Thursday, August 8, 2019

வரலாற்றுப்_பயணங்கள்:12- சங்கமேஸ்வரர்_திருக்கோயில்

சங்கமேஸ்வரர் திருக்கோயில், கூடுதுறை , பவானி.
காவிரி மற்றும் பவானி நதிகள் செழுமைப்படுத்தும் இடம் கூடுதுறை....
இந்த இரண்டு நதிகளும் இணையும் இடத்தில் உள்ள அழகிய கற்றளி சங்கமேஸ்வரர் திருக்கோயில்.
திருஞானசம்பந்தரால் தேவாரப் பதிகம் பாடப்பெற்ற இக்கோயில் ஏறக்குறைய 1400 மேல் ஆண்டுகளுக்கு பழமையானதாக இருக்க வேண்டும்.
ஏழாம் நூற்றாண்டுகளில் காவிரி மற்றும் பவானி ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டப்படாத நிலையில் வருடத்தின் அனைத்து நாட்களிலும் நீரால் சூழப்பட்டு இருந்த இந்த இடம் எவ்வளவு ரம்மியமாக இருந்திருக்கும் என்னும் போதே மனதில் ஒரு பரவசம் ஏற்படுகின்றது .
சங்கமேஸ்வரர் கோயில் 14 நூற்றாண்டுகள் பழமையானதாக இருந்த போதிலும் இங்குள்ள மற்ற சன்னதிகள் 16 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் தொடங்கி பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை பல திருப்பணிகள் நடைபெற்று உள்ளது என்பதை இங்குள்ள பல்வேறு கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.
இந்தக் கோயிலில் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர்(1509 -1529) காலத்தில் கொங்கு மண்டலத்தின் நிர்வாகியாக இருந்த பாலதேவராசன் என்பவரது கல்வெட்டும் , தாரமங்கலத்தை மையமாகக் கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னர் கெட்டிமுதலி என்பவரது கல்வெட்டும் இங்கு நடைபெற்ற திருப்பணிகளை பற்றி கூறுகின்றது. இந்த கெட்டி முதலியார் என்பவர் தாரமங்கலத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலை கட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வெட்டுகளில் இங்குள்ள இறைவன் திருநண்ணாவுடையார்
எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
சங்கமேஸ்வரர் திருக்கோயிலின் வடக்கு நோக்கி அமைந்துள்ள ராஜகோபுரத்தின் நேராக ராஜகோபுரத்தை நோக்கியவாறு ராஜகோபுர நந்தியும் அதற்கு சற்று முன்பு இடதுபுறத்தில் விநாயகரும், மற்றும் வலது புறத்தில் வீர ஆஞ்சநேயரும் தனி சன்னதிகளில் வீற்றிருக்கின்றார்கள்.
இத்திருக்கோயிலின் இந்த வடக்கு புற கோபுரம் ஒரு பெரிய கோட்டையின் பிரதான நுழைவாயிலைப் போல மிகவும் கவனத்துடன் பாதுகாப்பான முறையிலும், மிகுந்த கலை நுணுக்கத்துடனும் கட்டப்பட்டுள்ளது.இங்குள்ள மரகதவுகளில் இரும்பினாலான கூர்மையான கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கின்றது.
இந்தக் கதவின் பின்புறத்தில் பக்கத்துக்கு இரண்டாக நான்கு சிறிய தளங்கள், போர்வீரர்கள் கோட்டைப் பாதுகாப்பிற்காக நின்று காவல் புரியலாம் என்று யோசிக்கும் அளவிற்கு நேர்த்தியான முறையில் உள்ளது.
நுழைவாயிலின் இடது மற்றும் வலது புறங்களில் குறுஞ்சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது, மேலும் விஜயநகர பேரரசுகளில் கட்டிடக்கலை பாணியில் , வாசலுக்கு முன் புறம் எட்டு தூண்கள் பக்கத்துக்கு நான்கு தூண்களாக நுணுக்கமான சிற்பங்களுடன் நம்மை வசீகரிக்கிறது.
இந்தப் பிரதான நுழைவாயில் கொண்ட ராஜ கோபுரத்தின் வலது புறத்தில் பரமபதவாசல் ஒன்றும் உள்ளது .
