Tuesday, December 31, 2019

ஐந்து இரதம் | மாமல்லபுரம்

பல்லவ மாமன்னர்களின் கல் சொல்லும் விளக்கம்.........
கஜபிருஷ்டம் (யானைக்கோயில்)
யானையின் பின்புறம் போல கோபுரம் அமைப்பது கஜபிருஷ்ட விமானம்
ஐந்து இரதம் | மாமல்லபுரம்




வரலாற்றுப்_பயணங்கள் :62-எறும்பீஸ்வரர்_கோயில்,திருச்சிராப்பள்ளி

கார்முகிலாய்ப் பொழிவானைப் பொழிந்த முன்னீர்
கரப்பானைக் கடியநடை விடையொன் றேறி
ஊர்பலவுந் திரிவானை ஊர தாக
ஒற்றியூ ருடையனாய் முற்றும் ஆண்டு
பேரெழுத்தொன் றுடையானைப் பிரம னோடு
மாலவனும் இந்திரன்மந் திரத்தா லேத்துஞ்
சீரெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

அப்பரால் படப்பெற்ற இக்கோயில் ஏழாம் நூற்றாண்டிற்கு முந்தைய கோயிலாக இருக்க வேண்டும்.

#எறும்பீஸ்வரர்_கோயில் | #திருவெறும்பூர் |#திருச்சிராப்பள்ளி
#வரலாற்றுப்_பயணங்கள்

அளந்து அளந்து ஒரே சீரான செதுக்கப்பட்ட படிகள்

குன்றின்மேலுள்ள உயர்ந்த சுற்றுச்சுவர்


சற்று பழமையான தெருக்கள்
வெளி சுற்றுச்சுவரில் சீரான இடைவெளியில் சிறு சிறு நந்திகள்


சோழ பேரரசர்களின் கல்வெட்டுகள்


எறும்பீஸ்வரர்


சௌந்தர நாயகி ,பெயர் வைத்த பிறகு சிலை செய்தார்களோ இல்லை சிலை செய்து பிறகு பெயர் வைத்தனரோ....




வரலாற்றுப்_பயணங்கள் :61-மாமல்லபுரம்

பல்லவ மாமன்னர்களின் சொப்பன உலகமான கடல்மல்லையில் காணப்படும் அற்புதமான குடவரைக் கோயில்கள் மற்றும் சிற்ப அதிசயங்கள். ஆறாம் நூற்றாண்டில் தொடங்கிய இரண்டு மூன்று நூற்றாண்டுக்கும் மேலாக வேலை நடந்திருக்கக்கூடும்.
இந்த மாமல்லபுர சிற்பங்களும், குடவரைக் கோயில்கள் முழுமை பெற்றிருந்தால்.........




புராணக்கதைகளில் சொல்லப்படும் , ஆகாயகங்கையை பூமிக்கு கொண்டு வர பகீரதன் என்பவன் பலகாலம் கடுந்தவம் புரிந்து உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக காணப்படும் சிற்பம்.

(பாசுபதாஸ்திரம் பெற சிவனை நோக்கி தவம் செய்யும் அர்சுணன் சிலை என்றும் சொல்லப்படுகிறது தெளிவாக தெரியவில்லை)

கையில் வேலுடன் பூதகணங்களும் ,வானவர்களும் சூழ கம்பீரமாக காட்சியளிக்கும் சோமாஸ் கந்தர் சிலைகள்,

பூமிக்கு வந்த கங்கையை புனித நதியாக கருதி முனிவர்களும் ஞானிகளும் தவமிருக்கும் காட்சிகள்,

திருமாலின் ஒரு சிறிய கோயில் அருகில் சில முனிவர்களுடனும்,

ஆற்றில் நீந்தும் நாகங்களும்,
குடும்பமாக யானைகள் ஆற்றில் தண்ணீர் அருந்துவதும், அன்னம், ஆடுகள், மான்கள் ,சிங்கங்கள் என அனைத்தும் உயிரோட்டமான சிற்பங்களாக ஒரே பாறையில்......

