திருவீரட்டானம் , திருவதிகை - 1
கெடிலம் ஆற்றங்கரையின் வடகரையில் , பண்ருட்டி அருகே திருவதிகை என்னும் ஊரில் அமைந்துள்ள திருவீரட்டானம் என்னும் திருக்கோயில் சைவ சமயத்தில் மிகவும் முக்கியமான பங்கினை வகிக்கின்றது.
மிக நீண்ட வரலாற்று பின்னணிகளையும் , மிக உயர்ந்த பக்தி மார்க்கத்தையும் எடுத்துரைக்கும் இந்த கோயிலின் வெளி மதில் சுவரும் மிக நீண்டு , உயரமாக கோயிலின் கம்பீரத்தை எடுத்துக்காட்டுகிறது.
சைவசமயக் குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் தன்னுடைய சைவசமய சேவையை இந்தக் கோயிலில் இருந்து தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆறாம் நூற்றாண்டின் இறுதியிலும், ஏழாம் நூற்றாண்டின் பாதிக்கு மேல் வாழ்ந்த அப்பர் அவர்களால் தேவாரப் பதிகம் பாடல் பெற்ற இந்த திருக்கோயில் ஐந்தாம் நூற்றாண்டு காலத்தை சார்ந்ததாகவோ அல்லது அதற்கு முன்னதாகவோ இருந்திருக்க வேண்டும்.
ஆறாம் நூற்றாண்டு தொடங்கி , 16 ஆம் நூற்றாண்டு வரைக்கும் பல்வேறு புனரமைப்புகளும், திருப்பணிகளும் இந்த கோயிலில் நடந்துள்ளது என்பதை நேரில் சென்று காணும் போது அறிந்து கொள்ளலாம்.
கிழக்கு மேற்காக அமைந்துள்ள இந்த திருக்கோயிலின் வெளி மதில் சுவர்,கிழக்கு மேற்காக சுமார் 780 அடி நீளமும் வடக்கு தெற்காக சுமார் 460 அடி அகலமும் கொண்டுள்ளது.
கிழக்கு நோக்கி அமைந்துள்ள ராஜகோபுரத்திற்கு முன்பும் பின்பும் நாயக்கர் காலம் அல்லது விஜயநகர பேரரசர்களின் காலத்துக் கட்டடக் கலை பாணியில் 16 கால் மண்டபம் உள்ளது.
இந்தப் பதினாறு கால் மண்டபத்தில் , ரிஷபாரூடராக சிவன் பார்வதி, வள்ளி தெய்வானையுடன் மயிலின் மேல் முருகன் சிற்பங்களும் மற்றும் இந்த கோவிலில் திருப்பணி செய்த வணிகர்கள், சிற்றரசர்கள் போன்றோர்களின் புடைப்புச் சிற்பமும், அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மண்டபத்தின் நான்கு புறத்திலும் நடுவில் உள்ள இரண்டு தூண்களில் அழகான துவாரபாலகர்கள் சிலை செதுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மண்டபத்தின் நான்கு புறத்திலும் நடுவில் உள்ள இரண்டு தூண்களில் அழகான துவாரபாலகர்கள் சிலை செதுக்கப்பட்டுள்ளது.
இந்த பதினாறு கால் மண்டபத்தின் தளம் ஒரே சீராக இல்லாமல் மையத்திலுள்ள இரண்டு தூண்கள் அளவிற்கு சற்று உயர்ந்து காணப்படுகின்றது. இவ்வாறு உயர்ந்து காணப்படும் தளம் நான்கு புறங்களிலும் இருந்து உள்ளே வந்து ஒன்று சேரும் மையப் பகுதி பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், தாயம் விளையாட போடப்படும் கட்டம் போன்ற அமைப்பு போலவும் காணப்படுகின்றது மற்றும் இந்த தளத்தில் சில சித்திர வேலைப்பாடுகளுடனும் அழகாக காட்சியளிக்கின்றது.
இதற்கு அடுத்தாற்போல் உள்ளது ஏழு அடுக்கு மற்றும் ஏழு கலசங்களுடன் கூடிய கிழக்கு நோக்கி அமைந்துள்ள ராஜகோபுரம்.
சதுரவடிவ அமைந்துள்ள இந்த ராஜகோபுரம் மேலே செல்ல செல்ல கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் சற்றே அதிக கோணத்திலும் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் லேசான கோணத்திலும் உயரமாக சென்று ஏழு கலசங்களுடன் செவ்வக வடிவில் முடிவடைகின்றது.
