திருவாமாத்தூர் உடைய அழகிய நாயினார்🙂🙂🙂🌾🌾🌾
குளிர்ந்த புனல் சூழ்ந்த
அடர்ந்த பசுமை வளம் கொண்ட
அன்னங்கள் கொஞ்சி விளையாடும்
திருவாமாத்தூரில் என்னை ஆட்கொண்ட "அழகிய நாயனார்" என்று வாகீச பெருமானும்,
நறுமணங்கொண்ட தென்றல் புகுந்து கொஞ்சி விளையாடும் மாட மாளிகைகளையும்,
உயர்ந்து நிற்கும் பனை மரங்களையும் , அவற்றின் மீது வந்து தங்கி மகிழும் பறவைகளையும் கொண்ட அழகிய ஊரில், முப்புரத்தை எரித்து தணியாத கோபம் கொண்ட இறைவன், தன் கோபத்தை தணிக்க இங்கு இருக்கின்றானோ !!!!
பாலின் இனிமையை போன்ற வாய்மொழிக் கொண்ட பாவைகள் நடனமாடி, இசை பாட,
கண்களுக்கு இனிமை சேர்த்திடும் இந்த நடனத்தைப் போன்றே நாவிற்கும் இனிமை சேர்க்கும் கரும்பு ஆலைகள் சூழ்ந்த "ஆமாத்தூர்"என்று
திருஞானசம்பந்தரும்,
மான் விழிகளைக் கொண்ட உமையன்னையை மனைவியாக உடைய எம் தலைவனை, வேதங்கள் போற்றும் இறைவனைக் கண்டேன் , கண்ட மாத்திரத்தில் அடிமையானேன்... என்பது சுந்தரமூர்த்தி நாயனாரை மட்டுமல்ல இந்தக் கோயிலுக்கு சென்ற முதல் முறையே என்னையும் பலமாக ஈர்த்துக் கொண்டார்.....
எதார்த்தமாக நண்பர்களுடன் ஒரு முறை, கல்வெட்டுகளைக் காண இந்த கோயிலுக்கு சென்றதும் , அதன் பிறகு மாதத்திற்கு ஒரு முறை அந்த கோயிலுக்கு செல்வது வழக்கமாகிவிட்டதை நினைக்கும் போது எனக்கே ஆச்சரியமாக உள்ளது....
இரண்டு புறங்களிலும் அடர்ந்த பசுமையான மரங்களும், மத்தியில் பலவண்ண அரளிப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரத்திலிருந்து மேற்குப் புறத்தில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில், பம்பை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது திருவாமாத்தூர்.
மதுரையும், ஈழமும் கொண்ட சோழகுல மாமன்னன் முதலாம் பராந்தக ( 907 -955 ) சோழரின் காலத்தில் , "அருகூர்த் தச்சன் நாராயணன் வேற்கந்தனாகிய திருவாமாத்தூர் ஆசாரியன்"
என்பவரால் கற்றளியாக மாற்றப்பட்ட இந்தத் திருக்கோயில் வசீகரிக்கும் பல சிற்பங்களையும், அழகிய கட்டிடக்கலையும் கொண்டுள்ளது மட்டுமல்லாமல் நீண்ட நெடிய வரலாற்றுப் பின்னணிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
திருச்சுற்று மண்டபம் "செம்பியன் காத்திமானடிகள்" என்பவரால் எடுப்பிடிக்கப்பட்டது.
ஆறாம் நூற்றாண்டில் இருந்தே முக்கியத்துவம் வாய்ந்த இந்த திருக்கோவில், பல்லவர்கள் ஆட்சி முடிந்து சோழர்கள் ஆதிக்கம் அதிகரித்த போதும் மேலும் முக்கியத்துவம் பெற்றதாகவே விளங்கியுள்ளது என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் நாம் அறியலாம். மதுரை கொண்ட கோப்பரகேசரி பராந்தகச் சக்கரவர்த்தியின் காலத்தில் ஏராளமான நிவந்தங்களை இந்த திருக்கோயில் பெற்றுள்ளது.....
மன்னரது 16 வது ஆட்சி ஆண்டில் "கழுமாப்பல்லவ விஜயமங்கலங்கிழான் மரம் அறந்துணைமரையயன்" என்பான் , 15 கழஞ்சு பொன் நிவந்தம் அளித்து அந்தப் பொன்னில் இருந்து பெறப்படும் பொலிசை மூலம் திருச் சந்தனம் சாத்த ஏற்பாடு செய்தார். பொலிசை என்பது வட்டி என்பதை குறிக்கும்.