யானைக்கும் ஆற்றுக்கும் இடையே கும்பிடும் தோரனையில் சிறுத்தை போல ஒரு உருவம்.... 🙂🙂🙂



பாலூட்டும் ஓர் குரங்குகிற்கு பின்னால் அமர்ந்து இன்னொரு குரங்கு பேன் பார்க்கும் சிற்பம்.


வராகமூர்த்தி குடவரை


ஆதிசேஷன் மேல் ஒரு காலை வைத்து தன் துணைவியை தொடைமேல் அமரவைத்து பாசமாக அவளை அரவணைக்கும் வராகமூர்த்தி......


கஜலட்சுமியை நீராட்டும் யானைகளும், அழகிய மங்கைகளும் குடத்துடன்......




மூன்றடி மண்னை மகாபலியிடம் யாசித்த வமனன் ஒரு காலடியால் பூமியை அளந்து, ஒரு காலடியால் ஆகயத்தை அளக்கும் த்ரிவிக்ரமமூர்த்தியின் விஸ்வரூப காட்சிகள் ....



அழகிய கொற்றவையை வணங்கி தன் தலையை தானே துண்டித்து (அரிகண்டம்) வழிபடும் வீரன், சிங்கம், மான் மற்றும் பூதகணங்கள் .



பல திரைப்படங்களில் நாம் கண்ட "ராய கோபுரம்" அழகிய சிற்பங்களுடன் காணப்படுகிறது.


ஒய்யாரமாக நிற்கும் அழகிய மங்கை.


ஒரு தூணில் கீழிருந்து மேலாக திருமாலின் பத்து அவதாரங்கள் தெளிவாக வடிக்கப்பட்டுள்ளது.


கம்பீரமான கலங்கரை விளக்கம்


கலங்கரை விளக்கத்திலிருந்து தெரியும் யானை அமர்ந்திருப்பது போல காணப்படும் மகிஷாசுரமர்தினி குடவரை...


மகிஷாசுரமர்தினி மகிஷாசுரனுடம் தன் படைகளுடனும் போர் புரியம் காட்சிகள், அதிலும் ஒரு பெண் வயிற்றில் எட்டு கட்டுகளுடன் (8 pack) முன் வரிசையில் நின்று அசுரனை வாளால் தாக்கும் காட்சி....


சிவன்,பார்வதி தேவி மடியில் பாலமுருகனுடன் இடதுபுறம் விஷ்ணுவும் ,வலதுபுறமாக பிரம்மாவும்.....மற்றும் சிவன் பார்வதி நந்தியின் மேல் கால்வைத்திருக்கின்றனர்.


ஆதிசேஷனில் அனந்தசயனமாக திருமாலின் அழகிய தோற்றம்.


புராணக்கதை, கிருஷ்ணர் கோவர்தன மலையை தூக்கிக்கொண்டு நிற்கும் போது கோகுல மக்கள், விலங்குகள் அந்த மலையடில் எதார்த்தமாக இருப்பதான உயிரோட்டமான சிற்பங்கள்


சிம்ம முகம் தோற்றத்துடன் காணப்படும் புலிக்குகை...


பல்லவர் மற்றும் இராஜராஜசோழரின் கல்வெட்டை தாங்கிநிற்கும் குடவரைக் கோயில்...


குறுஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல் மற்றும் பாலை கடவுள்களுக்காக எனவும் பாண்டவர் இரதம் என்றும் இருவேறாக கூறப்படும் பஞ்சபாண்டவர் இரதக்கோயில்கள்.


வார்த்தைகளால் வருணிக்க முடியாத பல்லவர் கடற்கரை கோயில்.