இந்த ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்ததும் , இடது புறத்தில் முத்துக்குமாரசாமி என்ற பெயருடன் , அழகிய முன் மண்டபத்துடன் கூடிய முருகன் தனி சன்னதியிலும் , வலது புறத்தில் ராஜ கணபதி தனி சன்னதியிலும் அமர்ந்து நம்மை வரவேற்கின்றார்கள்.
இவர்களை வணங்கி கடந்து செல்லும் பொழுது வலது புறத்தில் ஆதிகேசவப் பெருமாள் , வேணுகோபால சுவாமி ,லஷ்மி நரசிம்ம மூர்த்தி மற்றும் சௌந்தரவல்லி தாயார் ஆகியவர்கள் தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றார்கள்.
இதற்கு அடுத்து வருவது வேதநாயகி அம்மன் கோயில். இந்தக் கோயிலின் முகப்பில் பல நுணுக்கமான பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கக் கூடிய அழகு மிகுந்த சிற்பங்களுடன் கூடிய மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் வழியே மகா மண்டபத்தை அடைந்து அர்த்த மண்டபத்தின் வழியாக கருவறையில் உள்ள வேதநாயகி அம்மனை காணலாம் .
இந்த மகா மண்டபத்தில் உள்ள தூண்களில் பலவகையான அரிய சிற்பங்களும், மகாமண்டபம் சுற்றுச்சுவரின் உன் பக்கத்தில் , சுவரும் மேல் தளமும் இணையும் இடத்தில் பல்வேறு புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றது...
இந்தப் புடைப்பு சிற்பத்தில் பிரம்மா, விஷ்ணு,மகிஷாசுரமர்தினி, முருகன்,விநாயகர் , பூதகணங்கள் முனிவர்கள் மற்றும் யானைத் தலையும், மனித உடலும் சிங்கதின் கால்களும் கொண்ட உருவம் செதுக்கப்பட்டுள்ளது.
மேலும் ராமாயணத்தில் அனுமன் சிம்மாசனத்தில் அமர்ந்துள்ள தசகண்ட ராவணனை, அவரது அமைச்சரவையில் சந்திக்கும் பொழுது , அந்த சிம்மாசனத்திற்கு சமமானதொரு ஆசனத்தை தன் வாலால் அமைத்து நேருக்கு நேராக அமர்ந்து உரையாடும் காட்சி ஒன்று தத்ரூபமாக காணப்படுகிறது.
இந்த மகா மண்டபத்திலிருந்து கர்ப்ப கிரகத்தை சுற்றி வர ஒரு உள்சுற்று பாதை உள்ளது இந்தப் பாதை, சிங்கங்களை தாங்கி நிற்கும் யானைகளை கொண்ட தூண்களால் அமைக்கப்பட்டுள்ளது. கர்ப்ப கிரகத்தை சுற்றி பல கோஷ்ட தெய்வங்கள் உள்ளனர் , மேலும் சுற்றி முடிக்கும் இடத்தில் வல்லபகணபதி பெரிய சிலையாக மேற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார்.
இச் சுற்று முடிந்து மீண்டும் மகா மண்டபத்திற்குள் நுழையும்போது இடது புறத்தில் எண்கோண வடிவிலான அழகிய பள்ளி அறை உள்ளது.
வேதநாயகி அம்மனை சந்தித்து வெளியில் வரும் பொழுது தூங்கா விளக்கு மண்டபம் ஒன்றும் பலிபீடம் ஒன்றும் கோயிலுக்கு நேர் எதிரே காணப்படுகின்றது.
திருநண்ணாவுடையார் :
சங்கமேஸ்வரர் கோயிலில் நுழைய வடக்கு , கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நுழைவாயில்கள் உள்ளது வடக்குப் நுழைவாயிலின் முன்பு இரண்டு புறங்களிலும் முருகன் மற்றும் விநாயகர் சிறு கோயில்கள் உள்ளன . அதே போன்று கிழக்கு புறத்திலும் விநாயகர் மற்றும் முருகன் தனி சன்னதிகள் உள்ளன. கிழக்குப்புற வாயிலுக்கு எதிராக கொடி மரம் பலி பீடம் தூங்கா விளக்கு ஏற்றும் மிகப் பெரிய கல் தூண் ஒன்று சிறிய மண்டபத்துடன் உள்ளது இந்த அமைப்பிற்கு நேரெதிரே வெளி மதில் சுவரில் ஒரு சிறிய மண்டபத்துடனும் , ஒரு சிறிய கோபுரத்துடனும் காவிரியை நோக்கி ஒரு நுழைவாயில் உள்ளது.