இந்த கோபுரத்தின் முன் பக்கத்தில் பல அழகான புடைப்புச் சிற்பங்கள் நம்மை வரவேற்கின்றது அதில் மிகவும் முக்கியமானது, இடது புறத்தில் கஜலட்சுமி மற்றும் வலது புறத்தில் நர்த்தன கணபதி மற்றும் உலகளந்த பெருமாள் புடைப்புச் சிற்பம் ஆகும்.
இந்த கோபுரத்தின் வழியே உள்ளே நுழையும் போது நம்மை பித்துப் பிடிக்க செய்யும் பல அதிசய சிற்ப வேலைப்பாடுகளையும் பல புராணக் கதைகளை எடுத்துரைக்கும் புடைப்புச் சிற்பங்களையும் வடிவமைத்துள்ளனர்.
இதில் மிக முக்கியமானவை, யானையின் தோலை உரித்த பிட்சாடன மூர்த்தி , திரிபுரத்தை சிரித்து எரித்த திரிபுராந்தகர்,
ஆறு தலை மற்றும் பன்னிரண்டு கையில் ஆயுதங்களுடன் மயில் மீது அமர்ந்து இருக்கும் ஆறுமுகப்பெருமான் , ரிஷபாரூடர் சிவலிங்கத்தை பூஜை செய்யும் திருமால் இது போன்ற பல புடைப்பு சிற்பங்கள்.
ஆறு தலை மற்றும் பன்னிரண்டு கையில் ஆயுதங்களுடன் மயில் மீது அமர்ந்து இருக்கும் ஆறுமுகப்பெருமான் , ரிஷபாரூடர் சிவலிங்கத்தை பூஜை செய்யும் திருமால் இது போன்ற பல புடைப்பு சிற்பங்கள்.
இந்த கோபுரத்தின் நுழைவாயிலில் மொத்தம் நான்கு கொடி மங்கைகள், நிற்கும் தோரணையில் ஒய்யாரம், பார்க்கும் பார்வையில் வசீகரம், உதட்டில் வசீகரப் புன்னகை, தனங்களில் அதீத வனப்பு, இடையின் வளைவில் அற்புதமான கவர்ச்சி, ஒரு கையால் கொடியைப் பற்றி கொண்டும், ஒரு கையை இடையில் ஒய்யாரமாக வைத்துக் கொண்டும், தலையில் நெற்றிச்சுட்டி , காதில் பெரிய குண்டலங்கள், மார்பில் பல ஆபரணங்கள், இடையில் அழகிய ஆபரணங்கள் இத்தனையும் சிற்பிகளின் கைவண்ணத்தில் நம் கண்களை லேசாக அகல விரிக்கச் செய்யும் சிலை.
இந்தக் கொடி மங்கை சிலை அமைந்துள்ள தூண்களின் மேலுள்ள புடைப்புச் சிற்பங்கள் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும், பல திருவிளையாடற் புராண கதைகளையும் , முருகன் , விநாயகர் மற்றும் கஜலக்ஷ்மி போன்ற திருவுருவங்களையும் தாங்கியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் ஒரு சில கோயில்களில் காணப்படுகின்ற பரதநாட்டியத்தில் உள்ள நூற்று எட்டு பரத கர்ண அபிநயங்களின் சிற்பங்கள் கோபுரத்தின் உள்நுழையும் பகுதியில் பக்கத்திற்கு இருபத்தேழாக நான்கு இடங்களில் செதுக்கியுள்ளனர்.
சிற்பக் கலைஞர்கள் சிற்பத்தில் மட்டுமல்லாமல் பரதக் கலையிலும் அதிக ஈடுபாடு கொண்டுள்ளனர் என்பதும் புலனாகிறது. இந்த கர்ண தோரனையில் உள்ள பெண்களின் முகபாவங்களை பார்க்கும் பொழுது
ஒரு முகத்தில் இத்தனை வேறுபாடுகளை அவர்களால் கொண்டு வர முடிகிறதே என்ற ஆச்சர்யத்தையும் பிரமிப்பையும் மனதில் ஏற்படுத்துகிறது .😮😮
அதுமட்டுமல்லாமல் அவர்களின் கை,கால் உடல் பாகங்களை வளைத்து நிற்கும் தோரணை தற்போதுள்ள சீருடை பயிற்சியையும்( ஜிம்னாஸ்டிக்) தோற்கடித்து விடும் என்பதில் ஐயமில்லை.
ஆரம்பமே இப்படி என்றால் உள்ளே எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.
