Tuesday, October 15, 2019

வரலாற்றுப்_பயணங்கள் 18:முத்துநாயகி_அம்மன்,வழுவூர்_அகரம்

இளந்தளிர்களுடன் ஓர் நாள்....
குலதெய்வ வழிபாடு
ஆதரவாக தோளில் சாய்வது இன்பம், அதுவும் நம்மீது அன்பானவர்களின் தோள் கிடைத்தால் பேரின்பம். அதனினும் தந்தை , தாய் அல்லது தாத்தா, பாட்டியின் தோளில் சாய்வது , மடியில் துயில்வது பரமானந்தம்.
சில நேரங்களில் நாம் அவர்களை இழந்து விடக்கூடும் அந்த சமயத்தில் நமக்கு ஆதரவாக நம்மை ஆதரவாக அணைத்து நல்வழிப்படுத்த , கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தியாக இருந்து நம்மை பாதுகாப்பது நமது குல மூதாதையர்.
அத்தகைய நமது குல முன்னோர்களுக்கு செய்யும் வழிபாடு குலதெய்வ வழிபாடாக கருதப்படுகின்றது. எந்த மதம் எந்த கடவுளை பின்பற்றினாலும் , கடவுளே இல்லை என்று கூறுபவர்களும் தன்னுடைய மூதாதையர்களை வழிபட மறுப்பதில்லை....
எந்த ஒரு குடும்பமும் தனக்கு முன்னால் வாழ்ந்த சந்ததிகளில், எவரோ ஒருவர் அல்லது பலருடைய தியாகத்தினை மறந்துவிட முடியாது.... அரசர்கள் வாழ்ந்த காலத்தில் ஒரு தனி மனிதன் ஊரின் நலனுக்காக அல்லது அரசரின் நலனுக்காக தன்னைத்தானே பலி கொடுத்துக் கொண்டு அவர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்த விஷயத்தை நாம் பல தூக்குத்தலை, அரிகண்டம், நவகண்டம் போன்ற சிலைகளின் மூலம் அறிய முடிகின்றது....
குலதெய்வ வழிபாட்டில் பல கருத்துக்கள் இருந்தாலும்,
ஒரு குலத்திற்கு யாரோ ஒருவர் கடவுளாக இருந்து பல துன்பங்களையும்,
இன்னல்களையும் கடந்து அந்த குலத்தைக் காக்க தன் இன்னுயிரை நீத்திருப்பார்கள் அத்தகைய பெருந்தகைகள் குலதெய்வங்களாக வழிபடுகின்றனர்......
வருட வருடம் ஆடி மாதம் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபடுவது வழக்கமாக கொண்டிருந்த நாங்கள், அத்திவரதரின் விஸ்வரூப எழுச்சியின் காரணமாக சொந்த ஊரான காஞ்சிபுரத்தினுள்ளே நுழைவதற்கே 45 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையினால், ஆவணி மாதமே செல்ல முடிந்தது....
அவ்வாறு காலதாமதமாக சென்றதனால் மற்றுமொரு வித்தியாசமான அனுபவத்தையும் அடைய முடிந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன்..... வேறு ஒன்றும் இல்லை சற்று மழை பெய்து ஊர் முழுதும் பசுமையாக காணப்பட்ட நிலையில் , விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய ஆயத்தம் படுத்திக் கொண்டிருந்த அந்த தருவாயில் இருந்த நிலங்களை பார்த்தது கூடுதல் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இன்னும் ஒரு சாதகமான நிகழ்ச்சி என்னவென்றால் இத்தகைய ஆயத்தப் பணிகளை என் பிள்ளைகளுக்கு நேரடியாக காண்பித்து என் தந்தை விளக்கமளிக்க ஏதுவாக இருந்ததும் தான்.....
அந்த காலத்தில் கிணறுகள் அமைக்கும் முறை , வரப்புகளில் தென்னை மரங்கள் அமைக்கும் முறை , வான்குருவி தன் கூடுகளை எவ்வளவு கவனமாக அமைகின்றது , போன்றவற்றையும் குழந்தைகள் நேரில் கண்டு மிக்க மகிழ்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர்.