இந்த வாயிலின் வழியாக காவேரிப் படித்துறை அடையலாம். கிழக்குப் புற வாயில் வழியாக கோயிலுக்குள் நுழையும் பொழுது அழகிய புடைப்புச் சிற்பங்களுடன் கூடிய பெரிய கல்தூண் மண்டபம் உள்ளது, இந்த மண்டபத்தில் அழகிய நந்தி ஒன்று சதா சங்கமேஸ்வரரை வைத்த கண் வாங்காமல் காவல் காத்து அமர்ந்துள்ளது....
இவற்றைக் கடந்து மகா மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்னால் இரண்டு பெரிய துவாரபாலகர்கள் சிலையும், உள் சுற்று சுவர் ஆரம்பிக்கும் இடத்தில் சுவற்றில் ஜான் உயரமுள்ள பல, வசீகரிக்கக் கூடியதும், அழகிய முகபாவங்த்துடனும் கூடிய புடைப்புச் சிற்பங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றது. இவற்றை ரசித்துக்கொண்டே மகா மண்டபத்தில் நுழைந்து சற்றே தலை சாய்ந்த நிலையில் உள்ள சங்கமேஸ்வரரை காணலாம்.
நன்றாங் கிசைமொழிந்து நன்னுதலாள்
பாகமாய் ஞால மேத்த
மின்றாங்கு செஞ்சடையெம் விகிதர்க்
கிடம்போலும் விரைசூழ் வெற்பில்
குன்றோங்கி வன்றிரைகள் மோத
மயிலாலுஞ் சாரற் செவ்வி
சென்றோங்கி வானவர்க ளேத்தி
அடிபணியுந் திருந ணாவே
திருஞானசம்பந்தர்
மகாமண்டபத்தில் மைய மேல் தளத்திற்கும், பக்கத்தில் உள்ள தளத்திற்கும் இடையே உள்ள உயர வேறுபாட்டில் முழுவதுமாக சாளரங்கள், சூரிய ஒளியும் மற்றும் காற்று சுழற்சிக்கும் பயன்படும் வகையில் நுட்பமாக அமைக்கப்பட்டுள்ளது.
மகா மண்டபத்திலிருந்து தெற்குப் புறத்தில் உள்ள வழியின் மூலமாக உள் சுற்றுப் பாதையை அடையலாம், இந்த ஒரு சுற்றுப்பாதையில் இடதுபுறத்தில் 63 நாயன்மார்களின் சிலைகளும், சப்த கன்னிகள் மற்றும் வீரபத்திரர் சிலையும், வலது புறத்தில் விநாயகர் மற்றும் தக்ஷிணாமூர்த்தியின் தனி சிலைகளும் காணப்படுகின்றது. தக்ஷிணாமூர்த்திக்கு அருகில் அழகிய கல் சங்கிலியுடன் கூடிய நான்கு தூண்கள் உள்ளது.
மேற்குப் புறத்தில் இடதுபுறத்தில் விநாயகர் மற்றும் பஞ்சபூத லிங்க சிலைகள், அதற்கடுத்தாற்போல் வள்ளி, தெய்வயானை முருகன் சிலைகளும், வலது புறத்தில் லிங்கோத்பவர் மற்றும் சிறிய அளவிலான விஷ்ணு மூர்த்தி மற்றும் நான்முகனின் அழகிய புடைப்புச் சிற்பங்களும் காணப்படுகின்றது.
சுற்றுப்பாதையில் வடக்குப் புறத்தில் பிரம்மா மற்றும் விஷ்ணு துர்கா கர்ப்பகிரக சுவரிலும்,அதற்கு சற்று பக்கத்தில் கர்ப்ப கிரகத்தை நோக்கி சண்டிகேஸ்வரர் சிறு கோயில் ஒன்றும் உள்ளது.
இதற்கு அடுத்தாற்போல வெளி மதில் சுவரில் தெற்குப் பக்கமாக அமைந்துள்ள சிறிய கோபுரத்தின் வழியாக வெளியே சென்றால், சகஸ்ர லிங்கேஸ்வரர், காமாட்சி லிங்கேஸ்வரர், அமிர்தலிங்கேஸ்வரர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் சிறிய கோயிலாகவே உள்ளது.
