Thursday, July 11, 2019

வரலாற்றுப்பயணங்கள் 3: திருப்பலிஸ்வரர் :வைகுண்டபெருமாள் :வாயலூர்


வரலாற்றுப்பயணங்கள் 3:  திருப்பலிஸ்வரர் :வைகுண்டபெருமாள் :வாயலூர் 
23 ஜூன்

தொண்டை மண்டலத்தில் , மழைக்காலத்தில் பொழியும் சொற்ப நீரை கடலில் கொண்டு சேர்க்கும் பாலாற்றின் முகத்துவாரத்தில் அருகே அமைந்துள்ள அழகிய கிராமம் வாயலூர் . இந்த ஊரின் மத்தியில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட அழகிய திருப்புலிஸ்வரர் மற்றும் வைகுண்ட பெருமாள் கற்றளிகள் பழைய வரலாற்றுச் சுவடுகளை தன்னகத்தே தாங்கிக் இன்றளவும் வசீகரிக்கும் அழகிய வகையில் அமைந்துள்ளது.
பெரிய ஆலமரத்தின் நிழலின் வழியாக போடப்பட்ட பாதையில் சென்று கிழக்கு நோக்கி அமைக்கப்பட்ட முகப்பு வாசல் வழியாக உள்ளே சென்று இந்த ஒருங்கே அமைந்த இரண்டு கற்றளிகளையும் காணலாம்.
இந்த முகப்பு வாசலில் நுழையும் பொழுது வலது புறத்தில் உள்ள ஒரு அழகிய தூணில் வடமொழியில் பல்லவ மாமன்னர்களின் வம்சாவழி மற்றும் ராஜசிம்ம பல்லவனின் விருதுப் பெயர்களை எடுத்துரைக்கும் கல்வெட்டும் காணப்படுகின்றது. பிரம்ம சத்திரியர்கள் என்று நம்பப்படும் பல்லவப் பேரரசர்கள் பிரம்மா முதல் முதலாம் பரமேஸ்வரவர்மன் வரை உள்ள மன்னர்களின் பெயர்களும் சிதைந்த நிலையிலுள்ளது.
உள்ளே நுழைந்ததும் வலது புறத்தில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய விஜயநகர காலத்தை ஞாபகப்படுத்துகின்ற பதினாறுகால் கால் விழா மண்டபம் இத்திருக்கோயிலை அலங்கரிக்கின்றது. உள்ளே நுழைந்து நேரே சென்றால் ஸ்ரீதேவி பூதேவியுடன் வைகுண்ட பெருமாள் நின்ற நிலையில் அருள் பாலிக்கின்ற காட்சியை பக்திப் பெருக்குடன் வெளியிலிருந்து ஏக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் அழகிய கருடனை கண்டு வியந்து உள்ளே நுழைந்தால் ,
மகாமண்டபத்தின் வலது புறத்தில் வீர ஆஞ்சநேயர் காவல் புரிந்து கொண்டிருக்க, அதையும் தாண்டி அர்த்த மண்டபத்திற்குள் நுழையும்போது சுற்றி வைக்கப்பட்டுள்ள அழகிய புராதான சிலைகள் நம்மை வியப்பின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கின்றது.
இந்த சிலைகளின் அழகைக் பார்க்கும் பொழுது நாம் தன் நிலையை இழப்போம் என்பது நிதர்சனமான உண்மை. சண்டிகேஸ்வரர், சாஸ்தா, ஆடு முகத்துடன் தட்ஷன் வீரபத்திரரை வணங்கும் சிலை, தவ்வைத்தாய் , மஹாலஷ்மி தேவி இன்னும் சிதிலமடைந்த சில சிலைகள் உள்ளது. அதற்கு அடுத்துள்ள மூலஸ்தானத்தில் வைகுண்ட பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் அருள்பாலிக்கின்றார்.
இந்த திருக்கோவிலுக்கு பக்கத்தில் பலி பீடம், மகா நந்தி எதிரில் அமைந்திருக்க , திருப்புலிஸ்வரர் திருக்கோயிலும் அமைந்துள்ளது.
