Thursday, August 8, 2019

வரலாற்றுப்_பயணங்கள்:5 -விருபாக்ஷர் மற்றும் மல்லிகார்ஜுனர் திருக்கோயில், பட்டடக்கல்



விருபாக்ஷர் மற்றும் மல்லிகார்ஜுனர் திருக்கோயில், பட்டடக்கல் , கர்நாடகம் .
சில காலகட்டங்களில் பகைவர்களையும் பிரமிக்க வைக்கும் வகையில் சில கலைப்பொக்கிஷங்கள் அமைந்துவிடுகின்றது.
அவற்றில் ஒன்று பல்லவர்களின் தலைநகரில் அமைந்துள்ள ராஜேசிம்மேஸ்வரம் என்னும் கச்சிப்பேட்டுப் பெரிய கற்றளி.
இளவரசனாகவும் , அரசனாகவும் இருந்த பொழுதும், மீண்டும் ஒருமுறை தனது மகன் இரண்டாம் கீர்த்திவர்மன் (745 - 757 ) மூலமாகவும் மூன்று முறை காஞ்சியின் மீது படையெடுத்தார் வாதாபி பேரரசர் இரண்டாம் விக்ரமாதித்தன் (733 - 745) .
காஞ்சியில் நுழைந்த இரண்டாம் விக்ரமாதித்தன்
ராஜசிம்மேஸ்வரத்தை கண்டு வியந்து , அங்கு கண்ட ஏராளமான செல்வங்களை எடுத்துச் செல்லாமல் அந்தக் கோயிலுக்கு அளித்ததோடு மட்டுமல்லாமல் அதே போன்ற ஒரு கற்றளியை சாளுக்கிய நாட்டில் ஏற்படுத்த எண்ணினார் என்றால் அந்தக் காலத்தில் கச்சிப்பேட்டு பெரிய கற்றளி எவ்வளவு வசீகரிக்கக் கூடியதாக இருந்திருக்கும் என எண்ணிப் பாருங்கள். மேலும் அந்தக் கோயிலின் செல்வங்களை அபகரிப்பவர்கள் கடிகையில் வாழும் மக்களை கொன்றால் செல்லும் நரகத்திற்கு செல்வார் என்றும் கச்சிப்பேட்டு பெரிய கற்றளியின் கல்வெட்டில் பொறித்துள்ளார்.
வாதாபி கொண்ட மாமன்னர் நரசிங்க போத்தரசர் காலத்திற்கு , ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு பிறகு காஞ்சியை வெற்றி கொண்டு திரும்பிய விக்ரமாதித்தன் சாளுக்கிய நாட்டில் கலையழகு மிளிரும் , லோகேஸ்வரம் என்னும் விருபாக்ஷர் கோவிலையும்,
திரிலோகேஸ்வரம் என்ற மல்லிகார்ஜுனர் கோயிலையும் தன்னுடைய அரசிகள் மூலம்
"மலபிரபா" என்னும் ஆற்றங்கரைக்கு தெற்கே அமைந்துள்ள பட்டடக்கல் எனும் ஊரில் கட்டியுள்ளார்.
ஒரு பெரிய தொகுப்பாக பட்டடக்கல்லில் கோயில்கள் அமைந்துள்ளன . அவற்றின் தெற்குப் புறத்தில் அமைந்துள்ள கலையம்சம் மிக்க இரண்டு கற்றளிகள் தான் விருபாக்ஷர் மற்றும் மல்லிகார்ஜுனர் கோயில்கள் . சிகப்பு கற்களால் ஆன பல சிற்ப வேலைப்பாடுகள் உடைய இந்த கோயில் கட்டடக் கலையின் மற்றுமொரு உச்சத்தைத் தொடுகிறது.