இவற்றைக் கடந்து செல்லும்போது இரண்டு படித்துறைகள் கூடும் இடத்தையும் , இரண்டு அழகிய நதிகள் சங்கமிக்கும் அந்த அற்புதமான காட்சியைக் காணலாம் .🥰🥰🥰
பொன்னிநதியின் நளினத்தையும், பவானி ஆற்றின் அழகையும் ஒரே இடத்தில் கண்டு ரசிக்கலாம்.... வெகு நீண்ட வனப்பான பயணத்தை காவேரி நதி இந்த இடத்தில் பவானி ஆற்றுடன் பகிர்ந்து கொண்டு மேலே செல்கிறாள்....🙂🙂🙂
இந்த இயற்கை வனப்பையும், கூடல் சங்கமத்தையும் கண்டு மீண்டும் கோயிலின் தெற்குப் புற வாயிலாக உள்நுழைந்து, இடது புறம் சென்றால் கோயிலின் தல விருட்சமான இலந்தை மரமும், அதற்கு அடியில் விநாயகர் சிலை ஒன்றும் காணப்படுகின்றது.
மேலும் வடக்கு நோக்கி செல்லும் போது சங்கமேஸ்வரர் கோயில் மற்றும் வேதநாயகி அம்மன் கோயிலுக்கும் இடையில் தனி சன்னதியில் முருகனும், அவருக்குப் பின்னால் இடதுபுறத்தில் சனி பகவான் மற்றும் வலது புறத்தில் ஜுரஹரேஸ்வரர் தனி சன்னதியும் காணப்படுகின்றது....
பல நூற்றாண்டுகள் பழமையுடைய கோயிலாக இருந்தாலும் நானூறு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு பல சிற்ப அற்புதங்களை நமக்கு காட்சியாக்குகின்றது....🙂🙂

கரணங்கள்108- திருவதிகைவீரட்டானேசுவரர்கோயில்

எல்லா வுயிர்களும் இன்பம் வந்தால் துள்ளிக் குதிக்கின்றன; துன்பம் வந்தாலும் சோக நடனமாடுகின்றன. விருப்புவெறுப்பு, இன்பம் இடர், கசப்பு களிப்பு முதலிய எந்தத் தன்மையும் ஒரு முகக்குறியால், கைக்குறியால், இடுப்பு வளைவால், அங்க அசைவால் நமக்குப் புலனாகின்றது. பேச்சுடன் கைவீச்சும் கால்வீச்சும் முகச்சுளிப்புகளும் இளிப்புகளும் களிப்புகளும் சேர்ந்துதான் உள்ளக்கருத்தை உணர்த்துகின்றன, உயிரே, நமது உள்ளத்தில் 'பட் பட்'டென்று நடனம்புரிந்து கொண்டிருக்கிறது. இரத்த நாடிகளெல்லாம் 'ட்ப் ட்ப்' என்று நடனம் புரிகின்றன. இந்த நடனம் நின்றால்,
நாம் பிணம்
தாளபுஷ்பபுடம், வர்திதம், வலிதோருகம், அபவித்தம், ஸமானதம்,
லீனம், ஸ்வஸ்திக ரேசிதம், மண்டல ஸ்வஸ்திகம், நிகுட்டம்,
அர்தத நிகுட்டம், கடிச்சன்னம், அர்த்த ரேசிதம், வக்ஷஸ்வஸ்திகம்,
உன்மத்தம், ஸ்வஸ்திகம், ப்ருஷ்டஸ்வஸ்திகம், திக் ஸ்வஸ்திகம்,
அலாதம், கடிஸமம், ஆக்ஷிப்த ரேசிதம், விக்ஷிப்தாக்ஷிப்தம்,
அர்த்த ஸ்வஸ்திகம், அஞ்சிதம், புஜங்கத்ராசிதம், ஊத்வஜானு,
நிகுஞ்சிதம், மத்தல்லி, அர்த்த மத்தல்லி, ரேசித நிகுட்டம், பாதாப வித்தம்,