இத்திருக்கோவிலில் உள்ள மகா மண்டபத்தில் இரண்டு அழகிய துவார பாலகர்கள் காவல் புரிய உள்ளே கஜபிருஷ்ட அமைப்பில் அமைந்துள்ள கருவறையில் திருப்புலிஸ்வரர் லிங்க வடிவாகவும், அதற்குப் பின்னால் பல்லவர்களின் கோயில்களின் கலையம்சமாக விளங்கும் சோமாஸ்கந்தர் ( அமர்ந்த நிலையில் சிவன் மற்றும் பார்வதி அவர்கள் மடியில் குழந்தை முருகன் ) அழகான சிலை ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது . இங்குள்ள மகா மண்டபத்தில் சற்று வித்தியாசமான முறையில் சூரியன் இடதுபுறத்திலும் பைரவர் வலதுபுறத்திலும் நின்று சிவனை வழங்கி நிற்கின்றார்கள்.
தூங்கானைமாடம் வடிவில் அமைந்துள்ள இந்த கோயிலின் கோஷ்ட தெய்வங்களான நர்த்தன விநாயகர்,தக்ஷிணாமூர்த்தி தெற்கு திசையிலும், விஷ்ணு மூர்த்தி மேற்கு திசையிலும் , நான்முகன் மற்றும் அழகிய விஷ்ணு துர்கா வடக்கு திசையிலும் நின்று அருள் பாலிக்கின்றனர்.
நான்முகன் சிலைக்கு கீழே காணப்படும் கல்வெட்டு ஒன்றில் "கோமாரபன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் சோழமண்டலம் கொண்ட சுந்தரபாண்டியன் யாண்டு" எனக் காணப்படுகின்றது. இந்த ஊரில் உள்ள இறைவன் "திருப்புலிவாயல்"உடைய நாயனார் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.
இராஷ்டிரகூட மன்னன் இரண்டாம் கிருஷ்ணனின் 961 ஆம் ஆண்டு கல்வெட்டு உள்ளதாக இணையம் மூலம் அறிகிறேன், ஆனால் கோவிலில் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலே குறிப்பிட்டுள்ள இந்த ஆண்டில் தொண்டை மண்டலம் ராஷ்டிரகூடர்களின் வசம் இருந்தது என்பதற்கு இது ஒரு சான்றாக எடுத்துக்கொள்ளலாம்.
இதுமட்டுமல்லாமல் இந்த இரட்டை கற்றளிக்குப் பின்புறத்தில் தெற்கிலிருந்து வடக்காக சீரான இடைவெளியில் முறையே மகா கணபதி , அங்கையற்கண்ணி மற்றும் வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகர் கடவுளுக்கு தனித்தனியாக அழகிய சிறு கற்றளிகள் கட்டப்பட்டுள்ளது.
இங்கு காணப்படுகின்ற ஒவ்வொரு சிலைகளிலும் சிற்பக் கலைஞர்களின் கைவண்ணம் மிளிர்கிறது என்றாலும் , வடமேற்கு மூலையில் அமைந்துள்ள வள்ளி மற்றும் தெய்வயானையுடன் மயில் மீது அமர்ந்த நிலையில் பன்னிரண்டு கைகளும், ஆறு முகங்களும் கொண்ட முருகனின் சிரித்த முகத்துடன் கூடிய தத்துரூபமான சிலை சிற்பியின் திறனுக்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாக அமைகின்றது என்பதில் எள்ளளவும் வியப்பில்லை....
இந்த கற்றளி மற்றும் சிலைகளின் அழகையெல்லாம் கண்டுகளித்தபடியே வெளியே வந்த பொழுது மேகங்கள் அணிவகுத்து லேசான மழைச்சாரல் நம்மீது தூவியதை அனுபவித்துக்கொண்டே அங்குள்ள ஆலமரத்தின் விழுதுகள் சிறிய ஊஞ்சல் விளையாட்டு ஆடிவிட்டு மனநிறைவுடன் வாயிலூரிலிருந்து விடைபெற மனமில்லாமல் விடை பெறுகிறோம்.
இருப்பிடம்:
Tirupuliswar Vaikunteswar Temple
Vayalur, Tamil Nadu 603102
https://maps.app.goo.gl/LsAuYVkrgmVAGDqv9



