Thursday, July 11, 2019

வரலாற்றுப்பயணங்கள் 3: திருப்பலிஸ்வரர் :வைகுண்டபெருமாள் :வாயலூர்


வரலாற்றுப்பயணங்கள் 3:  திருப்பலிஸ்வரர் :வைகுண்டபெருமாள் :வாயலூர் 
23 ஜூன்

தொண்டை மண்டலத்தில் , மழைக்காலத்தில் பொழியும் சொற்ப நீரை கடலில் கொண்டு சேர்க்கும் பாலாற்றின் முகத்துவாரத்தில் அருகே அமைந்துள்ள அழகிய கிராமம் வாயலூர் . இந்த ஊரின் மத்தியில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட அழகிய திருப்புலிஸ்வரர் மற்றும் வைகுண்ட பெருமாள் கற்றளிகள் பழைய வரலாற்றுச் சுவடுகளை தன்னகத்தே தாங்கிக் இன்றளவும் வசீகரிக்கும் அழகிய வகையில் அமைந்துள்ளது.
பெரிய ஆலமரத்தின் நிழலின் வழியாக போடப்பட்ட பாதையில் சென்று கிழக்கு நோக்கி அமைக்கப்பட்ட முகப்பு வாசல் வழியாக உள்ளே சென்று இந்த ஒருங்கே அமைந்த இரண்டு கற்றளிகளையும் காணலாம்.
இந்த முகப்பு வாசலில் நுழையும் பொழுது வலது புறத்தில் உள்ள ஒரு அழகிய தூணில் வடமொழியில் பல்லவ மாமன்னர்களின் வம்சாவழி மற்றும் ராஜசிம்ம பல்லவனின் விருதுப் பெயர்களை எடுத்துரைக்கும் கல்வெட்டும் காணப்படுகின்றது. பிரம்ம சத்திரியர்கள் என்று நம்பப்படும் பல்லவப் பேரரசர்கள் பிரம்மா முதல் முதலாம் பரமேஸ்வரவர்மன் வரை உள்ள மன்னர்களின் பெயர்களும் சிதைந்த நிலையிலுள்ளது.
உள்ளே நுழைந்ததும் வலது புறத்தில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய விஜயநகர காலத்தை ஞாபகப்படுத்துகின்ற பதினாறுகால் கால் விழா மண்டபம் இத்திருக்கோயிலை அலங்கரிக்கின்றது. உள்ளே நுழைந்து நேரே சென்றால் ஸ்ரீதேவி பூதேவியுடன் வைகுண்ட பெருமாள் நின்ற நிலையில் அருள் பாலிக்கின்ற காட்சியை பக்திப் பெருக்குடன் வெளியிலிருந்து ஏக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் அழகிய கருடனை கண்டு வியந்து உள்ளே நுழைந்தால் ,
மகாமண்டபத்தின் வலது புறத்தில் வீர ஆஞ்சநேயர் காவல் புரிந்து கொண்டிருக்க, அதையும் தாண்டி அர்த்த மண்டபத்திற்குள் நுழையும்போது சுற்றி வைக்கப்பட்டுள்ள அழகிய புராதான சிலைகள் நம்மை வியப்பின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கின்றது.
இந்த சிலைகளின் அழகைக் பார்க்கும் பொழுது நாம் தன் நிலையை இழப்போம் என்பது நிதர்சனமான உண்மை. சண்டிகேஸ்வரர், சாஸ்தா, ஆடு முகத்துடன் தட்ஷன் வீரபத்திரரை வணங்கும் சிலை, தவ்வைத்தாய் , மஹாலஷ்மி தேவி இன்னும் சிதிலமடைந்த சில சிலைகள் உள்ளது. அதற்கு அடுத்துள்ள மூலஸ்தானத்தில் வைகுண்ட பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் அருள்பாலிக்கின்றார்.
இந்த திருக்கோவிலுக்கு பக்கத்தில் பலி பீடம், மகா நந்தி எதிரில் அமைந்திருக்க , திருப்புலிஸ்வரர் திருக்கோயிலும் அமைந்துள்ளது.
இத்திருக்கோவிலில் உள்ள மகா மண்டபத்தில் இரண்டு அழகிய துவார பாலகர்கள் காவல் புரிய உள்ளே கஜபிருஷ்ட அமைப்பில் அமைந்துள்ள கருவறையில் திருப்புலிஸ்வரர் லிங்க வடிவாகவும், அதற்குப் பின்னால் பல்லவர்களின் கோயில்களின் கலையம்சமாக விளங்கும் சோமாஸ்கந்தர் ( அமர்ந்த நிலையில் சிவன் மற்றும் பார்வதி அவர்கள் மடியில் குழந்தை முருகன் ) அழகான சிலை ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது . இங்குள்ள மகா மண்டபத்தில் சற்று வித்தியாசமான முறையில் சூரியன் இடதுபுறத்திலும் பைரவர் வலதுபுறத்திலும் நின்று சிவனை வழங்கி நிற்கின்றார்கள்.
தூங்கானைமாடம் வடிவில் அமைந்துள்ள இந்த கோயிலின் கோஷ்ட தெய்வங்களான நர்த்தன விநாயகர்,தக்ஷிணாமூர்த்தி தெற்கு திசையிலும், விஷ்ணு மூர்த்தி மேற்கு திசையிலும் , நான்முகன் மற்றும் அழகிய விஷ்ணு துர்கா வடக்கு திசையிலும் நின்று அருள் பாலிக்கின்றனர்.
நான்முகன் சிலைக்கு கீழே காணப்படும் கல்வெட்டு ஒன்றில் "கோமாரபன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் சோழமண்டலம் கொண்ட சுந்தரபாண்டியன் யாண்டு" எனக் காணப்படுகின்றது. இந்த ஊரில் உள்ள இறைவன் "திருப்புலிவாயல்"உடைய நாயனார் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.
இராஷ்டிரகூட மன்னன் இரண்டாம் கிருஷ்ணனின் 961 ஆம் ஆண்டு கல்வெட்டு உள்ளதாக இணையம் மூலம் அறிகிறேன், ஆனால் கோவிலில் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலே குறிப்பிட்டுள்ள இந்த ஆண்டில் தொண்டை மண்டலம் ராஷ்டிரகூடர்களின் வசம் இருந்தது என்பதற்கு இது ஒரு சான்றாக எடுத்துக்கொள்ளலாம்.
இதுமட்டுமல்லாமல் இந்த இரட்டை கற்றளிக்குப் பின்புறத்தில் தெற்கிலிருந்து வடக்காக சீரான இடைவெளியில் முறையே மகா கணபதி , அங்கையற்கண்ணி மற்றும் வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகர் கடவுளுக்கு தனித்தனியாக அழகிய சிறு கற்றளிகள் கட்டப்பட்டுள்ளது.
இங்கு காணப்படுகின்ற ஒவ்வொரு சிலைகளிலும் சிற்பக் கலைஞர்களின் கைவண்ணம் மிளிர்கிறது என்றாலும் , வடமேற்கு மூலையில் அமைந்துள்ள வள்ளி மற்றும் தெய்வயானையுடன் மயில் மீது அமர்ந்த நிலையில் பன்னிரண்டு கைகளும், ஆறு முகங்களும் கொண்ட முருகனின் சிரித்த முகத்துடன் கூடிய தத்துரூபமான சிலை சிற்பியின் திறனுக்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாக அமைகின்றது என்பதில் எள்ளளவும் வியப்பில்லை....
இந்த கற்றளி மற்றும் சிலைகளின் அழகையெல்லாம் கண்டுகளித்தபடியே வெளியே வந்த பொழுது மேகங்கள் அணிவகுத்து லேசான மழைச்சாரல் நம்மீது தூவியதை அனுபவித்துக்கொண்டே அங்குள்ள ஆலமரத்தின் விழுதுகள் சிறிய ஊஞ்சல் விளையாட்டு ஆடிவிட்டு மனநிறைவுடன் வாயிலூரிலிருந்து விடைபெற மனமில்லாமல் விடை பெறுகிறோம்.
இருப்பிடம்:
Tirupuliswar Vaikunteswar Temple
Vayalur, Tamil Nadu 603102
https://maps.app.goo.gl/LsAuYVkrgmVAGDqv9