வலிதம், கூர்நிடம், லலிதம், தண்டபக்ஷம், புஜங்கத்ராஸ்த ரேசிதம்,
நூபுரம், வைசாக ரேசிதம், ப்ரமரம், சதுரம், புஜங்காஞ்சிதம்,
தண்டரேசிதம், விருச்சிக குட்டிதம், கடிப்ராந்தம், லதா வ்ருச்சிகம்,
சின்னம், விருச்சிக ரேசிதம். விருச்சிகம், வியம்ஸிதம், பார்ஸ்வ நிகுட்டனம்,
லலாட திலகம், க்ராநதம், குஞ்சிதம், சக்ரமண்டலம், உரோமண்டலம்,
ஆக்ஷிப்தம், தலவிலாசிதம், அர்கலம், விக்ஷிப்தம், ஆவர்த்தம்,
டோலபாதம், விவ்ருத்தம், விநிவ்ருத்தம், பார்ஸ்வக்ராந்தம்,
நிசும்பிதம், வித்யுத் ப்ராந்தம், அதிக்ராந்தம், விவர்திதம், கஜக்ரீடிதம்,
தவஸம்ஸ்போடிதம், கருடப்லுதம், கண்டஸூசி, பரிவ்ருத்தம்,
பார்ஸ்வ ஜானு, க்ருத்ராவலீனம், ஸன்னதம், ஸூசி, அர்த்தஸூசி,
ஸூசிவித்தம், அபக்ராந்தம், மயூரலலிதம், ஸர்பிதம், தண்டபாதம்,
ஹரிணப்லுதம், பிரேங்கோலிதம், நிதம்பம், ஸ்கலிதம், கரிஹஸ்தம்,
பர ஸர்ப்பிதம், சிம்ஹ விக்ரீடிதம், ஸிம்ஹாகர்சிதம், உத் விருத்தம்,
உபஸ்ருதம், தலஸங்கட்டிதம், ஜநிதம், அவாஹித்தம், நிவேசம்,
ஏலகாக்ரீடிதம், உருத்வ்ருத்தம், மதக்ஷலிதம், விஷ்ணுக்ராந்தம்,
ஸம்ப்ராந்தம், விஷ்கம்பம், உத்கட்டிதம், வ்ருஷ்பக்ரீடிதம், லோலிதம்,
நாகாபஸர்பிதம், ஸகடாஸ்யம், கங்காவதரணம்.

வரலாற்றுப்_பயணங்கள்- 11 பனையபுரம்_விழுப்புரம்

வைகாசி விசாகம்
முருகனிடம் நோய்கள் அண்டாதவாறு வேண்டி அருணகிரிநாதர் பாடிய மந்திரத் திருப்புகழ்
இருமல் உரோகம் முயலகன் வாதம்எரிகுண நாசி விடமே நீர்இழிவு விடாத தலைவலி சோகைஎழுகள மாலை இவையோடேபெருவயிறு ஈளை எரிகுலை சூலைபெருவலி வேறும் உளநோய்கள்பிறவிகள் தோறும் எனை நலியாதபடிஉன் தாள்கள் அருள்வாயேவரும் ஒரு கோடி அசுரர் பதாதிமடிய அநேக இசைபாடிவரும் ஒரு கால வயிரவர் ஆடவடிசுடர் வேலை விடுவோனேதருநிழல் மீதில் உறைமுகில் ஊர்திதரு திரு மாதின் மணவாளாஜலமிடை பூவின் நடுவினில் வீறுதணிமலை மேவு பெருமாளே!

காஞ்சிபுரம்_தேர்திருவிழா

அத்தியூரானை ஊர்ச் சுற்றிக்காட்ட ஆவலுடன் காத்திருக்கும் திருத்தேர்...

வரலாற்றுப்_பயணங்கள்:9 -திருவீரட்டானம் , திருவதிகை - 1

திருவீரட்டானம் , திருவதிகை - 1
கெடிலம் ஆற்றங்கரையின் வடகரையில் , பண்ருட்டி அருகே திருவதிகை என்னும் ஊரில் அமைந்துள்ள திருவீரட்டானம் என்னும் திருக்கோயில் சைவ சமயத்தில் மிகவும் முக்கியமான பங்கினை வகிக்கின்றது.