முற்று பெறாத ஐந்து குடவரைக் கோயில்கள் மற்றும் நான்கில் ஆண் துவரபாலகர்கள் சிற்பமும், ஒன்றில் பெண் காப்பாளர் சிற்பமும் அமைந்துள்ளது. கருவறையில் சிலைகள் ஏதும் இல்லை. இந்த குடவரை கோனேரி
மண்டபம் எனவும் புலிப்புதர் மண்டபம் என்றும் கூறப்படுகிறது.

வரலாற்றுப்_பயணங்கள் :60-பனங்காட்டீஸ்வரர்,பனங்காடு

விடையின்மேல் வருவானை
வேதத்தின் பொருளானை
அடையில்அன் புடையானை
யாவர்க்கும் அறியொண்ணா
மடையில்வா ளைகள்பாயும்
வன்பார்த்தான் பனங்காட்டூர்ச்
சடையிற்கங்கை தரித்தானைச்
சாராதார் சார்பென்னே.
காஞ்சியிலிருந்து வந்தவாசி செல்லும்போது பாலாற்றை கடந்தது வலதுபுறம் எட்டு கிலோமீட்டர் சென்றால் ஓர் அழகிய கிராமம் ஒன்றில் அதிகம் பனைமரம் உள்ளதால் பனங்காடு என்றும், இங்குள்ள சிவன் பனங்காட்டீஸ்வரர் என்றும் சொல்லப்படுகிறார்
இக்கோயில் சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்றது .
இக்கோயிலுக்கு செல்லும் வழியில் , உடல் சோர்வுற்ற சுந்தரருக்கு உணவும், நீரும் ஒரு முதியவர் அளித்ததாகவும், அதன் நினைவாக ஒரு சிறு மண்டபமும் ஒரு சிறிய குளமும் உள்ளது...
இந்த கோயிலில் இரண்டு சிவன் (தாளபுரீஸ்வரன், கிருபாநாதீஸ்வரன்) இரண்டு பார்வதி தேவி (அமிர்தவல்லி, கிருபாநாயகி) இரண்டு பலிபீடம், கொடிமரம், நந்திகள் கொண்ட ஒரு வித்தியாசமான அமைப்பில் உள்ளது.
தாளபுரீஸ்வரனை ( பனங்காட்டீஸ்வரர்) அகத்தியரும், கிருபாநாதீஸ்வரனை அகத்தியர் சீடர் புலத்தியரும் பிரதிஷ்டை செய்ததாக சொல்லப்படுகிறது.
இரண்டு மூலவர்களுக்கும் தனித்தனியே மிக அழகாக கஜப்பிருஷ்ட(யானையின் பின்புறம்) வடிவில் கர்ப்பகிரகம் அமைந்துள்ளது. இதில் ஒன்றில் லிங்கோத்பவரும், ஒன்றில் மகாவிஷ்ணு திருச்சிலையும் காணப்படுகிறது.
தூண்கள் அழகிய சிற்பங்களுடன் காணப்படுகிறது.
யார்காலத்து கற்றளி என அறியமுடியவில்லை..
Location :
Thalapureeswarar Temple
Thiruppanangadu,
https://goo.gl/maps/tjLoyV6JpyQ2

