மல்லிகார்ஜுனர் திருக்கோயில், ஹரேநல்லூர்,
சிக்மங்களூர் மாவட்டம் , கர்நாடகா.
சிக்மங்களூர் மாவட்டம் , கர்நாடகா.
தன் நீண்ட பயணத்திற்குப் பிறகுமெல்ல மெல்ல சூரியன் ஓய்வெடுக்கச் சென்றுகொண்டிருந்த நேரமது. சலனமற்ற நீல வானத்தையும் சலனப்பட வைத்ததால் முகம் சிவந்து அடர்த்தியான சின்னமாக மாறி இருந்த அற்புதமான ஒரு மாலை நேரத்தில் மனமகிழ்ச்சியுடன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தோம்... நாங்கள் சென்று கொண்டிருந்த பாதையின் இரு புறங்களிலும் பெரும்பாலும் தென்னை , பாக்கு கரும்பு மற்றும் நெல் பயிர்களை பயிரிட்டிருந்தனர், அவைகளும் சற்றும் வனப்பு குறையாமல் முழு பூரிப்புடன் வளர்ந்து சிரித்துக் கொண்டிருந்தது......
என்னயிருந்தாலும் அந்திசாயும் பொழுதில் , இலேசாக முளைத்திருக்கும் நீர் பாய்ச்சிய வயல்வெளியில் பிரதிபலிக்கும் செந்நிற வானத்தின் பிரதிபலிப்பை பார்த்துக்கொண்டு வரப்பில் அமர்ந்து கொண்டிருக்கும் பொழுது, தென்னை மரத்தில் பட்டு நம் மீது வீசும் காற்றிம், மிகுந்த பரவசத்துடன் சுற்றித்திரியும் புள்ளினங்களின் ஒலியும் அலாதியானது , அந்த நேரத்தில் அதற்கு ஈடு இணை சொல்ல இயலாது .....
கர்நாடக மாநிலத்தில் உள்ள கிராமப்புறங்களில் தரமான சாலைகளை அமைத்து நம் பிரயாணத்தை சுகமாக ஆகியிருப்பது நன்றி தெரிவிக்கக் கூடிய ஒரு விஷயமே.... ஹளிபேடு சென்று தங்கும் நோக்குடன் சென்றுகொண்டிருந்த எங்களுக்கு, ஒரு தேநீர் குடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணம் தோன்றிய நேரத்தில், நாங்கள் தேநீர் கடைகளை தேடிக்கொண்டே செல்ல
பெரும்பாலும் ஓட்டு வீடுகளே நிறைந்த ஒரு கிராமத்தைக் கடந்து கொண்டிருந்தோம்.....
பெரும்பாலும் ஓட்டு வீடுகளே நிறைந்த ஒரு கிராமத்தைக் கடந்து கொண்டிருந்தோம்.....
அந்த கிராமத்தில் திடீரென எங்களுக்கு இடதுபக்கத்தில் அதிக வெளிச்சத்துடன் கூடிய மின்னொளி எங்கள் கவனத்தை கவர்ந்தது. லேசாக கண்ணில் பட்டது வேலைப்பாடுகளுடன் கூடிய கோபுரம் , அவ்வளவுதான் சொல்ல வேண்டுமா என்ன ?? அடுத்த பத்து... பதினைந்து.... நொடிகளில் எங்களுடைய கார் அந்த கோவிலின் வளாகத்தில் நின்றது.
மூன்றரை ஜாம நேரமாக தொடர்ந்த எங்கள் பயணத்தின் சோர்வு அந்த கட்டிடத்தை கண்டவுடன் மாயமாய் மறைந்தது, அந்தக் கோவிலின் வடிவமைப்பு ஹொய்சாளப் பேரரசின் கட்டடக்கலை போல் தோன்றியது . ஊரில் உள்ள சில வயதானவர்கள் உள்ளே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர், அப்பொழுதுதான் அருகிலிருந்த பெயர் பலகையை கண்டோம்.
முகத்தில் தானாக புன்னகை அரும்பியது காரணம் ஹொய்சாளக் கட்டிடக்கலையின் அற்புத கட்டிடமாக கருதப்படும் "மல்லிகார்ஜுனர் திருக்கோயில், ஹரேநல்லூர்".
முகத்தில் தானாக புன்னகை அரும்பியது காரணம் ஹொய்சாளக் கட்டிடக்கலையின் அற்புத கட்டிடமாக கருதப்படும் "மல்லிகார்ஜுனர் திருக்கோயில், ஹரேநல்லூர்".
பெரிய பசுமையான வளாகத்தின் நடுவில் மிகவும் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருவது பார்த்தவுடனேயே இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இந்தக்கோயில் உள்ளது என்பதை அறிந்துகொண்டோம்... எட்டாம் நூற்றாண்டில் கங்கர்களால் கட்டப்பட்டு, பிறகு 12 ம் நூற்றாண்டில் ஹொய்சாள பேரரசின் தலைசிறந்த மன்னனாக விளங்கிய இரண்டாம் வல்லாளன்(1173 - 1220) என்பவரால் புனரமைக்கப்பட்ட இந்த திருக்கோவிலில் மல்லிகார்ஜுனர், கருட பீடத்தில் விஷ்ணு மற்றும் சூரியனுக்கு தனித்தனி சன்னதிகள் காணப்படுகின்றன.
