Wednesday, October 16, 2019

வரலாற்றுப்_பயணங்கள் 22: தவ்வை,ஊத்துக்காடு

ஊத்துக்காடு - அறிய சிலைகள்
"ஜெயங்கொண்ட சோழமண்டலத்து ஊத்துக்காட்டு வட்டத்து" என பல கல்வெட்டுகளில் நாம் பார்த்த ஊரான ஊத்துக்காட்டை வாலாஜாபாத் - ஒரகடம் சாலையில், வாலாஜாபாத் லிருந்து நாலு கிலோமீட்டர் தூரம் சென்று இடதுபுறமாக இரண்டு கிலோமீட்டர் சென்றால் அடையலாம்.
சோழர்கள் ஆட்சிக் காலத்தில் மட்டுமல்லாமல் பல்லவர்கள் ஆட்சி காலத்தில் இந்த ஊர் முக்கியமானதொரு வழிபாட்டுத்தலமாக திகழ்ந்துள்ளது என்பது இங்கிருக்கும் சில சிலைகள் மூலம் நாம் அறியலாம்.
லிங்க வடிவம்
ஊத்துக்காட்டில் தற்போது சிறந்த வழிபாட்டுத் தலமாக உள்ளது எல்லையம்மன் கோயில் . இங்கு ஆடிமாதம் மட்டுமல்லாமல் எல்லா மாதத்திலும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள், இந்தக் கோயிலுக்கு சற்றே பின்புறத்தில் ஒரு அழகிய சிவலிங்க வடிவம் உள்ளது பதினாறு இதழ் கொண்ட அழகிய பத்மபீடத்தில் வட்ட ஆவுடையில் இந்தியாவில் இருக்கும் சிவலிங்கங்களில் சற்றே வித்தியாசமான அமைப்பு கொண்ட சிவலிங்கம் ஒன்றுள்ளது....
தவ்வைத்தாய் சிலை
ஜேஷ்டா அல்லது தவ்வை என்று அழைக்கப்படும் மூத்த தேவியின் அழகிய சிலை ஒன்று உள்ளது. நான் இதுவரை பார்த்த சிலைகளிலேயே மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தவ்வை சிலை இது . வலது புறத்தில் மாந்தன் என்ற மகனும், இடதுபுறத்தில் மாந்தி என்ற மகளுடன் இச்சிலை உள்ளது.
சாதாரணமாக காக்கை கொடியுடனும், கழுதை வாகனத்துடனும், கையில் துடைப்பத்துடன் காணப்படும் தவ்வைத்தாய், இங்கு எதுவும் இல்லாமல் காணப்படுகின்றார்.
நந்திவர்ம பல்லவன் குலதெய்வமாக கொண்ட இந்த ஜேஷ்ட தேவி, பல்லவர்களுக்கு பிறகு சோழர்கள் ஆட்சிக் காலத்திலும் வழிபாட்டில் உள்ள காவல் மற்றும் வீரத்திற்க்கான தெய்வமாக விளங்கி இருக்கின்றார்.....
போருக்கு செல்வதற்கு முன் தவ்வைத்தாயை வணங்கி செல்வதை வழக்கமாக பல அரசர்கள் கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்லவர் தூண்
மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு சிலைகளுக்கு அருகில் பல்லவர் காலத்தின் அழகிய தூண் ஒன்று, விநாயகர் மற்றும் காளை உருவம் செதுக்கப்பட்டு காணப்படுகின்றது.
இந்தக் காளை உருவம் நரசிம்ம பல்லவனின் வாதாபி படையெடுப்புக்கு முன்னால் வரை பல்லவர்களின் சின்னமாக இருந்து வந்துள்ளது, இதை வைத்து பார்த்தால் இந்தத் தூண் ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கலாம் என யூகிக்கலாம்.
ஆஞ்சநேயர் மற்றும் கருடன்
எல்லையம்மன் கோயில் அருகில் ஒரு பெரிய குளம் ஒன்றில் படிக்கட்டு இறங்கும் இடத்தில் இரண்டு பெரிய கற்தூண்களில்,
ஒன்றில் கருடன் புடைப்புச் சிற்பமும், மற்றொன்றில் அனுமன் புடைப்புச் சிற்பமும் காணப்படுகின்றது . இது நாயக்கர் அல்லது விஜயநகர பேரரசர் காலத்தில் நிர்மாணிக்கப் பட்டதாக இருக்கலாம்...
உலகப் பாரம்பரிய (18.04.2019)தினத்தில் நமது ஊரின் அருகில் இருந்த பாரம்பரியமான சில சிலைகளைப் பற்றி அறிந்ததும் மகிழ்ச்சி ....

No comments:

Post a Comment

Popular Posts