வாயலூர் திருப்புலிஸ்வரர் மற்றும் வைகுண்டபெருமாள் திருக்கோயில் முகப்பு



பல்லவப்பேரரசர்களின் வம்சாவழி பெயர்களை கல்வெட்டுகளாக தாங்கி நிற்கும் தூண்






நிறைமாத கர்ப்பினியின் புடைப்புச்சிற்பம் பதினாறு கால் மண்டபத்திலுள்ள தூண்






பதினாறு கால் மண்டபமும், உட்புறத்திலிருந்து முகப்பு மண்டபத்தின் தோற்றமும்...



சதா ஸ்ரீதேவி பூதேவி சமேத வைகுண்ட பெருமாளை பக்தி சிரத்தையுடன் வணங்கும் கருடாழ்வார்


ஸ்ரீதேவி , பூதேவி உடன் வைகுண்ட பெருமாள்



தெற்கு நோக்கி நின்ற நிலையில் கோஷ்டத்தில் விநாயகர்


தட்சிணாமூர்த்தி

மிகத்துல்லியமான தூங்கானை அமைப்பு



அழகே உருவான மகிஷாசுரமர்த்தினி

வைகுண்ட பெருமாள் கோயிலின் சுற்றுச்சுவரில் உள்ள விநாயகர் புடைப்புச்சிற்பம்

பலி பீடத்திலிருந்து திருப்புலிஸ்வரர் திருக்கோயில்




சிவாலயத்தின் காவலர்கள்






இந்த முகபாவத்தின் அர்த்தத்தை வைகுண்ட வாசனே அறிவார்....



வாயலூர் அன்னை


சண்டிகேஸ்வரர்




ஆட்டுமுகத்துடன் தட்சன் மற்றும் வீரபத்திரர்



மகா லட்சுமி



வள்ளி , தெய்வயனை சமேத அழகிய முருகன்.

முத்துப் போன்ற பற்கள் வரிசையாய் விளங்கும் நகைமுகத்துடன், முத்திச் செல்வத்தை அருளுகின்ற தேவசேனைக்கு இறைவனே!
சக்தி வேல் ஏந்திய சரவணனே!
முத்திக்கு ஒரு வித்தே! குருபரனே! ..

என ஓதி நின்ற பெருமானே

முக்கண் கொண்ட பரமனுக்கு, 
வேதத்தில் முற்பட்டு நிற்கும் ப்ரணவத்தைக் கற்பித்துப், 
ப்ரம்ம விஷ்ணுக்களாகிய இருவரும், முப்பத்து மூன்று வகைத் தேவரும் உனது திருவடியைப் போற்ற, 
அவுணருடன் போர்செய்யவல்ல பெருமானே.....

திருப்புகழ்



















No comments:

Post a Comment

Popular Posts