வாயலூர் திருப்புலிஸ்வரர் மற்றும் வைகுண்டபெருமாள் திருக்கோயில் முகப்பு



பல்லவப்பேரரசர்களின் வம்சாவழி பெயர்களை கல்வெட்டுகளாக தாங்கி நிற்கும் தூண்






நிறைமாத கர்ப்பினியின் புடைப்புச்சிற்பம் பதினாறு கால் மண்டபத்திலுள்ள தூண்






பதினாறு கால் மண்டபமும், உட்புறத்திலிருந்து முகப்பு மண்டபத்தின் தோற்றமும்...



சதா ஸ்ரீதேவி பூதேவி சமேத வைகுண்ட பெருமாளை பக்தி சிரத்தையுடன் வணங்கும் கருடாழ்வார்


ஸ்ரீதேவி , பூதேவி உடன் வைகுண்ட பெருமாள்



தெற்கு நோக்கி நின்ற நிலையில் கோஷ்டத்தில் விநாயகர்


தட்சிணாமூர்த்தி

மிகத்துல்லியமான தூங்கானை அமைப்பு



அழகே உருவான மகிஷாசுரமர்த்தினி

வைகுண்ட பெருமாள் கோயிலின் சுற்றுச்சுவரில் உள்ள விநாயகர் புடைப்புச்சிற்பம்

பலி பீடத்திலிருந்து திருப்புலிஸ்வரர் திருக்கோயில்




சிவாலயத்தின் காவலர்கள்






இந்த முகபாவத்தின் அர்த்தத்தை வைகுண்ட வாசனே அறிவார்....



வாயலூர் அன்னை


சண்டிகேஸ்வரர்




ஆட்டுமுகத்துடன் தட்சன் மற்றும் வீரபத்திரர்



மகா லட்சுமி



வள்ளி , தெய்வயனை சமேத அழகிய முருகன்.

முத்துப் போன்ற பற்கள் வரிசையாய் விளங்கும் நகைமுகத்துடன், முத்திச் செல்வத்தை அருளுகின்ற தேவசேனைக்கு இறைவனே!
சக்தி வேல் ஏந்திய சரவணனே!
முத்திக்கு ஒரு வித்தே! குருபரனே! ..

என ஓதி நின்ற பெருமானே

முக்கண் கொண்ட பரமனுக்கு, 
வேதத்தில் முற்பட்டு நிற்கும் ப்ரணவத்தைக் கற்பித்துப், 
ப்ரம்ம விஷ்ணுக்களாகிய இருவரும், முப்பத்து மூன்று வகைத் தேவரும் உனது திருவடியைப் போற்ற, 
அவுணருடன் போர்செய்யவல்ல பெருமானே.....