வரலாற்றுப்_பயணங்கள்:59-சஞ்சீவிராயர் கோயில், ஐயங்கார்குளம்

சஞ்சீவிராயர் கோயில், ஐயங்கார்குளம்.
மகா சிவபக்தன் இராவணனின் மூலபல அசுரப்படையும், ராமனின் வானர சேனையும் அதிதீவிரமாக போர் செய்துகொண்டிருந்த சமயம்!
சதா வானர மற்றும் அசுர வீரர்களின் மரண ஓலங்கள் கேட்டுக்கொண்டிருந்த சமயம்!
திடிரென ஒருபுறம் .....
மகிழ்ச்சி ஆரவாரம் ,வீராதிவீரன்,
இந்திரனை வென்ற அசுரகுல காவலன் என்றெல்லாம் அசுரர்களிடமிருந்து வந்து கொண்டிருந்தது.
அப்போது இலச்சுமணன் முழுமையாக பலத்தை செலுத்தி போர் புரிந்த இடத்திற்கு தன்னுடைய ரதத்தில் இந்திரஜித் வந்து இலச்சுமணனை தடுக்கும் பாவனையில் மரித்து நின்றான்.
அனுமனின் தோள்களின் மீதிருந்த இலச்சுமணன் இந்திரஜித்தை எதிர்கொண்டு மிக பயங்கரமாக போர்
புரிகின்றான்.
இந்திரனை வென்று இந்திரஜித் என்ற பட்டம் வாங்கிய இராவணமைந்தனுக்கு ஒரே ஆச்சரியம் ,தன்னுடைய அனைத்து அஸ்திரங்களும் இந்த மானிடன் முன் செயலற்று போகிறதென்று!!!!
ஏறக்குறைய அன்று ஒருலட்சம் அசுரவீரர்களை லட்சுமணன் அழித்திருந்ததாலும், தன் அனைத்து அஸ்திரங்களும் தோற்றதாலும் வெகுண்ட இந்திரஜித்,
ஓர் அம்பை நாணேற்றி
பிரம்ம தேவனை மானசிகமாக வணங்கி,இளையவர் மீது தொடுத்தான்.....
வில்லில் இருந்து புறப்பட்ட அந்த பிரம்மாஸ்திரம் அங்கிருந்த இளையவரை மட்டுமல்லாமல், அனுமனையும் மற்ற அனைத்து வானரசேனைகளையும் தாக்கி வீழ்த்தியது.
இதை கேள்விபட்ட இராமன் அங்கு வந்து தம்பியின் நிலை கண்டு மூர்ச்சையாகி விழுந்தார்.
இராமனின் பக்கத்தில் வானர சேனாவீரர்களுக்கு உணவளிக்கும் பொறுப்பிலிருந்த விபீஷ்ணன் உணவுடன் அங்கு வந்து பார்த்து, நீங்கா துயரடைந்து கண்ணீர் பெருக்கினான்..
தர்மத்திற்காகத்தமயனை பிரிந்து இராமனிடம் தஞ்சமடைந்த விபீஷ்ணனின் மனதில் ஒரு எண்ணம் தோன்றுகிறது, வாயுபுத்திரன் எங்கே....சில நேரம் தேடி உடம்பெல்லாம் அம்புக் காயங்களோடு மயக்க நிலையில் அனுமனை கண்டு உயிர் இருப்பதை அறிந்து சற்று மகிழ்ச்சி அடைகிறான்.
அம்புகள் அனைத்தையும் மெதுவாக அகற்றி மேகநீரைக் கொண்டு மயக்கம் தெளிவிக்க, இலேசாக தெளிந்த அனுமன் இராம,இலச்சுமனனை பற்றி கேட்கிறான். பிறகு அனுமன் இந்த நிலையில் நமக்கு ஜாம்பவான் மட்டுமே ஆலோசனை சொல்லி உதவமுடியும் என, இருவரும் சென்று ஜாம்பாவானை தேடி கண்டுபிடிக்கிறார்கள்.