இயற்கை வனப்பு மிக்க மலபிரபா நதிக்கரையின் மிக அருகே ஒரு பெரிய அரச மரமும் , அதற்கு அருகே ஒரு பெரிய நந்தி சிலையும் அதன் அருகே சிறிய தெற்கு நோக்கி அமைந்துள்ள அனுமன் கோயிலும் உள்ளது , இங்குள்ள நந்திக்கு எதிரே விருபாக்ஷர் கோயில் கிழக்கு வாயில் வழியாக நுழைந்தோமேயானால் முதலில் பெரிய நந்தியை உடைய அழகிய நந்தி மண்டபம் ஒன்று, நான்கு புறங்களிலும் பல அழகிய புராணக் கதைகளுடன் தொடர்புடைய புடைப்புச் சிற்பங்களுடன் மிளிர்கின்றது.
நந்தி மண்டபத்தைக் கடந்து விருபாக்ஷர் கோயில் உள் நுழைவதற்கு கிழக்குப் புறத்தில் தெற்குப் புறத்திலும் வடக்குப் புறத்தில் சிறிய மண்டபங்களுடன் கூடிய வாயில்கள் அமைந்துள்ளன இந்த சிறிய மண்டபத்தின் மேற்கூரையில் தூண்களிலும் சிற்பிகள் தங்கள் கைவண்ணத்தை காட்டியுள்ளனர். சாதாரணமாகவே மேற்கூரையை பார்க்கும் பொழுது நமது வாய் சற்றே திறக்கும் , இங்குள்ள கோயிலில் நுழைவாயிலின் மண்டபத்தின் மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ள புடைப்புச் சிற்பங்களைக் காணும் பொழுது சற்று பெரியதாகவே நம் வாயை திறக்க வைத்துள்ளனர் இந்த அற்புத கலைஞர்கள். ஒவ்வொரு வாயிலிலும் அமைக்கப்பட்டுள்ள துவாரபாலகர்கள் பல ஆபரணங்களுடன், லேசாக சிரித்த முகத்துடன் பயங்கரமும் வசீகரிக்கும் முகபாவத்துடன் நம்மை வரவேற்கின்றனர்.
இதைக் கண்டு உள்நுழையும் நமக்கு வியப்பின் உச்சத்திற்கு அழைத்து செல்கின்றது கருவறைக்கு எதிரே அமைந்துள்ள பெரிய மண்டபத் தூண்கள் .
ஆம் ஒவ்வொரு தூண்களிலும் புடைப்புச் சிற்பங்களாக ராமாயணம், மகாபாரதம் என்று பல புராணக் கதைகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்த தூண்கள் நம்மை மலைக்க தான் வைக்கின்றது. அதுமட்டுமல்லாமல் போர்களில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளையும், ரிஷப குஞ்சரம் , ஆடுகள் முட்டிக்கொள்ளும் காட்சியையும் அழகாக சிற்பமாக வடித்துள்ளனர். மேலும் சுற்று சுவரின் அருகே பல அழகான ஜோடிகள் தங்கள் காதலை பரிமாறிக் கொள்ளும் விதத்தில் காணப்படுகின்றனர். இதற்கெல்லாம் சிகரம்
வைத்தாற் போல உள்ளது இங்குள்ள சாளரங்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரே மாதிரியான சாளரங்களை காண இயலாது.
கருவறையின் வாயிலில் வித்தியாசமான அலங்காரங்களுடன் அமைக்கப்பட்ட தோரணங்களும் துவாரபாலகர்களும் சற்றே ஒரு பீடத்தின் மீது அமர்ந்து அருள் பாலிக்கும் விருபாக்ஷரை காத்து நிற்கின்றனர் .
கிழக்கு மேற்காக அமைந்துள்ள இந்தக் கோயிலின் கோஷ்டத்தில் சிவனின் பல்வேறு ரூபங்களும், விஷ்ணு மூர்த்தியின் பல்வேறு அவதார சிற்பங்களும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் யானைகளும் , பூதங்களும் , குதிரைகளும் , கொக்குகளும் , பஞ்ச தந்திரத்தில் வரும் பல கதைகளையும் இந்த சுற்றுச்சுவரில் அமைத்துள்ளனர்.
