Thursday, August 8, 2019

வரலாற்றுப்_பயணங்கள் :10 -திருவீரட்டானம், திருவதிகை - 2

திருவீரட்டானம், திருவதிகை - 2
பதிகங்களும் , கல்வெட்டுகளும் சொல்லும் வரலாறு.....
நான்கு பக்கமும் உறுதியான தூண்களாக பக்தி, வரலாறு, தமிழ் மொழி மற்றும் கட்டடக்கலை கொண்டு அமைக்கப்பட்ட அற்புதமான ஒரு மண்டபத்தை போல திருவதிகை திருக்கோயில் விளங்குகின்றது.
திருவதிகை சிவன் கோயிலின் பக்திப் பயணம் நமது திருநாவுக்கரசரின் தமக்கை திலகவதி அம்மையாரிடமிருந்தே துவங்குகின்றது. தன் தாய்,தந்தை மற்றும் தமக்கு நிச்சயமான கணவர் இறந்த பிறகு தன் வாழ்நாள் முழுவதையும் சிவத்தொண்டில் அர்ப்பணிக்க "திருவாமூர்" என்ற சொந்த ஊரிலிருந்து திருவதிகைக்கு வந்து சிவத்தொண்டில் ஈடுபட்டிருந்தார். ஏதோ ஒரு காரணத்தினால் திலகவதி அம்மையாரின் தம்பி மருள்நீக்கியார் சமண (ஜைன)சமயத்தின் மீது பற்று கொண்டு , "தருமசேனர்" என்ற பெயரில் சமணத்திற்கு(ஜைன) மாறி அச்சமயத்தில் தொண்டு புரிந்து வந்தார். இதனால் மனம் வருந்திய திலகவதி அம்மையார் இறைவனிடம் வேண்ட இறைவன் மருள்நீக்கியாருக்கு சூலைநோய் கொடுத்து ஆட்கொண்டதாக தன்னை ஈசன் ஆட்கொண்ட விதத்தை திருநாவுக்கரசர் தனது தேவாரத்தில் கூறியுள்ளார்.
திருநாவுக்கரசரின் சிவ பக்தியை கண்டு மனம் மாறி (ஜைன) சமண மதத்தில் இருந்த மகேந்திர பல்லவர் சைவ மதத்திற்கு மாறிய பின்பு, திருவதிகையில் "குணபரசீல ஈஸ்வரம்"என்று அழகிய சிவன் கோயிலை கட்டினார் என்ற ஒரு வரலாறும் உண்டு.
முதல் முதலாக திருநாவுக்கரசரால் தேவாரத் திருப்பதிகம் பாடல் பெற்ற சிறப்பும் இந்தக் கோயிலுக்கு உண்டு.மொத்தம் பதினாறு திருப்பதிகங்களை திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்தர் மற்றும் சுந்தரர் ஆளுக்கொரு திருப்பதிகத்தையும் திருவதிகை சிவன் மீது பாடியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் இங்குள்ள முருகன் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார்.
வள்ளலார் ராமலிங்க அடிகளார் அருளிய திருவருட்பாவில்
உலகம் தழைக்க, உயிர் தழைக்க, ஒளி தழைக்க........
என திருவதிகையில் வீற்றிருக்கும் கருணைக்கடலான பெரியநாயகி அன்னையிடம் வேண்டிக் கொள்கிறார்.
இவ்வாறு தமிழ்மொழியையும், பக்தி மார்க்கத்தையும் அழகான தமிழ் பாடல்களின் மூலம் சமயப் பெரியவர்கள் வளர்த்தார்கள் என்றால்,
அழகிய நுட்பமான கட்டடக்கலையை ,
பல பேரரசர்கள் வளர்த்திருப்பதின் மூலம் பிரமிக்கத்தக்க வரலாற்றை நமக்களித்து சென்றுள்ளார்.....
மிக நீண்டு கொண்டே செல்லும் இந்தப் பதிவிற்கு நான் பொறுப்பேற்க முடியாது. அதற்கு பல்லவ,பாண்டிய சோழப் பேரரசர்களும், சைவக் குரவர்களும், மேலும் திருவீரட்டானமுடைய நாயனாருமே மூலக் காரணம்...
கல்வெட்டுகளில் திருவீரட்டானம் உடைய நாயனார் என்று புகழப் படுகின்ற இந்தத் திருக்கோயில் மூன்று மிகப்பெரிய சாம்ராஜ்யங்கள், பெரும் தரப்பு வணிகர்கள், படைவீரர்கள் , தளபதிகள் மற்றும் சிற்றரசர்கள், ஆகியோர்களின் வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
திருவதிகையில் பழமையான கல்வெட்டாக கருதப்படுவது இரண்டாம் பரமேசுவரவர்மனுடையதாகும்
(705 -710).
