Tuesday, October 15, 2019

குடந்தை , மரபு நடைக்கு முன்னால் - 1

குடந்தை , மரபு நடைக்கு முன்னால் - 1
இரவு முதல் ஜாமம் தொடங்கி இரண்டு நாழிகைகள் கழித்து , செங்கழுநீர்பேட்டையில் நண்பர்களுடன் ஆரம்பித்த சுகமான பயணம் ஒரு நான்கு நாழிகை தொடர்ந்தது.....
சிரமப் பரிகாரத்திற்கு நிறுத்திய இடத்தில் , இனிய பூங்காற்றே வருடிச் செல்ல , மயங்க வைக்கும் இலேசான உணவினை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தொடர்ந்த பயணம் , இரவு மூன்றாம் ஜாமம் தொடங்கி மூன்று நாழிகைகள் முடியும் தருவாயில் சிராப்பள்ளி மலை அடிவாரத்தில் ஒரு தங்கும் இடத்தில் அன்று முடிந்தது......
எங்களுக்கு ஒதுக்கப் பட்ட அறையில் குளிர்சாதன வசதி வேலை செய்யவில்லை , நடு இரவில் அங்கு உள்ளவர்களை தொந்தரவு செய்து வேறு ஒரு அறையை மாற்றிக் கொண்டு சற்று நேரம் ஓய்வெடுத்து , விடிவதற்கு சற்று நேரத்திற்கு முன்னாலே எழுந்து தயார்படுத்திக்கொண்டு , சிராப்பள்ளி மலையின் அடிவாரத்தை சென்றடைந்ததும், வீடுகள் நிறைந்த ... இல்லை இல்லை வீடுகள் அடர்ந்த ஒரு பகுதியில் இரண்டு பக்கமும் கழிவுநீர் சிறு ஓடை போல் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு வழியில் சென்று பிரம்மாண்டமான ஒரு மலை அடிவார குடைவரையை அடைந்தோம்.
ஆரம்பத்திலேயே பிரமிப்பு.... பல்லவர் கால குடைவரையா!!!! அல்லது பாண்டியர்கால குடைவரையா!!! என்பது சரியாக தெரியவில்லை. இருவேறு கருத்துகளும் வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் உலாவுகிறது, என்றாலும் சிற்பங்கள் பல்லவர் காலத்தை நினைவு படுத்துகின்றன... அதுமட்டுமல்ல பிரம்மிப்பு சாதாரணமாக குடவரை என்றால் அதிக உயரமில்லாத ஒரு அழுத்தமான பாறையை குடைந்தெடுத்து அதில் சில சிறு சிறு கோயில்களும் , புடைப்புச் சிற்பங்களும் , தூண்களும் அமைப்பது நாம் கண்டிருக்கிறோம். ஆனால் இங்குள்ள மலையின் உயரம் ஏறக்குறைய 60 அடிக்கு மேல் இருக்கும், இங்கு குடவரை அமைக்க வேண்டும் என்று தேர்வு செய்தவர்கள் முதல் கடைசியாக குடைவரையை முடித்து சில கல்வெட்டுகளையும் பொறித்திருப்பவர் வரைக்கும் மிகவும் அசாதாரண தைரியசாலியாகவே எனக்கு தோன்றுகின்றது.
பாறையின் அழுத்தும், நிலைப்புத்தன்மை இவை எல்லாம் குடவரைக் குடைய ஆரம்பிக்கும் போது யூகிக்க முடியாத விஷயங்கள் , இருந்தாலும் அவ்வளவு உயரமான ஒரு மலையின் அடியில் உள்ள பாறையை குடைந்து மிகவும் வசீகரிக்க கூடிய கலை சிறப்பு மற்றும் நுணுக்கங்களைக் கொண்ட நளினமான புடைப்புச் சிற்பங்களையும், கவரும் தூண்களையும் வடிவமைத்துள்ளனர் என்றால் அவர்களின் கலை ஆர்வத்தையும், நுண்ணறிவையும் கண்டு வியக்காமல் இருக்க முடியுமா என்ன???
செங்குத்தாக நிற்கும் ஒரு கடினமான பாறையின் முகப்பிலேயே நான்கு வசீகரிக்க கூடிய அழகிய முழு தூண்கள் மற்றும் பூதமாலையை கொண்டு ஒரு பெரிய மண்டபம் ஆரம்பிக்கிறது , இடதுபுறம் திருமால் குடவரைக் கோயிலும் மற்றும் வலது புறம் சிவன் குடவரைக் கோயிலும் முகப்பில் கம்பீரமான இரண்டு துவாரபாலகர்களையும் கொண்டு அமைந்துள்ளது .
நேராக உள்ள சுவற்றில் முதலில் நின்ற நிலையில் விநாயகர், அதற்கு அடுத்ததாக வரிசையாக இரண்டு பாதி அமைப்பில் உள்ள தூண்களுக்கு நடுவில் , முருகன் , நான்முகன் , சூரியன், அழகிய கொற்றவை மற்றும் கொற்றவைக்கு அருகில் அரிகண்டம் கொடுக்கும் ஒரு மகா வீரனும் , பத்தி பரவசத்தில் அன்னைக்கு காணிக்கை தரும் வீரனும் காணப்படுகின்றனர்......
ஒவ்வொரு சிற்பத்திற்கு மேலே இரண்டு அழகிய வித்தியதரர்களின் புடைப்புச் சிற்பத்தையும் செதுக்க மறக்கவில்லை......
எத்தனை முறை மகாபலிபுரத்தை கண்டு ரசித்து இருந்தாலும், இக்குடைவரையிலும் வாயைத் திறந்து கொண்டு ஒவ்வொரு சிற்பத்தின் அருகிலும் சென்று வியந்து பார்த்து விட்டு, அருகில் இருந்த நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றோம்...
உள்ளே நுழைய சிறிது இடம் கூடம் இல்லாமல் முழுமையாக அன்பை நிரப்பிய வீடு அது.எப்போதாவது சில நேரங்களில் நமக்கு அது போன்ற அனுபவங்கள் கிடைக்கும். இது போன்ற ஒரு அனுபவம் காஞ்சிபுரத்திற்கு அருகில் எனக்கு ஒரு முறை கிடைத்தது திக்குமுக்காடிப் போனேன் 🙂🙂.
அதே போன்ற ஒரு அனுபவத்தை மலைக்கோட்டையின் மிக அருகாமையில் உள்ள வீட்டில் அடைந்தேன்...... அன்பை பிரதானமாகக் கொண்ட அந்த வீட்டில் காலை சிற்றுண்டி...🤔🤔 சிற்றுண்டி என்று சொல்ல முடியாது ஆனால் எங்களுடன் வந்தவர்களை மனதில் கொண்டு இது சிற்றுண்டி என்று சொல்லலாம் என நினைக்கிறேன்....
இட்லியில் ஆரம்பித்து தோசை , பொங்கல , பூரியென, அத்துடன் முடியவில்லை அந்த சிற்றுண்டி குளம்பி வரை நீண்டது .....
ஒருவழியாக அங்கிருந்து கிளம்பி , வருங்கால வரலாற்றில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடிக்க தயாராகிக்கொண்டிருக்கும் வரலாற்று ஆய்வாளர் மற்றும் நூலாசிரியர் ஒருவரையும் துணைக்கு அழைத்துக்கொண்டு, பல வரலாற்றுச் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ள கல்லணையை கடந்து காவிரி ஆற்றின் கரையாக பல பசுமையான வயல்களின் ஊடே எங்கள் பயணம் ஆரம்பித்தது........

No comments:

Post a Comment

Popular Posts