மிக நீண்ட வரலாற்று பின்னணிகளையும் , மிக உயர்ந்த பக்தி மார்க்கத்தையும் எடுத்துரைக்கும் இந்த கோயிலின் வெளி மதில் சுவரும் மிக நீண்டு , உயரமாக கோயிலின் கம்பீரத்தை எடுத்துக்காட்டுகிறது.
சைவசமயக் குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் தன்னுடைய சைவசமய சேவையை இந்தக் கோயிலில் இருந்து தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆறாம் நூற்றாண்டின் இறுதியிலும், ஏழாம் நூற்றாண்டின் பாதிக்கு மேல் வாழ்ந்த அப்பர் அவர்களால் தேவாரப் பதிகம் பாடல் பெற்ற இந்த திருக்கோயில் ஐந்தாம் நூற்றாண்டு காலத்தை சார்ந்ததாகவோ அல்லது அதற்கு முன்னதாகவோ இருந்திருக்க வேண்டும்.
ஆறாம் நூற்றாண்டு தொடங்கி , 16 ஆம் நூற்றாண்டு வரைக்கும் பல்வேறு புனரமைப்புகளும், திருப்பணிகளும் இந்த கோயிலில் நடந்துள்ளது என்பதை நேரில் சென்று காணும் போது அறிந்து கொள்ளலாம்.
கிழக்கு மேற்காக அமைந்துள்ள இந்த திருக்கோயிலின் வெளி மதில் சுவர்,கிழக்கு மேற்காக சுமார் 780 அடி நீளமும் வடக்கு தெற்காக சுமார் 460 அடி அகலமும் கொண்டுள்ளது.
கிழக்கு நோக்கி அமைந்துள்ள ராஜகோபுரத்திற்கு முன்பும் பின்பும் நாயக்கர் காலம் அல்லது விஜயநகர பேரரசர்களின் காலத்துக் கட்டடக் கலை பாணியில் 16 கால் மண்டபம் உள்ளது.
இந்தப் பதினாறு கால் மண்டபத்தில் , ரிஷபாரூடராக சிவன் பார்வதி, வள்ளி தெய்வானையுடன் மயிலின் மேல் முருகன் சிற்பங்களும் மற்றும் இந்த கோவிலில் திருப்பணி செய்த வணிகர்கள், சிற்றரசர்கள் போன்றோர்களின் புடைப்புச் சிற்பமும், அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மண்டபத்தின் நான்கு புறத்திலும் நடுவில் உள்ள இரண்டு தூண்களில் அழகான துவாரபாலகர்கள் சிலை செதுக்கப்பட்டுள்ளது.
இந்த பதினாறு கால் மண்டபத்தின் தளம் ஒரே சீராக இல்லாமல் மையத்திலுள்ள இரண்டு தூண்கள் அளவிற்கு சற்று உயர்ந்து காணப்படுகின்றது. இவ்வாறு உயர்ந்து காணப்படும் தளம் நான்கு புறங்களிலும் இருந்து உள்ளே வந்து ஒன்று சேரும் மையப் பகுதி பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், தாயம் விளையாட போடப்படும் கட்டம் போன்ற அமைப்பு போலவும் காணப்படுகின்றது மற்றும் இந்த தளத்தில் சில சித்திர வேலைப்பாடுகளுடனும் அழகாக காட்சியளிக்கின்றது.
இதற்கு அடுத்தாற்போல் உள்ளது ஏழு அடுக்கு மற்றும் ஏழு கலசங்களுடன் கூடிய கிழக்கு நோக்கி அமைந்துள்ள ராஜகோபுரம்.
சதுரவடிவ அமைந்துள்ள இந்த ராஜகோபுரம் மேலே செல்ல செல்ல கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் சற்றே அதிக கோணத்திலும் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் லேசான கோணத்திலும் உயரமாக சென்று ஏழு கலசங்களுடன் செவ்வக வடிவில் முடிவடைகின்றது.
இந்த கோபுரத்தின் முன் பக்கத்தில் பல அழகான புடைப்புச் சிற்பங்கள் நம்மை வரவேற்கின்றது அதில் மிகவும் முக்கியமானது, இடது புறத்தில் கஜலட்சுமி மற்றும் வலது புறத்தில் நர்த்தன கணபதி மற்றும் உலகளந்த பெருமாள் புடைப்புச் சிற்பம் ஆகும்.