கருவறைக்குப் பின்னால் அமைந்துள்ள மேற்கு வாயிலின் முகப்பில் வடக்கு தெற்காக இரண்டு கம்பீர புருசர்கள் முகத்தின் வரவேற்பு புன்னகையுடன் காவல் புரிகின்றனர்.
இந்தக் கோயிலுக்கு மிக அருகில்
வட மேற்கே அமைந்துள்ளது, மல்லிகார்ஜுனர் கோயில் . இங்குள்ள நந்தி மண்டபம் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டாலும் , அங்குள்ள சிதைந்த சிற்பங்கள் இது கட்டப்பட்ட காலத்தில் எவ்வளவு அழகாக இருந்திருக்கும் என்பதை நமக்கு விளக்கத்தான் செய்கிறது . மற்றபடி மல்லிகார்ஜுனர் கோயில் அமைப்பில் ஏறக்குறைய விருபாட்சர் கோயிலைப் போலவே உள்ளது....
இங்கும் கருவறைக்கு முன்னால் அமைந்துள்ள மண்டபத்தில் பல கதைகள் கூறும் புடைப்புச் சிற்பங்களில் உடைய அழகிய தூண்கள், கொஞ்சம் காதலர்கள் சிலைகளும் மற்றும் சாளரங்களும் காணப்படுகின்றது.
காஞ்சியை வென்று அழிப்பதற்காக வந்த விக்ரமாதித்தன் காஞ்சியில் உள்ள கோயிலை கண்டு அழிக்காமல் விட்டு, அதன் நினைவாக பட்டகல்லில் சிறந்த கற்றளிகளை எடுத்திருந்தாலும், அதற்குப் பின் சாளுக்கிய நாட்டின் மீது போர் புரிந்த பல அரசர்கள் இந்த கோயிலை சிதைத்து இருக்க வேண்டும் என இந்தக் கோயிலின் இன்றைய நிலையைக் காணும் போது யூகிக்க முடிகிறது. விருபாக்ஷர் கோயிலின் தெற்குப் புறமாகவும் ,மல்லிகார்ஜுனர் கோயில் கிழக்கு புறமாகவும், அமைந்துள்ளது, கல்வெட்டுக்களுடன் கூடிய விக்ரமாதித்தன் ஜயஸ்தம்பம் . இதில் அவர் அடைந்த வெற்றியும் இந்தக் கோவிலை கட்டிய அரசிகள், லோகமாதேவி மற்றும் திரிலோக மாதேவி ஆகியோருடைய விவரங்களை கல்வெட்டாக பொறிக்கப்பட்டு நிறுவியுள்ளனர்.
பல போர் வெற்றிகளை கொண்டு, அரசை விரிவுபடுத்தியது இரண்டாம் விக்ரமாதித்தன் , அதற்கு பக்கபலமாக விளங்கியது அவனுடைய மகன்
இரண்டாம் கீர்த்திவர்மன் .
ஆனால் கிபி 757 ஆம் ஆண்டு வெம்பை என்னும் இடத்தில் நடந்த பல்லவ சாளுக்கிய போரில் , பல்லவர்களால், சாளுக்கியர்கள் முறியடிக்கப்பட்டு இரண்டாம் கீர்த்திவர்மன் இறந்து சாளுக்கிய பேரரசிற்கு முற்றுப்புள்ளி வைத்து இராஷ்டிரகூட அரசு அமைவதற்கு வித்திட்டது.....
இந்தக் காலகட்டத்தில் பல்லவ பேரரசை ஆட்சி செய்தவன் பல்லவ மல்லன் என்னும் இரண்டாம் நந்திவர்மன் ஆவார்.
எது எப்படி இருந்தாலும் எட்டாம் நூற்றாண்டில் நமக்கு கிடைத்த வரலாற்றுச் சுவடுகளுடன் கூடிய , பல அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்த இந்த விருபாக்ஷர் மற்றும் மல்லிகார்ஜுனர் திருக்கோயில் தலைசிறந்த கலைப் பொக்கிஷம் ஆகும்.
ஐக்கிய கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு (UNESCO) இந்தக் கோயில் வளாகத்தில் உள்ள கோவில்களை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Posts