பரசுராமேஸ்வரர் திருக்கோயில் குடிமல்லம், ஆந்திரா
நம்மைப்போலவே மழைக்காக ஏங்கி நிற்கும் ஏரி ஒருபுறமும், அறுவடை செய்யப்பட்ட வயல்களால் மூன்று புறமும் சூழ்ந்துள்ள அழகிய கிராமம் குடிமல்லம். அதுமட்டுமல்லாமல் மந்தை மந்தையாக செம்மறியாடுகளும், கூட்டமாக கோழிகளும், நாட்டு ஓடுகளுடன் கூடிய அழகிய வீடுகளும், விறகு மூட்டி அடுப்பெரிக்கும் புகை மணத்தையும் கொண்டும் நமது கிராமத்து வாழ்க்கை அனுபவத்திற்கு மீண்டும் ஒரு முறை நம்மைஅழைத்துச் செல்லுகின்ற அழகிய ஊர்.🙂🙂
பலகாலமாக பாண(வாணர்) அரசின் தலைநகராக விளங்கிய இந்த ஊர், தியாகத்திற்கும்,வீரத்திற்கும் சிறந்த உதாரணமாக விளங்கியிருக்க வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக அரிகண்டம் என்று சொல்லப்படுகின்ற ,
நாட்டுக்காகவோ அல்லது மன்னனுக்காக தன் தலையைத் தானே அறுத்து இறைவனுக்குப் பலி கொடுக்கும் வீரன் ஒருவன் சிலை சான்றாக பிரதிபலிக்கின்றது......மேலும்,
ஒரு பொன் அந்தி வேளையில் வீடு திரும்பிய சந்தோஷத்தில் குதுகலித்து ஒலி எழுப்பிக்கொண்டிருந்த பறவைகளை அதிகமாக கொண்ட அரசமரமும், ஆலமரம் மற்றும் புளியமரங்களும் சூழ காணப்படும் எளிமையான அழகிய கற்றளியையும் இவ்வூரின் சிறப்பை பல மடங்கு அதிகரித்துக் கொண்டிருக்கின்றது . இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பல பெருமைகளை தன்னகத்தே கொண்டுள்ள தலைசிறந்த ஒரு சிவன் கோயில்.
இது பரசுராமேஸ்வரமுடைய நாயனார் என்று கல்வெட்டுக்களில் சொல்லப்படும் பரசுராமேஸ்வரர் திருக்கோயிலாகும்.
மேற்குப்புறமாக முகப்பு நோக்கி அமைந்துள்ள இந்த கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை, கருங்கல்லினாலான முதல் அடுக்கு மட்டுமே உள்ளது. இவ்வழியாக உள்ளே நுழைந்து இடது புறமாக சென்றால் வள்ளி, தெய்வானையுடன் தமிழ் கடவுளான முருகன் ஆறுமுகங்களுடன் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். அதற்கு அடுத்தாற்போல் வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கி ஆனந்தவல்லி அம்மனுக்கு தனி சன்னதியும் உள்ளது . இது கர்ப்பகிரகம் மற்றும் அர்த்த மண்டபத்துடனும் மற்றும் மூன்று கலசங்களுடைய சிறிய கோபுரத்துடன் கூடிய தனிக் கோயில் ஆகும்.
இந்த வெளிச்சுற்றில் வடக்குப் புறத்தின் மத்தியில் சூரியதேவன் ஐந்து அடி உயரத்தில் அழகிய சிலை வடிவில் இளங்காலை சூரியனாக மேற்கு நோக்கியவாறு தனி சன்னதியில் காட்சியளிக்கிறார்.
இதற்கடுத்து கிழக்குப் புறத்தில் வெளி மதில் சுவருக்கும் உள்மதில் சுவருக்கும் இடையில் கிழக்குப் புறத்தில் மூலஸ்தானத்தை நோக்கி நந்தி,பலிபீடம் மற்றும் அழகிய கொடி மரம் அமைந்துள்ளது. நந்திக்கு எதிரில், உள்மதில் சுவரில் அழகிய கல்லிலான வேலைப்பாடுகளுடன் கூடிய சாளரம் ஒன்றுள்ளது.