இந்த மன்னனே இக் கோயிலை கற்றளியாக மாற்றும் பணியை துவக்கினார் என்பதும் இரண்டாம் நந்திவர்மன்(710 - 775) மற்றும் தந்திவர்மன்(775 - 825) காலங்களில் இந்தத் திருப்பணி முடிவுற்றது எனவும். இரண்டாம் பரமேஸ்வரவர்மன் காலத்தில் பல காடி(1காடி= நான்கு மரக்கால்) நெல்லும், பல கழஞ்சு(1கழஞ்சு=5.1 கிராம்) பொன்னும் தானமாக கொடுக்கப் பட்டுள்ளது.
என்பது கல்வெட்டுகளின் மூலம் அறியப்படும் செய்தி.
மூன்றாம் நந்திவர்மனின்
(825 - 850)
(தெள்ளாற்றெறிந்த நந்திபோத்தரையர்)
10 ஆவது ஆட்சியாண்டில் இந்த கோவிலுக்கு நூறு கழஞ்சு பொன் தானம் பெறப்பட்டுள்ளது. இந்தப் பொருளில் இருந்து பெறப்படும் வட்டியை(பலிசை) வைத்து தினமும் இரண்டு நொந்தாவிளக்கு மற்றும் ஒரு நாழி நெய் கொடுக்க வேண்டும் என்று கல்வெட்டின் மூலம் அறியலாம்.
நிருபதுங்கன் (850 -882) உடைய 16 வது ஆட்சி ஆண்டில் பொன் தானம் கொடுக்கப்பட்டு அதன் மூலம் வரும் வருமானத்தை கொண்டு நொந்தா விளக்கு ஏற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் நிருபதுங்கன் போத்தரையருடைய
பதினெட்டாவது ஆவது ஆட்சியாண்டில் பாண்டிய பேரரசராக விளங்கிய வரகுணபாண்டியன் (862-880)
570 கழஞ்சுப் பொன்னை இந்த கோயிலுக்கு தானமாக அளித்து அதன் மூலம் வரும் வருவாயில் பல கோவில் திருப்பணிகளை செய்ய நிவந்தம் அளித்துள்ளார். பிற்காலத்தில் திருப்புறம்பயம் என்னுமிடத்தில் நடந்த போரில் வரகுண பாண்டியரை எதிர்த்து அபராஜிதவர்மன் என்ற பல்லவ மன்னன் போர் புரிந்தான் என்பதைப் பார்க்கும் பொழுது,நிருபதுங்கன் காலத்தில் பாண்டிய - பல்லவ அரசு உறவு சுமூகமாகவே இருந்திருக்கிறது என்பதை நாம் யூகிக்கலாம்.
நிருபதுங்கனின் 22 வது ஆட்சி ஆண்டில் இம்மன்னனின் வீரமாதேவியார், இந்தக் கோயிலுக்கு 50 கழஞ்சு பொன் தானம் அளித்துள்ளார்.
சோழப் பேரரசர் கோப்பரகேசரி முதலாம் பராந்தகன் (907 - 955)
பாண்டிப்போரையர் என்பவர், மன்னனது ஒன்பதாவது வது ஆட்சி ஆண்டில் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் மற்றும் திருவாதிரை தினத்தன்று பூஜை, தேனமுது மற்றும் நெய் அமுது செய்வதற்காக நிலதானம் அளித்து உள்ளார். மேலும் அதனுடன் ஆறு புண்ணியஸதலங்களான திருவரணவாசி,திருநாகீஸ்வரம்,திருவகட்டீஸ்வரம்,திருவக்கினீஸ்வரம்,திருவிடைநஞ்சல்,திருப்பலானம் ஆகிய ஸ்தலங்களில் பஞ்சகவ்ய விழா நடத்தவும், பிரதி மாதம் முதல் நாள் பிரசாதமிடவும், மற்றும் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஸ்ரீபலி பிரசாதமிடவும்.இந்த மானியம் நகரத்தார் பொருப்பின் கீழ் வழிபாடு நடத்த ஆளிக்கபட்டதாக கல்வெட்டு செய்தி ஆவணப்படுத்துகின்றது.
இந்த மன்னன் காலத்தில் வாழ்ந்த "வெள்ளி கெட்டன்" என்பவர் மன்னரது 23 வது ஆட்சியாண்டில் இந்த கோயிலில் நொந்தா விளக்கு எரிப்பதற்கு 90 ஆடுகளை இந்த ஊர் நகரத்தாரிடம் வழங்கியுள்ளார்.
ஆதித்த சோழன் (871 -907) காலத்திலேயே தொண்டை மண்டலம் முழுவதும் சோழர் ஆட்சியின் கீழ் வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கங்கையும், கடாரமும் கொண்ட கோப்பரகேசரி முதலாம் ராஜேந்திர சோழனுடைய (1012-1044) 23 வது ஆட்சி ஆண்டில், பெருந்தரம் சோழமண்டலத்து ,அருமொழிதேவ வளநாட்டு, புலியூர் நாட்டு, வாஞ்சியூர் கிழவந்நாராயண