திருப்புகழ்



















வரலாற்றுபயணங்கள் 2: ஐஹோளே



ஏறக்குறைய 1377 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் வாதாபியில்......😜😜
இந்த முறை பகைமை உணர்வோடல்ல..... கலை உணர்வோடு......🙂🙂
சாளுக்கிய பேரரசனான மாமன்னர் இரண்டாம் புலிகேசியின் தலைநகரான வாதாபியில் உள்ள குகைகளை காணும் ஆசையில் வாதாபி சென்றோம்.
வாதாபி செல்லும் வழி நெடுகிலும் , லேசான தூறல்களும், பளிச்சிடும் மின்னல்களும் எங்களை வரவேற்று அழைத்துச் சென்றது.
செல்லும் வழியெல்லாம் புலிகேசி மாமன்னரும், மாமன்னர் நரசிம்ம போத்தரசர் நம் கவனத்தை ஈர்த்தனர் கல்கி வாயிலாக.....
இரவு முதல் ஜாமத்தில் தொடங்கிய எங்களது பயணம் மூன்றாம் ஜாமம் ஆரம்பிக்கும் சமயத்தில் வாதாபி அடைந்தோம். தங்குமிடத்தில் வரவேற்பறையில் சில படங்களை கண்டோம். அங்கு இருந்த மகிஷாசுரமர்த்தினியின் படத்தை கண்டதும் வாதாபி குடைவரைகளை மறந்து , முதலில் அந்த சிற்பத்தை காண வேண்டும் என்ற ஆவல் மேலோங்கியது . அதன் விளைவாக காலையில் வாதாபியிலிருந்து சற்றே வடகிழக்கில் ஏறக்குறைய மூன்று காததூரமுள்ள ஐஹோளே என்னும் ஊருக்கு செல்லுகையில் வழிநெடுகிலும் பசுமை எங்கு நோக்கினும் பச்சை நிறம். வலது புறத்தில் சற்று தூரத்தில் மேகங்களை தாங்கி நிற்கும் சிறிய குன்றுகள், ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தும் லேசான சாரல் மழை.
மனதிற்குள் மிகுந்த பரவசத்துடன் துர்கை கோயில் எது என்று விசாரித்து கோவிலை அடைந்ததும், நம்மில் அடைத்து வைத்திருந்த பல பரவசம் எண்ணங்கள் எல்லாம் வெடித்து சிதறியது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை நான் இதுவரை கேள்விப் பட்டிராத ஓர் பிரம்மாண்டமான வரலாற்றுப் பக்கங்களைப் தன்னுள்ளே கொண்டிருந்த ஊர் இந்த ஐஹோளே..
பார்க்கும் இடமெல்லாம் பழமையை பறைசாற்றும் கோயில்கள், கோயிலினுள்ளே புல்வெளிகள் போர்திய தரைகள், மணம் வீசும் பூக்களைக் கொண்ட குறுஞ்செடிகள். ஏறக்குறைய 120 க்கும் மேலான இந்து , சமண , புத்த கோயில்கள். ஐந்தாம் நூற்றாண்டில் தொடங்கி பதிமூன்றாம் நூற்றாண்டு வரை பல கட்டுமானப் பணிகளையும் புனரமைப்புக்களையும் பெற்றுள்ளன இக்கோயில்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் அதனுடைய வரலாற்றுப் பயணத்தை!!!!
சாளுக்கிய பேரரசின் தலைநகராக விளங்கிய இந்த ஊர் முதலாம் புலிகேசி (544 -567) காலத்தில் வாதாபிக்கு மாற்றப்பட்டுள்ளது . இருந்தபோதிலும் சாளுக்கியப் பேரரசின் முக்கியமான நகரமாகவே அதன்பின் பல நூற்றாண்டுகளாக விளங்கிவந்துள்ளது.
இங்குள்ள கல்வெட்டு ஒன்றில் இரண்டாம் புலிகேசியின் (610 - 642) தென்னாட்டுப் படையெடுப்பு அதற்கு முந்தைய மன்னனான மங்களேசனை(598 -610) முறியடித்தது போன்ற தகவல்கள் காணப்படுகின்றது.... முதலாம் புலிகேசியின் மகன் முதலாம் கீர்த்திவர்மன் (567 -598) மங்களேசனின் அண்ணன் என்பதும் , இரண்டாம் புலிகேசியின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.