தென்கிழக்கு மூலையில் தண்ணீர்த் தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு கிணற்றை அமைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சிறு புடைப்பு சிற்பங்களுடன் கூடிய நான்கு தூண்கள் கொண்ட தெற்கு நோக்கி அமைந்துள்ள அழகிய மண்டபம் கோயிலின் முகப்பு வாயில் நம்மை உள்ளே அழைத்துச் சென்று பரசுராமேஸ்வரர் முடைய நாயனாரை தரிசிக்கச் செய்கின்றது.
தெற்கிலிருந்து மகா மண்டபத்தின் உள்ளே நுழைந்து கிழக்குப் புறமாக திரும்பி அர்த்தமண்டபத்தில் சென்றால், நாம் கிழக்கு நோக்கி அமைந்துள்ள கருவறையில் வீற்றிருக்கும் மிகவும் பழமை வாய்ந்த , கலையம்சம் மிக்க, அழகிய சிற்பத்துடனும் , பல நூற்றாண்டுகளைக் கடந்தும், இன்றும் சற்றும் பொலிவு
குன்றாததுமான ,பல நீண்ட வரலாற்றை தன்னகத்தே சுமந்து கொண்டுள்ள பிரமிக்கத்தக்கதுமான சிவலிங்கத்தை சற்று இரண்டு அடி பள்ளத்தில் நாம் காணலாம்...🙏🙏
கருவறையை உள்ள சிவனை தரிசித்துவிட்டு மகா மண்டபத்திற்கு வரும் பொழுது கருவறைக்கு நேராக கருவறையை நோக்கி நந்தி ஒன்றும் சிறிய சிவ லிங்கம் ஒன்றும் உள்ளது,இதற்கடுத்து முதல் சுற்று சுவரில் நுழையும்போது உள்ள கோஷ்ட தெய்வங்களான விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, மகாவிஷ்ணு நான்முகன்,விஷ்ணு துர்க்கை மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியவர்களின் சிலைகளை நம்மை பரவசமூட்டும் என்பதில் ஐயமில்லை.
இந்த சுற்று சுவரின் நடைபாதைக்கும், கர்ப்பகிரகத்திற்குள் இடையில் உள்ள இடைவெளி இரண்டு அடி பள்ளமாக அமைக்கப்பட்டு , கோஷ்ட தெய்வங்களின் சிலைகளுக்கும், கோயிலுக்கு செல்பவர்களுக்கும் சற்றே இடைவெளி ஏற்படுத்தும் வகையில் அமைத்துள்ளனர் .
இந்தக் கோயில் கருவறை தூங்கானை மாடம் என்று சொல்லப்படுகின்ற கஜபிருஷ்ட அமைப்பை சார்ந்தது.
முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் இன்றைய மத்திய பிரதேசம் , கர்நாடகம், மகாராஷ்டிரம் மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளில் ஆட்சி செய்து வந்தவர்கள் சாதவாகனர்கள்.
இந்தக் கோயில் முதலாம் நூற்றாண்டில் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் சாதவாகனர்கள் செங்கல்லினால் கட்டப்பட்டது என்றும், அதற்குப் பிறகு காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த பல்லவ அரசர்களால் கற்றளியாக மாற்ற மாற்றப்பட்டது என்றும் , அதற்குப் பிறகு சோழப்பேரரசர் விக்ரமன் காலத்தில் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் இந்தக் கோயில் கட்டப்பட்டு இருந்தாலும் இங்குள்ள சிவலிங்கம் மிகவும் தொன்மை வாய்ந்ததென்றும், அதற்கு முன் பல ஆண்டுகளுக்கு முந்தையதாகவும் இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து, லக்னோ மற்றும் மதுராவில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ள ஏறக்குறைய இதே வடிவிலான சிவலிங்கம் உள்ளது என்றாலும் குடிமல்லத்தில் உள்ள சிவலிங்கமே வழிபாட்டில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது . கி.பி. மூன்றாம் நூற்றண்டில் உஜ்ஜைனியில் வெளியிடப்பட்ட செப்பு நாணயங்களில் குடிமல்லம் சிவலங்கத்தை ஒத்த உருவம் காணப்படுகிறது.