ஜாம்பவான் வானரசேனை மற்றும் ராம லட்சுமணர்களின் நிலை கண்டு வருந்தி கண்ணீருடன் அனுமனை நோக்கி கேசரி மைந்தா உன்னாலேதான் அனைவரையும் காப்பாற்ற முடியும் என கூறி அதற்கான வழியைக் கூறுகிறார்.
கைலாய மலைக்கு அப்பால் வெகுதூரத்தில் உள்ள சஞ்சீவி மலையில் உள்ள மூலிகைகளை கொண்டு வந்தால் அனைவரையும் காப்பாற்றலாம் ஆனால் தாங்கள் மிகவும் பலவீனமாக உள்ளீர்கள் என வருந்துகின்றார்.
அனுமன் இராமநாமத்தை கூறி, ஐயா இராமனின் நலனுக்காக என்னால் எதையும் செய்ய முடியும் என கூறி உடனே செல்கிறார்....
அப்படியே சஞ்சீவி மலையிலிருந்து மூலிகைகளை கொண்டு வருகிறார், வழியில் சற்று இளைப்பாற ஒரு வனப்பகுதியில் தாமதிக்கிறார்............
பிறகு இலங்கை சென்று அனைவரையும் காப்பாற்றுகிறார்.
அவர் இளைப்பாரிய வனப்பகுதியில் அனுமனுக்கு இன்றும் ஒரு கோயில் உள்ளது.
அந்த இடம் இன்று ஐயங்கார்குளம் என்றும்,அனுமனை சஞ்சீவிராயன் என்றும் அழைகிறார்கள் .
வானரசேனையின் ஒரு பகுதி இன்றும் இக்கோயிலில் உள்ளன.😊😊
இப்படி சிறப்பு பெற்ற சஞ்சீவிராயனை காஞ்சி வரதராஜபெருமாள் கோயில் ராம,லட்சுமணர் சீதாதேவியுடன் பிரதி சித்ரா பௌர்ணமி அன்று தரிசித்து செல்கின்றனர்.
விஜயநகர் மன்னரின் முகவராக இருந்த எச்சூர் தாதாச்சாரியார் பொன் பொருளோடு இவ்வூர் வழியே பயணம் செய்தபோது, வழிப்பறிக்கொள்ளையரால் சூழப்பட்டார்.
ஆபத்தில் காக்க ராமரை வேண்டி நின்றார் எச்சூர் தாதாச்சாரியார். அப்போது கூட்டமாக வந்த வானரங்கள், கொள்ளையர்களைத் தாக்கித் துரத்தின.
அதன்பின் இத்திருத்தலத்து ஆஞ்சநேயர் மீது பக்தி கொண்ட அவர் ஏதேனும் திருப்பணி செய்ய விரும்பி ஒரு பிரம்மாண்டமான குளத்தை அமைத்தார். இக்குளம் தாதச்சமுத்திரம் என்றும் ஐயங்கார் குளம் என்றும் புகழ் பெற்றது.
இவரே ’ஸ்ரீ அனுமத் விம்சதி’ என்ற தோத்திரப் பாடலையும் இயற்றினார். இத்தலத்து அனுமரை வழிபடுவது ராமபிரானின் பாதங்களில் சரணடைவதற்கு ஒப்பானது என அப்பாடல்களில் குறிப்பிடுகின்றார்.
கர்பகிரக தெற்குச் சுற்றுச்சுவர்களில் கல்வெட்டுக்கள் தமிழும், வடமொழி எழுத்துக்களுமாக உள்ளது.
அழகிய தூண்களும் ,தூண்கள் அனைத்தும் சிலைகளுடனும் காணப்படுகின்றகிறது, ஆனால் பராமரிப்பு இன்றி உள்ளது.மிகவும் அமைதியான சூழலில் உள்ள இந்த கோயிலை புனரமைப்பு செய்தால் சிறப்பாக இருக்கும்
Location :
Thiru Sanjeevirayar Thirukovil
Adhiparasakthi Nagar, Ayyangarkulam, Tamil Nadu 631502
https://goo.gl/maps/AKCRDBdDyGD2
முரளி பா