சக ஆண்டு 879 இல் கண்டராதித்த பல்லவராயர் மகள் மாதேவடிகள் 20 கழஞ்சு பொன் நந்தா விளக்கு ஏற்றுவதற்காக தானம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ராஜகேசரி ராஜராஜ சோழத் தேவர் , கோப்பரகேசரி ராஜேந்திர சோழ தேவர் வீரராஜேந்திர சோழ தேவர் இவர்களின் காலத்திலும் பல நிவந்தங்களை இத்திருக்கோயில் பெற்றுள்ளது . வீரராஜேந்திரன் காலத்தில் இந்த ஊர் ராஜேந்திர சோழ வளநாடு என்று அழைக்கப்பட்டுள்ளது.
கோப்பரகேசரி பன்மரான ராஜேந்திர சோழ தேவரின் மூன்றாவது ஆட்சியாண்டில் புதுக்குடி புதுக்குடையான் வேளான் ஆரூரன் என்பவன், ஒரு காசுக்கு எட்டு ஆடு வீதம் 132 காசுக்கு மொத்தம் 1056 ஆடுகள் நிவந்தம் அளித்துள்ளார்.
ஒரு நந்தா விளக்கு எரிக்க 96 சாவா மூவா ஆடுகள் எனவும், மொத்தம் பதினோரு நந்தாவிளக்கு எரிப்பதற்கான மொத்த ஆடுகளின் எண்ணிக்கையை மேலே குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்குள்ள கல்வெட்டுகளில் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது......
கோவிராஜகேசரி வன்மரான, திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவரின்(1133 - 1150 ) இரண்டாவது ஆட்சி ஆண்டில் இந்த ஊர் ராஜராஜ வளநாட்டு பனையூர் நாட்டுக்கு தேவதானம் என்றும், இறைவன் திருவாமத்தூர் உடைய அழகிய தேவர் என்றும் அழைக்கப்பட்ட மூலவருக்கு திருப்பதிகம் பாடி வரும் 16 பார்வை இழந்த பக்தர்களுக்கும் அவர்களுக்கு வழிகாட்ட இரண்டு பேரும் மொத்தம் 18 பேருக்கு நெல் தானம் நிவந்தமாக அளித்து அவர்கள் மற்ற கவலையின்றி இறைவனைத் வழிபட ஏற்பாடு செய்திருக்கிறார் என்பதுதான்.
ஒரு நாளுக்கு மூன்று கலம் நெல் என்றால் , ஒரு வருடத்திற்கு 360 நாளாக கணக்கில் வைத்து 1080 கலம், அவர்களின் துணி
துவைப்பவர்களுக்கு 20 கலம் நெல்லு மற்றும் ஒரு நபருக்கு ஒரு காசு வீதம் 18 காசுகளையும் 12 வேலி நிலத்தை ராஜராஜ பிச்சன் என்பவரிடம் தானமாக அளிக்கப்படுகிறது... ஒரு வேலிக்கு 120 கலம் நெல் என்று கணக்கிட்டு 12 வேலிக்கு 1440 கலம் நெல் இவர்களுக்காக நிவந்தமாக அளிக்கப்படுகிறது.....
விக்கிரம பாண்டிய தேவர்(1241- 1254) அவர்களின் பெயரில் ஒரு சன்னதியும் அவர் பிறந்த புரட்டாசி மாதத்தில் அமுதுபடி நித்தியப்படி ஆகியவைகளுக்கு எண்பது "மா" நிலம் தானமாக அளிக்கப்பட்டுள்ளது. ஒரு "மா" நிலம் என்பது 18.365 ஏக்கர் நிலம் ஆகும்...
ஸ்வஸ்திஸ்ரீ சகல புவன சக்கரவர்த்தி, தரணியாள பிறந்தான், காடவர்கோன், கோப்பெருஞ்சிங்கன் நிவந்த கல்வெட்டுகளையும் இக்கோவில் கொண்டுள்ளது.
இதற்குப் பிறகு டெல்லி சுல்தான்களால் சில தாக்குதலுக்கு உட்பட்டு இந்தத் திருக்கோயிலின் காவலர்கள் சிதைந்துவிட்டதையும், அதற்குப்பிறகு சம்புவராயர்கள் ஆட்சியில், பல்லவராயர்
தம்பிரானாரை கொண்டு நில தானம் வழங்கி மீண்டும் காவலர்களை புனரமைத்ததையும் இங்குள்ள கல்வெட்டுகள் உணர்த்துகின்றது....
இந்தக் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை மொத்தமாக ஆராய்வதற்கு ஒரு பதிவு போதாது ,ஒரு பெரிய புத்தகத்தையே போடலாம்..... ஆகையால் அதை அப்படியே விட்டுவிட்டு அழகிய நாயனாரின் திருக்கோவிலுக்கு செல்லலாம்...