25 கல்வெட்டுகளுக்கு மேலுள்ள இந்த கோயிலின் பழமையான கல்வெட்டுகள் பல்லவர்கள் , கங்கர்கள் மற்றும் பாண வம்ச நிவந்த கல்வெட்டுகளாகும்.
கல்வெட்டுகள் கோவில் மூலவரை பரசிராமேசுரமுடைய நாயனார் என்றும் திருவேங்கடக் கோட்டத்துச் சிலைநாட்டுத் திருவிற்பெரும்பெட்டு ஆளுடையார் ஸ்ரீ பரமேசுரமுடையர் என்றும் ஜெயங்கொண்ட சோழமண்டலத்து பெரும்பாணப்பாடி திருவேங்கடக் கோட்டத்து திருவிற்பெரும்பெட்டு மகாதேவர் பரசுராமேசுரமுடையர்
என்றும் இக்கோவில் மூலவரைக் குறிப்பிடுகின்றன.
தந்திவர்மனின்(775 – 825) 49 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு , பல்லவர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பாண மன்னன் ஜெயநந்திவர்மனின் மகன் முதலாம் விக்ரமாதித்தியன் (கி.பி. 796 – 835) இக்கோவிலுக்கு அளித்த கொடையினைப் பற்றிப் பதிவு செய்துள்ளது.
ஒன்பதாம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த மூன்றாம் நந்திவர்மனின் (825 -850) 23 ஆண்டு அளித்த நிவந்த கல்வெட்டும், நிருபதுங்கவர்மன்(850 -880) 24ஆம் ஆட்சி கல்வெட்டு
வானவித்தியாதர மகாபலி வானவராயனின் கொடை கல்வெட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சோழ மாமன்னர் முதலாம் இராஜராஜ சோழ தேவர் (985 -1012) 15 ஆவது ஆட்சியாண்டில் திருவேங்கடத்து சிலையூர்நாட்டுத் திருவிற்பரந்பெட்டுடைய பரசுராமேஸ்வரமுடைய நாயனாருக்கு திருநந்தா விளக்கு எரிப்பதற்கும் , கிணறு அமைப்பதற்கும் நிவந்தம் அளித்துள்ளார்.
ஸ்வஸ்தி ஸ்ரீ பூமாது புணர புவி மாது வளர என்று தொடங்கும் பேரரசர் விக்கிரம சோழ தேவரின் (1118 - 1136) கல்வெட்டு ஒன்றில் இந்த கோயிலை புனரமைத்தது மற்றும் கறியமுது ,நெய்யமுது, இலையமுது நந்தா விளக்கு நிவந்தங்களைப் பற்றி கூறுகின்றது.
பதினான்காம் நூற்றாண்டில் யாதவ தேவராயர் என்பவரால் நிவந்தம் அளிக்கப்பட்டது அண்மையான கல்வெட்டாகும்.
இந்தக் கோவிலில் கருவறையைச் சுற்றி வெளியே உள்ள திருச்சுற்றுச் சுவரில் சில கல்வெட்டுகளும், கோவிலின் வெளியில் தென்மேற்குப் பகுதியில் தனியாக சில கல்லெட்டுகளும் வைக்கப்பட்டும் பாதுகாக்கப்படுகின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியத்தை தன்னுள்ளே கொண்டுள்ள இந்த கோவிலை கண்டுகளித்து வெளியே வரும்போது அந்தத் தெருவின் மற்றொரு கோடியில் அழகிய வீரபத்திரனர் கோவில் ஒன்றும் உள்ளது.
இந்த கோவிலையும் பார்த்துவிட்டு கிளம்பும் பொழுது வானிலையில் சிறிய மாற்றம், தூரமாக தெரிந்த கிழக்கு தொடர்ச்சி மலைகளில் சூரியன் மெல்ல மெல்ல இறங்க, பயணத்தின்போது காலையிலிருந்தே தாமரையின் மேகதூதம் பாடல் வரிகளை கேட்டதாலோ என்னவோ வானத்தில் மேகக் கூட்டங்கள் அதிகமாக ஆர்ப்பரித்து வந்து இடியும் மின்னலுமாக எங்களை வழி அனுப்பி வைத்தது லேசான தூறலுடன்.......🙂🙂🙂