Thursday, August 8, 2019

வரலாற்றுப்_பயணங்கள்:7 ஹுச்சப்பையன மடம் , ஐஹோளே ,கர்நாடகம்

ஹுச்சப்பையன மடம் ,
ஐஹோளே ,கர்நாடகம்
வரலாற்றுப் பொக்கிஷங்கள் இருப்பிடமாக விளங்கும் ஐஹோளேவில் உள்ள மற்றுமொரு கலைக்களஞ்சியம் தான் ஹுச்சப்பையன மடம்......
பசுமையான புல்வெளி நிறைந்தவளாகம் , மிகப்பெரிய வேப்ப மரங்கள் இளங்காற்றில் அசைந்திட அருகில் இரண்டு சிகப்பு நிற பழமையான கற்றளிகள். ஒரு சிறு குன்றின் அருகே உள்ள இவை, கூட்டத்தில் சேராத ஏகாந்தத்தை விரும்பும் கற்றளிகளாக காணப்படுகின்றது .
கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் இந்தக் கோயில், பிரசித்தி பெற்ற "மெகுடி"குன்றின் மேல் அமைந்துள்ள சமண கோயிலின் மேற்குப் புறத்தில் அமைந்துள்ளது.
துறவிகளின் இருப்பிடமாக பயன்படுத்தப்பட்ட இந்த இடம் ஒரு சிறு சிவன் கோயிலையும் கொண்டுள்ளது . சிவன் கோயிலின் முகப்பில் இரண்டு புறத்திலும் மேல் புறத்திலுமாக இரண்டு சிறிய சாளரங்களையும், காமம் ததும்பும் மோகன தோற்றம் கொண்ட நான்கு ஜோடிகளையும் அமைத்துள்ளனர் . இதில் குதிரை முகத்துடனும்(அஸ்வமுகி), கட்டுமஸ்தான உடலமைப்பும் கொண்ட ஒரு பெண் ஒரு ஆடவனுடன் தனித்து நிற்பது போன்றும் அந்த ஆடவன் பயத்தில் வெளிரி நிற்பதும் அழகாக வடிவமைத்து உள்ளனர்.
இந்தக் கோயிலின் முகப்பு வாசலின் அருகில் இரண்டு புறத்திலும் அழகிய மங்கைகள் சிலையும்( கங்கை மற்றும் யமுனை மங்கை வடிவில்), வாயிற்புறத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய நுழைவாயிலும் நம்மை கோயிலுக்குள் அழைத்துச் செல்கின்றது. உள்ளே நுழைந்ததும் அழகிய நந்தியை உடைய மகாமண்டபமும், சிவலிங்கத்தை உடைய ஒரு சிறு கருவறையும் உள்ளது . மகாமண்டபத்தில் உள்ள தூண்களில் ஏறக்குறைய முழுமையாக சிதிலமடைந்த சில கல்வெட்டுகள் காணப்படுகின்றது.
கர்ப்பகிரகத்திற்கு அருகே இரண்டு புறமும் அமைந்துள்ள தூண்களில் காணப்படும் புடைப்புச் சிற்பம் முழுமையாக காதல் ததும்பி நிற்கும் ஈருடல் ஓருயிர் என்று சொல்லும் அளவிற்கு ஒரு ஆணும், ஒரு பெண்ணும் நின்று கொண்டிருப்பதைக் காணும் பொழுது நமது உதடுகளில் லேசான புன்னகை அரும்புவது நிச்சயம்.
கருவறையின் வாசல் பகுதியின் மேல் புறத்தில் கஜலக்ஷ்மி அமைக்கப்பட்டிருப்பது பெரும்பாலான கோவில்களில் நாம் காண முடியும், அந்த இடத்தில் இந்தக் கோவிலில் கருடனும் , கருடனின் கை மற்றும் கால்களில் பயபக்தியுடன் வணங்கிக் கொண்டிருக்கும் நாகங்களையும் வடிவமைத்துள்ளனர். காசிப முனிவரின் புதல்வர்களான கருடன் மற்றும் நாகங்களை பற்றிய சுவாரஸ்யமான புராணக்கதையை இந்த சிற்பம் கொண்டுள்ளது.
இந்த சிறிய கோயிலில் இவ்வளவு அழகிய சிற்பங்களா என்று வியந்து திரும்பி எதார்த்தமாக மேல் கூரையை நோக்கும்பொழுது நம்மை அறியாமல் நம் வாய் பெரிதாகத் திறந்து கொண்டதை கூட அறியாமல் ரசிக்க வைக்கின்றது மேலிருந்து கீழ் நோக்கி நம்மை பார்த்து சிரிக்கும் சிற்பங்கள் . பல அழகிய தோரண சிற்ப வேலைப்பாடுகளுடன், மும்மூர்த்திகளின் புடைப்புச் சிற்பங்கள் அவரவர் வாகனத்தில் அமர்ந்துள்ளது போல தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர்.
இந்த அழகை ரசித்துவிட்டு வெளியே வந்து வட மேற்கில் அமைந்துள்ள மற்றுமொரு சிறிய கற்றளி காணப்படுகின்றது. இது துறவிகள் தங்குவதற்கு பயன்படுத்தபட்ட இடமாக இருந்திருகலாம் என்று சொல்கின்றனர் . இங்குள்ள தூண்களில் எந்தவிதமான சிற்ப வேலைப்பாடுகளும் செய்யாமல் சாதாரணமாக அமைக்கப்பட்டுள்ளது, இருப்பினும் ஒரு அறையின் நுழைவாயில் அருகில் அலங்கரிக்கப்பட்ட வாயில் அமைத்துள்ளனர் , மேலும் கல்லினால் ஆன திண்ணை போன்ற அமைப்புகள் முகப்பு மண்டபத்தில் வைத்துள்ளனர். இந்த மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றும் சிதைந்த நிலையில் காணப்படுகின்றது.
கோயிலாக இருந்தாலும்,மடமாக இருந்தாலும் , மிக நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளையும் , அலங்கார புடைப்புச் சிற்பங்களையும் கொண்டு தங்களுடைய கற்பனை மற்றும் சிற்பத் திறமைகளை இங்கு வெளிப்படுத்தியுள்ளனர் என்பது நிதர்சனமான உண்மை....

No comments:

Post a Comment

Popular Posts