Tuesday, February 25, 2020

வரலாற்றுப்_பயணங்கள்:80 -திருச்சுரமுடைய நாயனார், திரிசூலம்.

திருச்சுரமுடைய நாயனார், திரிசூலம்.....
குலோத்துங்க சோழ வளநாடு....
வானமாதேவி சதுர்வேதிமங்கலம்...
அதிக பாரத்தை சுமந்து செல்பவனைப்போல அடிமேல் அடிவைத்து சுணக்கமாக சென்றுகொண்டிருந்தது அந்த நொடிகள்..... நிதானமாக சென்று கொண்டிருந்த நேரத்தைச் சகிக்காமல் எங்காவது செல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது நினைவுக்கு வந்த இடம் , மலைகளால் சூழப்பட்டு இருந்த திரிசூலம்.....
எப்பொழுதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சென்னை விமான நிலையத்திற்கு எதிரேயுள்ள , மலைகளின் நடுவில் , எழில்மிகு தோற்றத்துடன் அமைந்துள்ள திருச்சுரமுடைய நாயனார் திருக்கோவில். பத்து நூற்றாண்டுகளுக்கு மேலான வரலாற்றை தன்னகத்தே புதைத்துக் கொண்டு இருக்கின்றது என்பதை அங்கு சென்றபோது நாம் அறியலாம்....
இந்தக் கோவிலின் உள்ளே நுழையும் வரை அதனுடைய பழமை புலப்படவில்லை, கிழக்கு நோக்கி அமைந்துள்ள பிரதான வாயிலின் வழியாக உள்ளே நுழைந்ததும், வழக்கம்போல கொடிமரமும் நந்தியும் நம்மை வரவேற்று கோவிலில் அர்த்த மண்டபத்திற்கு அழைத்து சென்ற போதுதான் இந்த கோயிலின் பழமையை நம்மால் உணர முடிகிறது....
தொண்டை மண்டலத்தில் அதிகமாக காணப்படும் கஜபிருஷ்ட என்கிற தூங்கானை மாடக்கோயில் வடிவமைப்பில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோயிலில், மூலஸ்தானத்தில், பார்ப்பவர்களை வசீகரித்திழுக்கும், திருச்சுரமுடைய நாயனார் கிழக்கு நோக்கியும், மகாமண்டபத்தின் வலது புறத்தில் அழகே உருவான திரிபுரசுந்தரி அம்மன் தெற்கு நோக்கியும் நின்ற நிலையில் அருள் பாலிக்கின்றனர்,
மகா மண்டபத்தில் அமைந்துள்ள கல்தூண்கள் பல அழகிய புடைப்புச் சிற்பங்களையும், அழகுபடுத்தப்பட்ட நுணுக்கமான தோரண வடிவங்களையும் கொண்டுள்ளது.
மேலும் கோஷ்டத்தில் அமைந்துள்ள விநாயகர் சிலைக்கு மேலே சுக்ரீவன் வாலி சண்டையிடும் அழகிய காட்சி, தட்சிணாமூர்த்திக்கு மேலே சோமாஸ்கந்தர் , லிங்கோத்பவருக்கு மேலே ரிஷபாரூடராக சிவன் பார்வதி, நான்முகனுக்கு மேலே ஒரு கையில் மழுவும் , ஒரு கையில் அங்குசம் ஏந்திய அர்தநாரியும், சிம்மவாகினி க்கு மேலே நர்த்தனமாடும் கிருஷ்ணன் போன்றோரின் புடைப்புச் சிற்பமாக வடிவமைத்து கோஷ்ட தெய்வங்களின் அழகை மெருகேற்றியிருக்கின்றனர். மேலும் பரவசமூட்டும் பல செயல்களை செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் குதுகலிக்கின்றன தங்கள் வரிசையில் பூதங்கள்....
சிற்பகலை மட்டுமல்ல இக்கோயிலில், பல்வேறு சிறப்பு மிக்க வரலாற்றுப் பின்னணியும் பின்னி பிணைந்தே காணப்படுகிறது....
இங்கு காணப்படும் கல்வெட்டுகளில் மிகவும் பழமையானது முதலாம் குலோத்துங்க சோழர் காலத்தைச் சார்ந்தது. ஆகவே இந்தத் திருக்கோயில் அதற்கு முன்பு இருந்த செங்கல் கோயிலை அவர் காலத்தில் கற்றளியாக மாற்றப் பட்டதாக இருக்கலாம்....
தொண்டை மண்டலத்தில் உள்ள காஞ்சிபுரத்தை தனது முக்கியமான துணைத் தலைநகரங்களில் ஒன்றாக வைத்துக்கொண்டு, கலிங்கத்தை ஒருக்கை பார்த்த, மாமன்னர் குலோத்துங்க சோழ தேவரின் (1070-1120) 37வது ஆட்சி ஆண்டு முதல் பல நிவந்தங்களை இக்கோவில் பெற்றுள்ளது.
சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழ தேவரின் 39 ஆவது ஆட்சியாண்டில் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து, புலியூர் கோட்டத்து, குலோத்துங்க சோழவள நாட்டு, பல்லபுரமான வானவன் மாதேவி சதுர்வேதி மங்கலத்து, உடையார் திருச்சுரமுடைய நாயனாருக்கு தேவதானமாக, அதாவது இறையிலி நிலமாக 41 வேலி நிலம் வழங்கப்பட்டுள்ளது.
(41 வேலி = 20 x 41 மா = 820 மா = 82,00,000.00 சஅ = 188.2 ஏக்கர்)
(பூவினைநிலம் 30 வேலியும், கொல்லி நிலம் 11 வெளியும்)
கோப்பரகேசரி பன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ விக்ரம சோழதேவரின் (1118 -1133) ஆறாவது ஆட்சியாண்டில் நந்தா விளக்கு ஏற்றுவதற்கு ஆடுகள் தானமும்,
ஒன்பதாவது ஆட்சியாண்டில் வரையறுக்கப்பட்ட எல்லைகளுடன் நீர்ப்பாசன வசதியுடன் 970 குழி நிலம் தானமாக கொடுக்கப்பட்டுள்ளன, மேலும் இவரது 14 ஆவது ஆட்சியாண்டில் விக்கிரம சோழ மலையரையன் என்பார் 1000 குழி நிலம் அளித்துள்ளார்.
கோராஜகேசரி வர்மர் திருபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ ராஜாதிராஜா சோழ (1163 -1179) தேவரின் நான்காவது ஆட்சியாண்டில் சந்தி விளக்கு ஏற்றுவதற்கு பசு மற்றும் சாவா மூவா ஆடுகளூம் அளிக்கப்பட்டுள்ளது...
மதுரையும்,ஈழமும்,கருவூரும், பாண்டியன் முடித்தலை கொண்ட மாமன்னர், குலோத்துங்க சோழதேவரின்(1178 -1216) 31 ஆட்சி ஆண்டில் எருமை தானம் அளித்து அதிலிருந்து வரும் வருமானத்தைக் கொண்டு நந்தா விளக்கு எரிப்பதற்கு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது....
திரிபுவனச் சக்கரவர்த்திகள் ராஜகேசரி வர்மன் மூன்றாம் ராஜ ராஜனின்(1216 - 1256) 16 வது ஆட்சி ஆண்டில் நந்தா விளக்கு ஏற்றுவதற்கு பசுக்களும் ஆடுகளும் தானமாகவும் ,
திரிபுவனச் சக்கரவர்த்திகள் கோப்பரகேசரி மூன்றாம் ராஜேந்திர சோழதேவரின் (1246- 1279) ஆட்சியாண்டில் நில தானம் அளித்து , அதிலிருந்து வரும் விளைச்சலின் பெருவாரியான பகுதியான 150 கலம் நெல்லை கொண்டு, அதிலிருந்து வரும் வட்டியை வைத்து மாதத்திற்கு ஐந்து நாட்களை குறிப்பிட்டு, அபிஷேகம் செய்விக்க தானம் அளிக்கப்பட்டிருக்கிறது..
தொண்டை மண்டலத்தில் உள்ள இந்த திருக்கோவில் நீண்ட சோழப்பேரரசின் பெயர்களைத் தாங்கி இருப்பதோடு மட்டுமல்லாமல்,
கோமாறப் பன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் குலசேகரதேவரின் (1268 -1311)
38 ஆவது ஆட்சியாண்டில் தொண்டைமனாறு என்பவர் 32 பசுகள் மற்றும் ஒரு காளையைக் கொண்டு நந்தாவிளக்கு எரிப்பதற்கு நிவந்தம் அளித்துள்ளார் என்பதைப் பார்க்கும்போது , பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து , பாண்டியர்களின் ஆதிக்கம் சோழ நாட்டைக் கடந்து தொண்டை நாடு வரை பரவியிருந்தது என்பதை அறியலாம்.....
இந்தக் கோவிலுக்கு சென்றபோது ஏற்பட்ட மிகவும் மகிழ்ச்சியான தருணம் என் மகள், திருபுவனச் சக்கரவர்த்திகள், யாண்டு, மற்றும் சில வார்த்தைகளை கல்வெட்டில் படித்தது.
வருத்தமான ஒரு விஷயம் என்னவென்றால், கோயில்களில்
புனரமைப்பின் காரணமாக, சுற்றுச்சுவர் கற்கள் தங்கள் மேனியில் உள்ள சொரசொரப்பு பகுதியை இழந்து வருகிறது, அதாவது கல்வெட்டுகள் அழிந்து வருகிறது, அத்தகைய வரிசையில் இந்தக் திருக்கோயிலின் சுவரும் மெருகேறிய காணப்படுகிறது....
எது எப்படி இருந்தாலும், அமைதியான சூழ்நிலையில் மனம் லயிக்க வைக்கும் ஒரு அருமையான திருத்தலம்
இது.....🙂🙂🙂🙂








