

சிஷ்யர்களுடன் குறுமுனி

காவல் பரிவாரங்களுடன் மகா தேவரை வணங்கி நிற்கும் இவர் இந்தத் திருக்கோவிலுக்கு நிவந்தம் அளித்த அரச குடும்பத்தினர் ஆக இருக்கலாம்...

குரு தட்சிணாமூர்த்தி

அடிமுடி இல்லை அண்ணாமலையார், நான்முகன் மற்றும் விஷ்ணு மூர்த்தி
முகத்தின் இடது புறத்தில் ஏன் இந்த குறுநகை கணவனின் பாதி உடலைப் பெற்றதால் வந்த ஆனந்த புன்னகையும் இது, உமையாளின் மனதை உள்வாங்கிய சிற்பிகள் நாம் வணங்கத் தக்கவர்கள் தான். பாதத்திலிருந்து தலை வரை உள்ள மாற்றங்களை கவனத்துடன் செதுக்கியுள்ளனர் இல்லையில்லை படைத்துள்ளனர்..... சாமரம் வீசும் பெண்களின் குறுஞ்சிற்ப்பங்களும் அழகு
தாயே என் அரசனும், என் நாடும் , என்னைச் சார்ந்து வரும் நலமுடன் வாழ என் தலையை நானே உனக்கு அர்ப்பணிக்கிறேன் இதோ ஏற்றுக்கொள் என்று பணியும் பக்தனை அன்புடன் ஏற்றுக் கொண்டிருக்கும் மகிஷாசுரமர்த்தினி.....

ஆண்களில் அழகன் முருகன் என்றும் ராமன் என்றும் கூறுவார் இந்த பிச்சாடனர் அழகை காணாதோர்..... ரிஷிபத்தினிகள் கிறங்கடித்த பேரழகன் அல்லவா....

விநாயகமூர்த்தி

வள்ளி தெய்வயானை சமேத முருகக்கடவுள்

கமலத்தில் வீற்றிருக்கும் வீரத்திருமகள் கரத்தில் உள்ள தாமரைக்கு நீர் சொரியும் களிறுகள்




இன்னும் சற்று கோபத்துடன் காணப்படும் சண்டிகேஸ்வரர், ஐயா கோபத்தைத் தணித்துக் கொள்ளுங்கள் தாங்கள் ஆட்கொள்ளப்பட்டு விட்டீர்கள்

பைரவர்

ஏன் இந்தப் புன்னகை இறைவனை சதா கண்டுகொண்டே இருப்பதாலா

திருக்கோழம்பியம் மகாதேவர்

சௌந்தரநாயகி அன்னை

குலோத்துங்கன் கல்வெட்டு

பயணத்தினால் பெற்ற பேறு




அந்தி நேரத்தில் கதிரவன் கடலிலோ அல்லது மலையிலோ ஒளிந்துகொள்ளும் அற்புதமான காட்சிகளை நாம் கண்டிருப்போம் , ஆனால் சோழநாட்டில் வயல்வெளிகளில் சூரியன் தஞ்சம் புகும் அழகே தனி அழகு , அதாவது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வயல்வெளிகளில்....

திருவாவடுதுறையில் இருந்து திருக்கோழம்பியத்திற்கு செல்லும் வழியில் , சாலையின் ஓரத்தில் காணப்படும் மாந்தன் மாந்தியுடன் காணப்படும் தவைத்தாய்....


No comments:

Post a Comment

Popular Posts