Thursday, July 11, 2019

வரலாற்றுபயணங்கள்: 1 :பட்டடக்கல் -இராவணன்

மகா சிற்பிகளின் கற்பனை அருவி ஒரு சில இடங்களில் சற்று அதிகமாகவே பொங்கிப் பெருகி நம்மை வியப்பின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கின்றது...

தசகண்ட இராவணன் கைலாயத்தை பெயர்த்தெடுக்கும் காட்சியைப் பல கோயில்களில் நாம் சாதாரணமாக கண்டிருப்போம்.

இங்கு நாம் காணும் சிற்பம் ஒரு மண்டபத்தில் உள்ள தூணில் காணப்படும் புடைப்புச் சிற்பமாகும்.

இந்தச் சிற்பத்தில் ,
கைலாய மலையில் வசிக்கும் வெவ்வேறு மிருகங்கள்,
மந்தி,அரவம்,அரிமா, வராகம் , அழகிய மஞ்சை போன்றவைகளும் , பல தவசிகளும், கைலாய காவலர்களும் , சின்ன சின்ன சில்மிஷங்கள் செய்யும் பூதகணங்களும், பறக்கும் பூதங்களும் தெளிவாக காணப்படுவதுடன், மலையின் உச்சியில் சிவன் மற்றும் பார்வதி தேவி ரிஷபத்துடன் காணப்படுகின்றனர்.

இந்த ஒட்டுமொத்த மலையையும் தன்னுடைய பத்தொன்பது கைகளால் தூக்கி நிறுத்தி இருக்கும் ராவணன் , இருபதாவது கையை தன் இடையில் உள்ள உடைவாளின் மீது வைத்திருப்பது போன்று அமைத்திருக்கின்றனர்.

இத்தகைய சிற்பத்தை தான் நாம் பல இடங்களில் பார்த்திருக்கின்றோமே என்று அனைவருக்கும் ஒரு சிறு சந்தேகம் வருவது இயல்பு.....

சற்றே அவதானித்து பார்த்தால், இங்கு ராவணேஸ்வரன் கைலாயத்தை தூக்கும் காட்சி, அவனின் பின்புறத்திலிருந்து நாம் பார்ப்பது போல வடிவமைத்துள்ளனர்... ராவணனின் சிற்பத்தை, பாதம் முதல் சிரசுகள் வரை அதிகமான கவனத்துடன் செதுக்கியுள்ளனர்.

அவனுடைய வலது கால் தரையில் சற்றே பதிந்தும் , ஒரு கனமான பொருளை தூக்கும் பொழுது ஒரு காலை முற்றிலும் மடக்கி ஒரு காலை ஊனி எழும்பும் நிலையையும், பின்புறத்திலிருந்து பார்க்கும்போது கைகளில் காணப்படும் வளைவுகளையும், பத்து சிரங்களில் முதுகுப்புறம் காணப்படும் ஐந்து சிரங்களையும், மிக நுட்பமாகவும் , தெளிவாகவும் சிற்பமாக வடித்துள்ளனர். அது மட்டுமல்ல ஒரு அணிகலன் , கழுத்தில் அணியப்பட்ட பிறகு பின்புறமாக இருந்து பார்த்தால் எவ்வாறு இருக்கும் என்பதையும் இந்த சிற்பத்தில் நாம் காணலாம்.

இதைக்கண்டு வியப்பதைத் தவிர வேறு என்ன செய்ய .......

#வாதாபி
#சாளுக்கியப்_பேரரசு
#பட்டடக்கல் , #இராவணன்,
#புடைப்புச்_சிற்பம்
#வரலாற்றுப்_பயணங்கள்
#chalukya_architecture
#Pattadakal

No comments:

Post a Comment

Popular Posts