இந்த கோபுரத்திற்கு அடுத்தாற்போல் மற்றும் ஒரு பதினாறு கால் மண்டபம் முன்னால் பார்த்த அதே தோற்றத்துடன் காணப்பட்டாலும் இதில் காணப்படும் புடைப்புச் சிற்பங்கள் வெவ்வேறாக உள்ளது. அவற்றுள் மயில் மீது அமர்ந்து இருக்கும் முருகன், கோபிகைகளின் உடைகளை திருடி மரத்தின் மேல் நிற்கும் கிருஷ்ணனின் லீலை,பல முனிவர்கள் , மாணிக்கவாசகர் அப்பர் , வியாக்கிரபாதர் மற்றும் சிவனின் சரப மூர்த்தி போன்றவர்களின் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது.
இந்த மண்டபத்தின் கிழக்கு புறத்தில் மேலே ஐந்து முகங்களுடன் அருகில் பார்வதியுடன் ரிஷபத்தின் மீது சிவனும், வலது புறம் மற்றும் இடது புறங்களில் விநாயகர் மற்றும் முருகனும் ,மேற்குப் புறத்தில் திரிபுராந்தக மூர்த்தி சுதைச் சிற்பங்களாகக் அருள் பாலிக்கின்றார்கள்.
இந்த மண்டபத்தின் இடது புறத்தில் அழகிய தீர்த்தக் குளமும் , வலது புறத்தில் பசு மடமும் காணப்படுகின்றது. இந்த மண்டபத்தை கடந்து மேற்குப்புறமாக செல்லும் பொழுது இரண்டாம் சுற்றுச்சுவர் கோபுரத்திற்கு சற்று முன்னால் நந்தி மண்டபம், கொடிமரம், பலிபீடம் மற்றும் விநாயகர் போன்ற வரிசையை காணலாம். இந்த அமைப்பிற்கு வலதுபுறத்தில் மிகப்பெரிய நூற்றுக்கால் மண்டபம் புடைப்புச் சிற்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. கோபுரத்தின் நுழைவாயில் இடதுபுறத்தில் வெளி பக்கத்தில் பழமையான வராகி சிலை உள்ளது.
இரண்டாம் சுற்றில் அமைந்துள்ள கோபுரம், ஐந்து அடுக்குகளையும், ஏழு கலசங்களையும், பல சுதை வேலைப்பாடுகளுடன் கூடிய கோபுர சிற்பங்களையும், சிலைகளையும் கொண்டு வண்ணமயமாகக் காட்சி அளிக்கிறது.
இந்த கோபுரத்தின் உட்புறத்தில் பாண்டியர்களின் மீன் சின்னம் பொறிக்கப்பட்டு ,இந்த கோவிலில் பாண்டியர்களின் பங்களிப்பை வலியுறுத்துகின்றது, மேலும் இந்த இடத்தில் பல முக்கியமான கல்வெட்டுகளும் பழைய வரலாற்றை நமக்கு எடுத்தியம்புகின்றது.
இதற்கு அடுத்து இரண்டாம் சுற்றில் உள்ளே நுழைந்து நேராக பின்னால் சென்றால், கருவறையின் மேல் காணப்படும் பிரமிடு வடிவிலான கம்பீரமான கோபுரம். இது அழகிய வண்ணமயமான புடைப்பு சிற்பங்களையும் , பல புராணக் கதைகள் சொல்லும் சிலைகளையும் தன்னகத்தே கொண்டு அழகின் உருவாகவே காட்சியளிக்கிறது. ஏறக்குறைய தஞ்சை பெரியகோயிலின் கோபுரத்தை ஒத்து காணப்பட்டாலும், இந்த கோபுரம் நான்கு புறங்களிலும், கோபுரத்தின் பாத சுவர் பகுதியில் மூன்று மூன்று சிறிய கோபுர அமைப்புக்கள் கொண்டிருப்பதினால் வித்தியாசப்படுகிறது.
இந்த கோபுரத்தின் விமான பகுதியில் , கிழக்கில் சிவனும், தெற்கில் தட்சிணாமூர்த்தியும் , மேற்கில் விஷ்ணு மூர்த்தியும் மற்றும் வடக்கில் நான்முகனும் பூத கணங்களுடன் காணப்படுகின்றனர்.
எட்டுக் கோணங்களை உடைய விமானம் ஒரு அழகிய கலசத்துடன் காணப்படுகின்றது. இந்த விமானத்தின் ஆரம்பத்தில் பக்கத்திற்கு இரண்டாக எட்டு காளை வடிவங்கள் நான்கு முகங்களுடன் காணப்படுகின்றது.
பல புராணக் கதைகளின் தொகுப்பாக காணப்படும் இந்த அழகிய கோபுரத்தை வார்த்தைகளால் விளக்கிவிட முடியாது ............
108 கர்ணங்களின் பதிவு
தொடரலாம்......
No comments:
Post a Comment