ஒரு மூன்று தலைமுறைகளுக்குள் இயற்கை சார்ந்த அறிவுத்தெளிவில் எவ்வளவு வேறுபாடுகள் உருவாக்கி விட்டோம் என்பதை உணர முடிந்தது... நிலத்தை பக்குவப்படுத்தி அதில் தாவரங்களை விளைவித்து உணவுப் பொருட்களை உருவாக்கும் ஒரு தலைசிறந்த விவசாயத்தை நம் தலைமுறைகள் ஒரு நிகழ்ச்சியாக பார்க்கின்ற நிலைமையை கொண்டு வந்து விட்டோம் , வாழ்வியலாக பார்ப்பதில்லை.... விவசாயம் மட்டுமல்ல இயற்கையின் பல உன்னதமான நிகழ்ச்சிகளை நம் குழந்தைகளுக்கு வெறும் படமாக மட்டுமே நம்மால் காட்ட முடிகின்றது என்பதை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்..... பிறப்பின் ஆதாயம் மகிழ்ச்சியாக வாழ்வது என்பதை மனதில் கொண்டவன் நான், அதற்கு இயற்கை மட்டுமே உதவ முடியும் . எந்தவிதமான செயற்கை உபகரணங்களோ , ஆடம்பரங்களோ நம்மை நிரந்தரமாக மகிழ்விப்பது கிடையாது......
உத்தரமேரூர் - வந்தவாசிக்கும் இடையில் உள்ள வழுவூர் என்ற ஒரு சிறு கிராமத்தில் உள்ள முத்துநாயகி அம்மன் என்ற எங்கள் குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் வழியில் இதனையெல்லாம் எங்கும் காணும் விதமாக அமைந்திருந்தது.
கோவிலுக்கு சென்ற பிறகு அங்கு வழிபட வந்த பெரும்பாலான குடும்பங்களை நமக்கு தெரிந்திருப்பதன் காரணமும் நமக்கு அதிசயமான ஒன்றில்லை. பல சொந்தங்களை எதர்ச்சியாக சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது...
வழுவூர் அகரம் என்ற இந்த கிராமத்தில் அமைந்துள்ள முத்துநாயகி அம்மன் கோயிலின் கர்ப்பகிரகத்தில் அம்மன் அமர்ந்த நிலையிலும் அவளைச் சுற்றி கல்லினால் ஆன பிரபை ஒன்றும் காணப்படுகின்றது. கல்லினால் ஆன பிரமைகளை காண்பது அரிது.
அதுமட்டுமல்லாமல் இந்த ஊரில் பழமை வாய்ந்த ஒரு சிவன் கோயில் ஒன்றும், சாலையின் ஓரத்தில்,நம் கண்களை தானாக சுண்டி இழுத்து செய்யும் அழகுடன் விஷ்ணு துர்க்கை சிலை தனித்து காணப்படுகின்றது....
இறை வழிபாடுகளை பற்றி பல்வேறு முரண்பாடான கருத்துக்கள் இருந்தாலும் குலதெய்வ வழிபாடு அனைவருக்கும் ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் பின்பற்றும் ஒரு வாழ்வியலாகவே உள்ளது மகிழ்ச்சி 🙂🙂
பின்குறிப்பு :
காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் வழியாக இந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தபோது, உத்தரமேரூரில் மாமன்னர் பராந்தகச் சக்கரவர்த்தியின் குடவோலை கல்வெட்டை தாங்கி நிற்கும் மண்டபத்தின் அருகே தற்போது பேருந்து நிலையம் உள்ளது . அந்த பேருந்து நிலையத்தில் உள்ள கடையில் மிகவும் சுவையுடைய மிச்சர் கிடைக்கின்றது.
மேலும் திரும்பி வருகையில் உத்தரமேரூர் முருகன் கோயிலுக்கு எதிரே சந்தை போட்டிருந்தார்கள், 300 ரூபாயை கொண்டு சென்று பெரிய பைகளில் தேவையான காய்கறிகளையும் வாங்கியாயிற்று...
மலிவு மட்டுமல்ல அனைத்தும் புத்தம் புதிய காய்கறிகள்......
😜😜 பயணத்தில் கூடுதல் பயன்கள் ...

No comments:

Post a Comment

Popular Posts