இந்த கோபுரத்தின் வழியே உள்ளே நுழையும் போது நம்மை பித்துப் பிடிக்க செய்யும் பல அதிசய சிற்ப வேலைப்பாடுகளையும் பல புராணக் கதைகளை எடுத்துரைக்கும் புடைப்புச் சிற்பங்களையும் வடிவமைத்துள்ளனர்.
இதில் மிக முக்கியமானவை, யானையின் தோலை உரித்த பிட்சாடன மூர்த்தி , திரிபுரத்தை சிரித்து எரித்த திரிபுராந்தகர்,
ஆறு தலை மற்றும் பன்னிரண்டு கையில் ஆயுதங்களுடன் மயில் மீது அமர்ந்து இருக்கும் ஆறுமுகப்பெருமான் , ரிஷபாரூடர் சிவலிங்கத்தை பூஜை செய்யும் திருமால் இது போன்ற பல புடைப்பு சிற்பங்கள்.
இந்த கோபுரத்தின் நுழைவாயிலில் மொத்தம் நான்கு கொடி மங்கைகள், நிற்கும் தோரணையில் ஒய்யாரம், பார்க்கும் பார்வையில் வசீகரம், உதட்டில் வசீகரப் புன்னகை, தனங்களில் அதீத வனப்பு, இடையின் வளைவில் அற்புதமான கவர்ச்சி, ஒரு கையால் கொடியைப் பற்றி கொண்டும், ஒரு கையை இடையில் ஒய்யாரமாக வைத்துக் கொண்டும், தலையில் நெற்றிச்சுட்டி , காதில் பெரிய குண்டலங்கள், மார்பில் பல ஆபரணங்கள், இடையில் அழகிய ஆபரணங்கள் இத்தனையும் சிற்பிகளின் கைவண்ணத்தில் நம் கண்களை லேசாக அகல விரிக்கச் செய்யும் சிலை.
இந்தக் கொடி மங்கை சிலை அமைந்துள்ள தூண்களின் மேலுள்ள புடைப்புச் சிற்பங்கள் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும், பல திருவிளையாடற் புராண கதைகளையும் , முருகன் , விநாயகர் மற்றும் கஜலக்ஷ்மி போன்ற திருவுருவங்களையும் தாங்கியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் ஒரு சில கோயில்களில் காணப்படுகின்ற பரதநாட்டியத்தில் உள்ள நூற்று எட்டு பரத கர்ண அபிநயங்களின் சிற்பங்கள் கோபுரத்தின் உள்நுழையும் பகுதியில் பக்கத்திற்கு இருபத்தேழாக நான்கு இடங்களில் செதுக்கியுள்ளனர்.
சிற்பக் கலைஞர்கள் சிற்பத்தில் மட்டுமல்லாமல் பரதக் கலையிலும் அதிக ஈடுபாடு கொண்டுள்ளனர் என்பதும் புலனாகிறது. இந்த கர்ண தோரனையில் உள்ள பெண்களின் முகபாவங்களை பார்க்கும் பொழுது
ஒரு முகத்தில் இத்தனை வேறுபாடுகளை அவர்களால் கொண்டு வர முடிகிறதே என்ற ஆச்சர்யத்தையும் பிரமிப்பையும் மனதில் ஏற்படுத்துகிறது .😮😮
அதுமட்டுமல்லாமல் அவர்களின் கை,கால் உடல் பாகங்களை வளைத்து நிற்கும் தோரணை தற்போதுள்ள சீருடை பயிற்சியையும்( ஜிம்னாஸ்டிக்) தோற்கடித்து விடும் என்பதில் ஐயமில்லை.
ஆரம்பமே இப்படி என்றால் உள்ளே எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.
இந்த கோபுரத்திற்கு அடுத்தாற்போல் மற்றும் ஒரு பதினாறு கால் மண்டபம் முன்னால் பார்த்த அதே தோற்றத்துடன் காணப்பட்டாலும் இதில் காணப்படும் புடைப்புச் சிற்பங்கள் வெவ்வேறாக உள்ளது. அவற்றுள் மயில் மீது அமர்ந்து இருக்கும் முருகன், கோபிகைகளின் உடைகளை திருடி மரத்தின் மேல் நிற்கும் கிருஷ்ணனின் லீலை,பல முனிவர்கள் , மாணிக்கவாசகர் அப்பர் , வியாக்கிரபாதர் மற்றும் சிவனின் சரப மூர்த்தி போன்றவர்களின் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது.
