Tuesday, October 15, 2019

வரலாற்றுப்_பயணங்கள் 13: சமணத்_திருக்கோயில்,ஹளபேடு

ஆதிநாதர், சாந்திநாதர், மற்றும் பார்சுவநாதர் சமணர் கோயில்கள் ஹளபேடு, கர்நாடகம்..
அதிகாலையில் உதிர்ந்த பனித்துளிகள் இன்னும் சூரியனால் விரட்டப்படாத இளம் குளுமை நிறைந்த தருணத்தில் , அருகில் உள்ள மரங்களின் ஊடே பாய்ந்து விளையாடிக்கொண்டிருக்கும் புள்ளிங்களின் அதிகப்படியான பல்வேறு ஒலிகள் கலந்த இன்னிசையை கேட்டுக் கொண்டே , பரவசத்துடன் அழகிய நுழைவாயில் வழியாக உள்ளே சென்றதும் ....
சமண தீர்த்தங்கரர்களுக்காக எழுப்பப்பட்ட இந்த சமண கோயிலில் , சாந்திநாதர், ஆதிநாதர் மற்றும் பார்சுவநாதர் என்று மூன்று தனித்தனி கோயில்களாக கட்டியுள்ளனர்.
பழைய வீடு அல்லது சிதைந்த நகரம் என்று பெயர் வாங்கிய சரித்திரத்தில் மிக முக்கியமான நகரமாக விளங்கிய மாநகரம் ஹளிபேடு . ஹோய்சாள கட்டடக்கலைக்கு சிறந்த சான்றாக விளங்கும் சுற்றுச்சுவர் முழுவதும் புடைப்புச் சிற்பங்களால் நம்மைக் கவர்ந்திழுக்கும் ஹோய்சாலேஸ்வரர் திருக்கோயில் பற்றி அனைவரும் அறிந்திருப்போம். இந்தக் கோயிலின் தெற்கில் மிக அருகாமையில் அமைந்திருக்கும் கோயில்களை பெரும்பாலும் யாரும் உற்று நோக்கியது இல்லை என்றே தோன்றுகின்றது.
முதலாம் தீர்த்தங்கரரான ஆதிநாதரின் சிறிய கோயிலை மையமாகவும் , வலதுபுறத்தில் பதினாராவது தீர்த்தங்கரரான சாந்திநாதர் கோயிலும், இடது புறத்தில் இருபத்தி மூன்றாவது தீர்த்தங்கரரான பார்சுவநாதர் திருக்கோயிலும் அமைந்துள்ளது.
ஹோய்சாள கட்டடக் கலையின் சிறப்புகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தாலும் சுற்றுச் சுவர்களில் புடைப்புச் சிற்பம் எதுவும் இல்லாமல் சாதாரணமாகவே விட்டிருக்கின்றார்கள்.
பூபதேவா என்ற படைத் படைத்தளபதி தனது பேரரசரான விஷ்ணுவர்தன் (1108 - 1152) என்பவரின் வெற்றிக்கும் மற்றும் இளவரசன் முதலாம் வீரநரசிம்மன் (1152 -1173 ) பிறந்ததின் நினைவாகவும் எடுக்கப்பட்ட இந்த கோவிலில் , ஒரே கல்லினாலான பார்சுவநாதர் 18 அடி உயரத்தில் கர்ப்பகிரகத்தில் கம்பீரத்துடன் காட்சியளிக்கிறார். அதற்கு அடுத்து அர்த்த மண்டபமும், மகா மண்டபமும் காணப்படுகின்றது. மகாமண்டபத்தின் தூண்கள் மற்றும் விதானங்கள் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருப்பதுடன் , இந்த கோவிலுக்கு வெளியே பல தூண்களால் அமைக்கப்பட்ட ஒரு அழகிய மண்டபம் ஒன்றும் நமக்கு நிழல் கொடுத்து காக்க அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்து ஆதிநாதர் சிறிய கோயிலிலும் அதற்கு அடுத்தாற்போல் ஏறக்குறைய அதே வடிவமைப்பு கொண்ட சாந்திநாதர் கோயிலையும் காணலாம்.
இந்தக் கோவிலின் அழகிற்கு மெருகேற்றும் வகையில் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகம் புல்வெளி , செடிகளை அமைத்திருப்பதுடன் , வேலி அமைத்து பாதுகாத்து வருகிறது . மேலும் வடகிழக்கு மூலையில் அழகிய செவ்வக வடிவ குளம் ஒன்றும் கோயிலின் வனப்பை அதிகரித்து காட்டுகின்றது.
சைவ மற்றும் வைனவ சமயங்களில் பெரிதும் பற்றுக் கொண்டு வரலாற்றுப் பக்கங்களில் முத்திரை பதிக்க கூடிய மிகச்சிறந்த கோயில்களை கட்டிய , அதே தருணத்தில் தன்னுடைய தளபதி கட்டிய சமணக் கோயிலையும் அனுமதித்து , ஆதரித்து வந்த அந்த மன்னர்களின் எண்ணத்தின் விசாலத்தையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்....

No comments:

Post a Comment

Popular Posts