கம்பீரமாக நிற்கும் ஒன்பது கலசத்துடன், ஏழுநிலை கிழக்கு நோக்கி அமைந்துள்ள
இராஜகோபுரத்தில் உள்ளே நுழையும் பொழுது, சுதையினாலன நந்தி வடிவமும், கல்லினால் ஆன பாதாள நந்தியும் கடந்துதான் கோவிலுக்குள் நுழைய வேண்டும். இரண்டாம் சுற்றில் நுழைவாயிலுக்கு முன்னே காணப்படும் பெரிய விழா மண்டபத்தில் அமைந்துள்ள சற்றே வித்தியாசமான நந்தி நேராக அழகியநாயினாரை காணும்படியாக அமைந்துள்ளது. இரண்டாம் நுழைவாயிலில் இரண்டு புறத்திலும் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய துவாரபாலகர்களும், இடதுபுறத்தில் கணபதியின் புடைப்புச் சிற்பம் மற்றும் அதிகார நந்தியின் அழகிய சிலை ஒன்றும், வலதுபுறத்தில் ஆறுமுகக் கடவுளின் சிலை ஒன்றும் நம்மை வரவேற்று அடுத்த சுற்றுக்கு அழைத்துச் செல்லுகின்றது.
மகா மண்டபம் முதல் திருச்சுற்றையும் சேர்த்தவாறு தளர தளத்தினால் மூடப்பட்டுள்ளது. அதற்கடுத்து கருவறை சுவர்களின் வெளிப்புறத்தில் கோஷ்ட தெய்வங்களின் அழகிய சிலைகளையும் திருச்சுற்றின் இடதுபுறத்தில் பல புடைப்புச் சிற்பங்கள் மற்றும் மயில் மீது அமர்ந்து புன்னகைக்கும் ஆறுமுகக் கடவுள் கஜலட்சுமி போன்றோர்களின் சிலைகளையும் காணலாம்.
கருவறையைச் சுற்றி சிறிய அகழி போன்ற அமைப்பும், சுற்றுப் பாதையிலிருந்து கோஷ்ட தெய்வங்களை வணங்க செல்ல அழகிய சிறிய பாலம் போன்ற அமைப்பும், கோஷ்ட தெய்வங்களுக்கு சிறிய மண்டபங்களும் அமைத்திருப்பது தனி அழகை ஏற்படுத்துகின்றது...
மகா மண்டபத்தின் வெளியே வடக்கு புற சுவற்றில் அமைந்துள்ள புடைப்புச் சிற்பம் ஒன்றில் மகிஷாசுரனை வதம் செய்யும் சிம்மவாகினியை பரிவாரங்களுடன் காணலாம்.
அதற்கு மேலே உள்ள பூத வரிசை பல பஞ்ச தந்திரக் கதைகளையும், கண்ணப்ப நாயனாரின் உருக்கமான சிவபக்தியும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்தையும் கடந்து மகா மண்டபத்திற்குள் நுழையும்போது, சுற்றி சாளரங்களுடன் கூடிய மாட கூடம் குளிர்ந்த காற்றை வீசிக் கொண்டிருக்க , அதனைக் கடந்து அர்த்தமண்டபத்தில் நுழைந்து அப்பர்,திருஞானசம்பந்தர் ,
சுந்தரர், அருணகிரிநாதர் போன்ற பக்தி செல்வர்களை கவர்ந்திழுத்த "திருவாமத்தூர் உடைய அழகிய நாயனாரின்" திருவுருவத்தை லிங்க வடிவமாக கருவறையில் காணும் பொழுது மெய்சிலிர்த்து நிற்க வைக்கின்றது...
பக்தியில் ஈடுபாடு கொண்டவர்கள், மிகுந்த மனநிறைவுடன் வெளியேறுவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை....🙂🙂
இங்கு காணப்படும் விநாயகர், மூத்த தேவி , ஒரே கல்லால் ஆன சிவன் விஷ்ணு பிரம்மா மற்றும் அய்யனாரின் சிலைகள் பல்லவர் காலத்தை ஒத்ததாக காணப்படுவது தனிச்சிறப்பாகும்.
கோவிலின் வெளிச்சுற்றில் 63 நாயன்மார்களின் சிலைகளும், அதற்கு அருகில் மான் முகம் கொண்ட சபரிக்கு சாப விமோசனம் அளித்த ராம லட்சுமணர் சிலைகளும், மேற்குப் புறத்தில் கைலாசநாதர், காசி விஸ்வநாதர், சண்முக சுவாமி , விநாயகர் ஆகியோர்களுக்கு தனித்தனியே சன்னதிகள் காணப்படுகின்றது...