இந்த மண்டபத்தின் கிழக்கு புறத்தில் மேலே ஐந்து முகங்களுடன் அருகில் பார்வதியுடன் ரிஷபத்தின் மீது சிவனும், வலது புறம் மற்றும் இடது புறங்களில் விநாயகர் மற்றும் முருகனும் ,மேற்குப் புறத்தில் திரிபுராந்தக மூர்த்தி சுதைச் சிற்பங்களாகக் அருள் பாலிக்கின்றார்கள்.
இந்த மண்டபத்தின் இடது புறத்தில் அழகிய தீர்த்தக் குளமும் , வலது புறத்தில் பசு மடமும் காணப்படுகின்றது. இந்த மண்டபத்தை கடந்து மேற்குப்புறமாக செல்லும் பொழுது இரண்டாம் சுற்றுச்சுவர் கோபுரத்திற்கு சற்று முன்னால் நந்தி மண்டபம், கொடிமரம், பலிபீடம் மற்றும் விநாயகர் போன்ற வரிசையை காணலாம். இந்த அமைப்பிற்கு வலதுபுறத்தில் மிகப்பெரிய நூற்றுக்கால் மண்டபம் புடைப்புச் சிற்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. கோபுரத்தின் நுழைவாயில் இடதுபுறத்தில் வெளி பக்கத்தில் பழமையான வராகி சிலை உள்ளது.
இரண்டாம் சுற்றில் அமைந்துள்ள கோபுரம், ஐந்து அடுக்குகளையும், ஏழு கலசங்களையும், பல சுதை வேலைப்பாடுகளுடன் கூடிய கோபுர சிற்பங்களையும், சிலைகளையும் கொண்டு வண்ணமயமாகக் காட்சி அளிக்கிறது.
இந்த கோபுரத்தின் உட்புறத்தில் பாண்டியர்களின் மீன் சின்னம் பொறிக்கப்பட்டு ,இந்த கோவிலில் பாண்டியர்களின் பங்களிப்பை வலியுறுத்துகின்றது, மேலும் இந்த இடத்தில் பல முக்கியமான கல்வெட்டுகளும் பழைய வரலாற்றை நமக்கு எடுத்தியம்புகின்றது.
இதற்கு அடுத்து இரண்டாம் சுற்றில் உள்ளே நுழைந்து நேராக பின்னால் சென்றால், கருவறையின் மேல் காணப்படும் பிரமிடு வடிவிலான கம்பீரமான கோபுரம். இது அழகிய வண்ணமயமான புடைப்பு சிற்பங்களையும் , பல புராணக் கதைகள் சொல்லும் சிலைகளையும் தன்னகத்தே கொண்டு அழகின் உருவாகவே காட்சியளிக்கிறது. ஏறக்குறைய தஞ்சை பெரியகோயிலின் கோபுரத்தை ஒத்து காணப்பட்டாலும், இந்த கோபுரம் நான்கு புறங்களிலும், கோபுரத்தின் பாத சுவர் பகுதியில் மூன்று மூன்று சிறிய கோபுர அமைப்புக்கள் கொண்டிருப்பதினால் வித்தியாசப்படுகிறது.
இந்த கோபுரத்தின் விமான பகுதியில் , கிழக்கில் சிவனும், தெற்கில் தட்சிணாமூர்த்தியும் , மேற்கில் விஷ்ணு மூர்த்தியும் மற்றும் வடக்கில் நான்முகனும் பூத கணங்களுடன் காணப்படுகின்றனர்.
எட்டுக் கோணங்களை உடைய விமானம் ஒரு அழகிய கலசத்துடன் காணப்படுகின்றது. இந்த விமானத்தின் ஆரம்பத்தில் பக்கத்திற்கு இரண்டாக எட்டு காளை வடிவங்கள் நான்கு முகங்களுடன் காணப்படுகின்றது.
பல புராணக் கதைகளின் தொகுப்பாக காணப்படும் இந்த அழகிய கோபுரத்தை வார்த்தைகளால் விளக்கிவிட முடியாது ............
108 கர்ணங்களின் பதிவு
தொடரலாம்......

Popular Posts