திருநீற்றுச் சோழ நல்லூர் உடைய, திருசுரமுடைய மகாதேவர்.....

ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து, புலியூர் கோட்டத்து, குலோத்துங்க சோழவள நாட்டு, வானமாதேவி சதுர்வேதி மங்கலத்து , பல்லவபுரத்து, திருச்சுரமுடைய நாயனார்....



 சுக்ரிவனும், வாலியும் சண்டை செய்யும் காட்சி ,அழகிய சிறு புடைப்புச் சிற்பமாக கோஷ்டத்திலுள்ள விநாயகர் சிலைக்கு மேலே வடிக்கப்பட்டிருக்கிறது








குரு தட்சிணாமூர்த்தி என் அருகில், அவரை வணங்கும் விதமாக முனிவர்கள் அமர்ந்திருப்பதை பெரும்பாலான இடத்தில் நாம் காணலாம் . ஆனால் இங்கோ, அவர்களும் தனியாக தியானம் செய்வது போல அமைந்திருக்கின்றது....




கோஷ்டத்தில் மேற்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கின்ற லிங்கோத்பவரில், லிங்க வடிவத்தில், ஒரு சிவன் புடைப்புச் சிற்பமும், கையில் சங்கு சக்கரத்துடன் வராகமூர்த்தி லிங்கத்தின் அடியிலும், லிங்க ஜோதியில் இருந்து கீழே விழும் தாழம்பூவும், லிங்கத்தின் உச்சியைக் காண ஆவலுடன் பறந்து செல்லும் அன்னப்பறவையாக பிரம்மதேவனும் தெளிவாக செதுக்கப்பட்டுள்ளது....



ஒரு கையில் கமண்டலமும் , ஒரு கையில் ஜபமாலையும் வைத்துக்கொண்டு இளநகை தவழும் இதழ்களுடன் பிரம்மதேவன்...






சுற்றுச்சுவரில் அமைந்துள்ள ரிஷப குஞ்சரம் புடைப்புச் சிற்பம்



பல்லாபுரத்து



ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் ராஜாதிராஜன் தேவர்க்கு யாண்டு




காலபைரவர்






கோமாறப் பன்மரன திரிபுவனச் சக்கரவர்த்திகள் குலசேகர தேவர்க்கு


No comments:

Post a Comment

Popular Posts