கோவிலின் வடக்குப் புறத்தில் அழகிய தூண் வேலைப்பாடுடன் கூடிய பெரிய திருக்கல்யாண மண்டபம் ஒன்றும் உள்ளது...
இந்தத் திருக்கோவிலில் அம்மன் சன்னதி கிடையாது முத்தாம்பிகைக்கு என்று தனி சன்னதி இந்த கோயிலுக்கு எதிரே கட்டப்பட்டுள்ளது...
முத்துதார்நகை யழகுடையர் என்று அருணகிரிநாதர் அம்மனை புகழ்ந்துறைக்கிறார்.
நீண்ட பதிவாக சென்றுகொண்டிருக்கிறது. இருந்தாலும், மேலுமொரு சுவாரசியமான செய்தி இரட்டைப் புலவர்கள் இந்த கோவிலில் கலம்பகம் பாடியுள்ளனர். 14ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டில் பிறந்த இவர்கள் இளஞ்சூரியர் மற்றும் முதுசூரியர் எனும் அத்தை மற்றும் மாமன் மகன்கள். அத்தை மகனுக்கு கண் தெரியாது, மாமன் மகனுக்கு கால் கிடையாது. கண்ணில்லாதவர் கால் இல்லாதவரை தூக்கிக்கொண்டு, அவர் வழிகாட்டு இவர் குறிப்பிட்ட இடத்திற்கு செல்லுவார் அவ்வாறு செல்லுகையில் முதல் வரியை ஒருவர் பாட அடுத்த வரியை இன்னொருவர் பாடுவார்... அதிசயமான இந்தக் கூட்டணியில் உருவானது பல பாடல்கள் அவற்றில் கச்சி உலாவும் ,கச்சிக்கலம்பகமும் மற்றும் திருவாமாத்தூர் கலம்பகமும் குறிப்பிடத்தக்கது....
திருவாமாத்தூர் கொடிமரம்
உற்சவ மண்டபத்தில் அமைந்துள்ள நந்தியும் பலிபீடமும்
திருவாமாத்தூர் உடைய நாயனார், காளை வடிவ நந்தி மற்றும் அதிகார நந்தி, துவாரபாலகர்கள் புடைப்புச் சிற்பமாக உச்சிஷ்டகணபதி ,வலது புறத்தில் வள்ளி தெய்வானையுடன் மயில் மேல் வீற்றிருக்கும் முருகப்பெருமான்
அழகிய நாயனாரை காவல் புரியும் கம்பீரம் துவாரபாலகர்கள்...
லேசான புன்னகை ,பத்து கரங்களில் வெவ்வேறு ஆயுதங்கள், கரங்களில் முத்திரைகள் கொண்ட ஆறுமுகக் கடவுள்....
கோஷ்டத்தில் அமைந்துள்ள பிரம்மதேவன், வெளியேறும் அபிஷேக நீரை தொட்டியிலிருந்து, வாயில் ஏதோ ஒரு வாத்தியத்தை வைத்து ஊதிக்கொண்டே தாங்கிப் பிடித்திருக்கும் பூதம்
தாருகாவனத்து ரிஷி பத்தினிகளைக் கிரங்கச் செய்து பேரழகன்
பெயர் ஒன்றே போதும், ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவர்.....
சகலபுவன சக்கரவர்த்தி கோப்பெருஞ்சிங்கன்....
தன் மக்களான மாந்தன் மாந்தியுடன் மூத்த தேவி
முகபாவத்தில் மட்டுமே லேசான வித்தியாசத்துடன் அமைந்துள்ள துவாரபாலகர்
பரிவாரங்களுடன் கம்பீரமாக சிம்மத்தின் மீது அமர்ந்துள்ள துர்கா தேவி , பயத்துடன் பின்வாங்கும் எருமை தலைகொண்ட மகிஷாசுரன்....
மகாபலிபுரத்தில் புலி குகையின் அருகே ஒரு பாறையிலுள்ள புடைப்புச் சிற்பத்தை வெகுவாக ஒத்திருக்கிறது இந்த புடைப்புச் சிற்பம்.....
பூத வரிசையில் அமைந்துள்ள ஒரு குரங்கு முதலையின் மீது ஏறி பயணப்படுகிறது....
வாகை சூட்டும் பெருமான்....
திருவாமாத்தூர் உடைய நாயனார் கோவிலின் ராஜகோபுரமும், முத்தாம்பிகை அம்மனின் ராஜகோபுரமும்....
இந்த தசபுஜ விநாயகரை , இப்போதுதான் வான்மேகம் வந்து அபிஷேகம் செய்து விட்டு சென்றது...
No comments:
Post a Comment