"நகரேஷு காஞ்சி"என்று குறிப்பிட்ட மகாகவி பாரவி பற்றிய தகவல்களும் இங்குள்ள கல்வெட்டுகளில் காணப்படுகிறது.
642 ஆம் ஆண்டில் நடைபெற்ற வாதாபிப் போரில் நரசிம்ம பல்லவரால்(630 -668) முறியடிக்கப்பட்டு சாளுக்கியப் பேரரசு அழிக்கப்பட்டு இரண்டாம் புலிகேசி மன்னரும் கொல்லப்பட்டுள்ளார்....
முதலாம் அமோகவர்ஷ நிருபதூங்கண்
(814 - 878) என்ற ராஷ்ட்ரகூட பேரரசரின் ஆட்சி முறையைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகளும் இந்த ஊரில் காணப்படுகின்றது. இந்த ஊரின் வரலாறு மிகப்பெரிய வராலாற்றுப் புதினங்கள் எழுதுவதற்கு போதுமான தகவல்களை கொண்டுள்ளதால் , நாம் இதை இப்படியே விட்டு விட்டு துர்கை கோவிலுக்குள் செல்லலாம்.
இந்திய தொல்பொருள் துறையின் பெரிய பாதுகாப்பு வளையத்தின் வடமேற்கு மூலையின் வழியாக உள்ளே நுழைந்தால் ஓர் அழகிய அம்பாரி வைத்து யானையின் பின்புறத்தை போல் தோற்றமளிக்கும், பார்க்கும் பொழுதே பழமையைப் பிரதிபலிக்கும் கோயிலைக் காணலாம்...
ஆம் , இது ஒரு துல்லியமாக வடிவமைக்கப்பட்ட கஜபிருஷ்ட அமைப்பு. இந்தக் கோயிலில் ஒரு இடத்தையும் விடாமல் அனைத்து இடத்திலும் புடைப்புச் சிற்பங்கள்.
கிழக்கு மேற்காக அமைந்துள்ள இந்தக் கோயில் ஐந்தடி உயரத்தில் அமைக்கப்பட்டு சுற்றிலும் இரண்டரை அடி உயர மதில் சுவர் போன்ற அமைப்பும் , அதற்குமேல் ஏறக்குறைய ஆறு அடி உயரத்தில் தூண்களும் தூண்களுக்கு மேல் தளமும் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தூண்களின் சிறப்பம்சம் என்னவென்றால் காதல். அன்பின் வெளிப்பாட்டை அனைத்து தூண்களிலும் காணலாம். இவர்கள் மேற்கூரையிலும் சிற்பங்களை செதுக்க மறக்கவில்லை , அதுவும் மிகத் துல்லியமாக தெளிவாக வடிவமைத்துள்ளனர்.
கருவறையின் உள்ளே எந்தவித தெய்வமும் காணப்படவில்லை அர்த்தமண்டபம் பெரியதாகவும் பல குறுஞ்சிற்பங்கள் கொண்ட தூண்களையும், வித்தியாசமான வடிவங்கள் கொண்ட சாளரங்களையும் கொண்டுள்ளது.
இந்தக் கோயிலின் கோஷ்டத்தில் , ரிஷபத்தில் பத்து கைகளுடன் சாய்ந்து நிற்கும் சிவன் , நரசிம்ம மூர்த்தி, நான்கு கைகளுடன் கருடன் மீது விஷ்ணு மூர்த்தி,பூதேவியை தோளில் சுமக்கும் வராக மூர்த்தி, மகிஷாசுரமர்த்தினி ( பார்த்த மாத்திரத்தில் வாதாபி குடைவரையை மறந்து இங்கே வரவைத்த அற்புத சிற்பம் ) மற்றும் எட்டு கைகளுடன் விஷ்ணு மூர்த்தி போன்ற களகமூர்த்தி காணப்படுகின்றனர் .
இது மட்டுமல்ல அனைத்து தூண்களிலும் சிற்பங்கள் காணப்படுகின்றன.....
மேலும் இந்தக் கோவிலில் துர்க்காதேவி பிரதிஷ்டை செய்யப்படவில்லை , கோட்டைக்கு அருகில் உள்ள கோவில் 'துர்கடகுடி' என்பது துர்கா கோயில் ஆயிற்று.
இது வெறும் ஆரம்பம் தான் சாளுக்கிய கட்டடக்கலையின் உச்சத்தை தொட்டது அருகிலுள்ள பட்டடக்கல் எனும் ஊர்....
அதைப் பற்றி விரிவாக அடுத்தடுத்த பதிவில் அறியலாம்......