தெற்குநோக்கி நுழைவாயில் அமைந்திருக்கும் இந்த கோவிலின் மூன்று நான்கு படிக்கட்டுகள் ஏறி உள்ளே நுழைந்ததும், நான்கு நன்கு குடைந்த தூண்களையும், அழகிய சிற்பங்களைக் கொண்ட விதானத்தையும் மட்டுமல்லாமல் நமது பழங்கால வீடுகளில் அமைந்திருக்கும் திண்ணை போன்ற அமைப்பு இரண்டு புறத்திலும் காணமுடிந்தது. அந்தத் திண்ணைகளில் உட்காரும்போது என்ன ஒரு குளுமை !!!
உள்ளே நுழைந்ததும் விதவிதமான ஹோய்சள கட்டடக்கலை தூண்கள் கொண்ட மண்டபம் நாம் சென்ற வழி அல்லாமல் மற்ற மூன்று திசைகளிலும் இருந்து வழிகளை இணைக்கும் விதமாக அமைந்துள்ளது.அந்த மண்டபத்தின் மேல் புறத்தில் மிக வினோதமாக அமைந்த சிற்பங்களை காணலாம். இடதுபுறத்தில் மல்லிகார்ஜுனர், நேராக விஷ்ணுமூர்த்தி, வலதுபுறத்தில் கம்பீரமாக மல்லிகார்ஜுனரை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் நந்தியும், அதற்கு பின்னால் உள்ள தனி சன்னதியில் சூரியனும் வீற்றிருக்கின்றனர்.
நுழைவாயிலில் நுழைந்தவுடன் இடதுபுறத்தில் அழகிய கணபதி சிலையும், சப்தமாதர்கள் சிலையும், நாகர்களின் சிலையும் வடிவமைத்துள்ளனர்.
மேலே சாளுக்கிய கட்டடக்கலையின் அடுத்த பரிணாமம் ஆக கருதப்படும் ஹொய்சாளக் கட்டடக்கலையின் நல்ல வளர்ச்சி பெற்ற வேலைப்பாடுகளை இந்த கோயிலில் தரையைத் தவிர்த்து நாம் எல்லா இடங்களிலும் காணலாம் . அஷ்டதிக்கு பாலகர்களை கொண்டு நடுவில் நடனமாடும் சிவனின் சிற்பமும், இரணியனின் வயிற்றைக் கிழித்து குடலை உருவும் உக்கிர நரசிம்ம மூர்த்தியின் சிற்பமும், அனைத்து கர்ப்பகிரகத்தில் நுழைவாயிலின் மேல் அமைந்துள்ள மனம் கவரும் வேழத்திருமகளின் சிற்பமும் , அனந்த சயனப் பெருமாளின் நாபியிலிருந்து பிரம்மா உதிக்கும் சிற்பமும், நடனமாடும் நங்கைகளும் மத்தளம் வாசிக்கும் பூதகணங்களும், புல்லாங்குழல் மீட்டும் மாயக் கண்ணனின் சிற்பங்களும், நடன மங்கைகளின் சிற்பங்களும், பல இடங்களில் நம்மைக் கவரும் விதத்தில் அமைந்துள்ளது.
ஒரு சதுரமான பெரிய மண்டபத்தின் கிழக்கு,மேற்கு மற்றும் வடக்கு புறத்தில் மூன்று கர்பக்கிரகங்களையும், தெற்குப் புறத்தில் திருக் கோயிலின் நுழைவாயிலில் கொண்டு அமைந்துள்ளது இந்த கலை நுட்பத்தில் சிறந்த அழகிய மல்லிகார்ஜுனர் திருக்கோயில்.
இரவு நேரம் என்பதால் கோவிலில் வெளிச்சுற்றில் அமைந்துள்ள சிற்பங்களை ரசிக்க முடியாமல் போனது சிறு மன வருத்தத்தை அளித்தாலும், ஒரு குறிப்பிட்ட உயரம் வரை உள்ள சிற்பங்களை கண்டு ரசிக்க முடிந்தது சற்று மகிழ்ச்சியை...... அதுவும் மிதமான குளுமையான பனிப்பொழிவு தொடங்கியிருந்த இதமான வேளையில்.....🙂🙂🙂
இரண்டாம் வீர வல்லாளன் என்னும் ஹொய்சாள பேரரசின் கவிச்சக்கரவர்த்தி என்னும் பட்டத்தை தாங்கியிருந்த இவர் சோழர்களுடன் நெருங்கிய உறவு பூண்டிருந்தார், இவரது பட்டத்தரசி உமாதேவியும் மற்றுமொரு அரசி சோழமாதேவி சோழ நாட்டின் இளவரசிகள். இவரது மகள்
சோமளாதேவி என்பவள் மூன்றாம் குலோத்துங்க சோழனை(1178 - 1216 ) மணந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மகன் இரண்டாம் வீர நரசிம்மன்(1220 - 1235) என்பவர் மூன்றாம் இராஜராஜ சோழருக்கு (1216 - 1246 ) படை உதவி செய்து பாண்டியர்கள் ஆற்றிய தவறுகளை ஒடுக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது...
சோமளாதேவி என்பவள் மூன்றாம் குலோத்துங்க சோழனை(1178 - 1216 ) மணந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மகன் இரண்டாம் வீர நரசிம்மன்(1220 - 1235) என்பவர் மூன்றாம் இராஜராஜ சோழருக்கு (1216 - 1246 ) படை உதவி செய்து பாண்டியர்கள் ஆற்றிய தவறுகளை ஒடுக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது...
No comments:
Post a Comment