ராஜ ராஜ உடையார் என்பவர் திருப்பள்ளித்தானம் செய்வதற்கு சந்திர-சூரியர் உள்ளவரை இந்த நிலம் மற்றும் நிலத்தால் வரும் வருமானம் கோவிலுக்கு சொந்தம் என்று நிலதான சாசனமாக எழுதிக் கொடுத்துள்ளார்.
திருபுவனச் சக்கரவர்த்தி
கோராஜகேசரி முதலாம் குலோத்துங்க சோழனின்(1070 -1020) பன்னிரெண்டாம் ஆட்சி ஆண்டு தொடங்கி, 44 ஆவது ஆட்சி ஆண்டு வரை 11 க்கும் மேற்பட்ட நிவந்த கல்வெட்டுகள் காணப்படுகின்றது.இந்த நிவந்த கல்வெட்டுகளில் சோழருடைய வெவ்வேறு மெய்க்கீர்த்தி களையும் காண முடிகிறது .
இந்தக் கல்வெட்டுகளில் அடங்கியுள்ள சில முக்கியமான நிவந்தங்கள் 96 சாவா மூவா ஆடுகள் , கோவில் திருப்பணிக்காக வழங்கப்பட்ட பொன், கோவிலின் பூஜைக்காக மற்றும் நந்தா விளக்கு ஏற்றுவதற்காக வழங்கப்பட்ட பசுக்கள் , திருவீரட்டானமுடைய நாயனாருக்கு அளிக்கப்பட்ட ஆபரணங்கள் போன்றவைகள் அடங்கும். இதில் சுவாரசியமான விஷயம் ஒன்று உள்ளது என்னவென்றால் ,காடவராயன் என்ற சிற்றரசனால் நிவந்தம் அளிக்கப்பட்ட ஆபரணம்
ஒன்றில் முத்து,
அகல மணி, மாங்காய் , கொக்கி போன்றவைகள் ஒவ்வொரு ஆபரணத்தில் எத்தனை இருக்கின்றது என்பதையும் குறித்து தானம் அளித்துள்ளனர்.
கோராஜகேசரி இரண்டாம் ராஜாதிராஜனுடைய (1163 -1178)எட்டாம் ஆட்சியாண்டில் நொந்தா விளக்கு ஏற்றுவதற்கு நிவந்தம் அளிக்கப்பட்டுள்ளது.
புயல் வாய்த்து வளம் பெருக எனத் தொடங்கும் ,திரிபுவனச் சக்கரவர்த்திகள் பாண்டியன் முடி கொண்ட மூன்றாம் குலோத்துங்க சோழனின் (1178 - 1218) சிதிலமடைந்த கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. மூன்றாம் குலோத்துங்க சோழனே பிற்காலப் பாண்டியப் பேரரசுக்கு ஒரு வலிமையான அடித்தளமிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டிய நாட்டு உள்நாட்டு குழப்பங்களைத் தவிர்த்து விக்கிரம பாண்டியனை அரியணையில் அமர வைத்ததிலிருந்து பாண்டியர்கள் சிறிது சிறிதாக எழுச்சி பெற்றனர்.
சகல புவன சக்கரவர்த்தி அவனி ஆளப்பிறந்தவன் காடவ அரசன் கோப்பெருஞ்சிங்கனின் (1216 - 1242) இரண்டாம் ஆட்சியாண்டில் முப்பத்தி இரண்டு பசுக்களும், ஒரு காளையும் மூன்றாம் ஆட்சியாண்டுல் மொத்தம் முப்பத்திமூன்று மாடுகள் திரு நொந்தா விளக்கு எரிக்க ஜெயங்கொண்ட சோழ மண்டல வளநாட்டு ஊத்துக்காட்டு கோட்டத்து கொற்றவன் மலையான் பழம் திரையான் என்பவரால் நிவந்தம் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மூன்றாம் ஆட்சியாண்டிலும் நிவந்தம் அளிக்கப்பட்டுள்ளது.(39 பசு மற்றும் ஒரு காளை)
மேலும் ஆட்சியாண்டு தெரியாமல் இரண்டு கல்வெட்டுகளும் உள்ளது.
மேலும் கோமாரபன்மரான திருபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டியன் மற்றும் வீரபாண்டியன் காலத்தில் கோவில் திருப்பணிக்காக மற்றும் பூஜைக்காக இறையிலி நிலம் தான கல்வெட்டுகளும் , திரிபுவன சக்கரவர்த்தி விக்கிரம பாண்டியன்(1283 -1296) காலத்து இறையிலி நிலம் தான கல்வெட்டுகளும் காணப்படுகின்றது.
இத்துடன் முடிவதாகத் தெரியவில்லை வேறு வழியின்றி முடித்துக் கொள்கிறேன்.....🙂🙂 🙏🙏

No comments:

Post a Comment

Popular Posts