ஐஹோளே கோயில்(கோட்டை அருகில் அமைந்த கோவில்)



கஜபிருஷ்ட அமைப்பில் காணப்படும் கோயில்,ஐஹோளே, கர்நாடகம்



புல்வெளி தழுவிய தரைகளோடு திருக்கோயில்,ஐஹோளே,



கோயிலின் முகப்புத் தோற்றம்


யாழிகளின் வாயிலிருந்து அழகிய முத்துமணிகள் உமிழ்வது போன்ற அமைப்புடைய தோரணங்களுடன்
(முக்தாக்ராஸம் )
கூடிய தூண்

தகவல் : சங்கரநாராயணன் G

ஐஹோளே துர்கா கோயில் கோஷ்டத்தில் அமைந்துள்ள நரசிம்ம மூர்த்தி

ஐஹோளே துர்கா கோயில் கோஷ்டத்தில் அமைந்துள்ள சங்கு சக்ரதாரியாக விஷ்ணு கருடன் மீது.......

ஐஹோளே துர்கா கோயில் கோஷ்டத்தில் அமைந்துள்ள மகிஷாசுரமர்த்தினி. அழகிய முகத்துடன் மகிசாசுரமர்த்தினி இந்த சிற்பத்தை பார்த்தவுடன் தான் இங்கு வர வேண்டும் என்ற எண்ணம் தூண்டியது, கைகளில் சங்கு சக்கரத்துடன் பல்வேறு ஆயுதங்கள் , தத்ரூபமான சிம்மவாகனம், அதுவும் எருமை மாட்டு கோபமாக பார்க்கின்ற தோரணையில் , மகிஷாசுரன் மீது காலை வைத்து இருக்கும் காட்சி சிம்மவாகினி.....


சன்ன வீரத்தோடு ஒய்யாரமாக மகிஷனை வதம் செய்யும் சிம்ம வாகினி..... தலைக்கவசத்தின் அழகான அலங்காரமும், கழுத்தில் அணிகலன்களுடன் அழகிய மகிஷாசுரமர்த்தினி...



களகநாதர், ஆஷ்ட புஜம், சிவரூபம்.
பிரம்மா , விஷ்ணு மற்றும் 
சிவன் முப்பெரும் தேவரின் ஆயுதங்கள் ஏந்தி முதுகெலும்பை மாலையாய் தரித்தவர்


கார்மேகங்கள் சூழ்ந்திருக்க பச்சை புல்வெளிகள் தழுவி நிற்க வித்தியாசமான கோணத்தில் .......


நிறைய வெவ்வேறு தோரணங்களை கண்டிருப்போம், கல்லினால் கலைநயம் மிக்க தோரணம் அமைத்த சிற்பிகள் மாமேதைகள் தானே...


மேல் ஆமலகம்:(நெல்லிக்கனி வடிவில் அமையப்பெற்ற தூணினின் மேல் பக்கம் )
Courtesy : Sankara Narayananan G 




சாளுக்கியப் பேரரசின் சின்னம்




கருவறை காலியாக உள்ளது








கோயில் அருகேயுள்ள அழகிய கேணி.


வித விதமான சாளரங்கள் :













அர்த்தநாரீஸ்வரர் , உள்ளங்காலில் இருந்து உச்சிவரை ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசங்களை நுணுக்கமாக வடிவமைத்துள்ளனர். காலில் உள்ள தண்டை, இடுப்பில் உள்ள ஒட்டியாணம் , கையிலுள்ள வளையங்கள் , காதில் உள்ள குண்டலங்கள், கண்ணின் புருவ அமைப்பு, இடுப்பின் நளினம் , இன்னும் இன்னும்....



தலை இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் இந்த காதலர்களின் கொஞ்சல் மொழி



ஆரத்தழுவும் ஆரணங்கு, முதுகை வளைத்து பிடிப்பதிலேயே அவள் மீது கொண்டுள்ள பாசத்தை புரிய வைக்கின்றது...


அர்த்த மண்டபத்தின் வாயிலில் காணப்படும் அழகிய சிற்பங்கள்


தர்ப்பண பதகம்





Popular Posts