வரலாற்றுப்_பயணங்கள்:58-பாகல அள்ளி, தர்மபுரி

நடுக்கல் (அ) வீரக்கல்!!!
சேலத்திலிருந்து தருமபுரிக்ரும் வழியில் சில சிலைகளை கண்டேன், அதன் விவரங்கள் தெரியவில்லை.
நடுக்கல் அல்லது வீரக்கல் ஆக இருக்கலாம் என்று தோன்றியது.
இடம்: பாகல அள்ளி, தர்மபுரி
இணையத்தில் இருந்து நடுக்கல் பற்றிய சில விளக்கங்கள் பின்வருமாறு....
வீரன்கல், வீரக்கல், நடுகல்’ எனவும் ‘நினைவுத்தூண்’ என்றும் இக்கற்கள் அழைக்கப்படுகின்றன. வீரயுகக் காலம் என்று அழைக்கப்படுகின்ற காலங்களில் ஏற்பட்ட போர்களில் விழுப்புண்பட்டு மடியும் வீரனுக்காக, அவனது வீரத்தைப் போற்றுகின்ற வகையிலும், அவனது தியாகத்தினை மதிக்கின்ற வகையிலும் கல் ஒன்றினை நட்டு, அதனை வழிபடுவது தமிழரின் மரபாக இருந்துள்ளதனை செவ்வியல் இலக்கியங்கள் வாயிலாக அறிகின்றோம். இதுவரை தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற நடுகற்கள் பெரும்பாலும் மக்கள் வாழ்கின்ற அல்லது வாழ்ந்ததாக அறியப்படும் ஊருக்கு வெளியில்தான் கண்டறியப்பட்டுள்ளன. ஈமக்காடுகள் உள்ள இடங்களிலும் நடுகற்கள் இருந்துள்ளன. இவை உணர்த்துவது யாதெனின், நடுகற்கள் எடுக்கப்படும் இடங்களை நோக்குகையில், வீரன் மடிந்த போர்க்களமாகவோ அல்லது அவனைப் புதைத்த இடமாகவோ தான் அனுமானிக்க முடிகின்றது.
இதே போன்ற நடுகல் ஒன்று ஈழத்தில் கற்சிலைமடுவில் உள்ளது. வன்னி மன்னன் அடங்காப்பற்றுள்ள வீரம்செறிந்த மன்னன் பண்டார வன்னியன் இறுதியாக உயிர் துறந்த இடமான கற்சிலைமடுவில் இந்த நடுகல் உள்ளது.
நடுகற்களில் வீரனின் உருவம், பெயர், செயல் போன்ற குறிப்புகள் பெரும்பாலும் இருப்பதைக் காணமுடிகின்றது. இலக்கியத் தரவுகளையும், நடுகற்களில் காணப்படும் உருவங்களையும், எழுத்துக்களையும் ஆராய்கின்றபோது ஆகோள் புரிந்தோ, (ஆநிரை கவரவோ, மீட்கவோ) கொடிய விலங்குகளுடன் போரிட்டோ, பலியாகவோ தான் சார்ந்திருக்கும் சமூகத்திற்காக இறக்கும் வீரனுக்கே நடுகல் எழுப்பப்பட்டுள்ளது




ஶ்ரீபோத்தராஜா
மனைவி ஶ்ரீஅசலிஅம்மா
இடது புரம் மகன்
போர்மன்னன் லிங்கேஸ்வரன்

Monday, December 30, 2019

அஹோபிலம்-2

திருச்சிங்கவேள் குன்றம் (அஹோபிலம்)
சில சிலைகள்...
#அஹோபிலம்#கர்னூல் மாவட்டம், ஆந்திரா





இது ஒரு அழகிய இலையுதிர்காலம்😊😊
.....

பச்சை இலைகள் இரம்மியமானது தான். ஆனால், இந்த இலையுதிர் காலம் ஒரு விதமான வித்தியாச உணர்வை அளிக்க கூடியது.

உளியின் அடிவாங்கிய கல் தான் சிலையாகும் என்பது போல,
இலைகள் உதிர்ந்த இந்த இலையுதிர் காலம்தான் வசந்த காலவரவின் முன்னோட்டம்.....

காயங்களும் வலிகளும் கூட அழகானவை சுகமானவைதான்..

#வரலாற்றுப்_பயணங்கள்

#அஹோபிலம் உற்ச்சவமூர்த்தி #இராமானுஜர் | அஹோபிலம் | #கர்னூல் மாவட்டம் | ஆந்திரா



Friday, December 27, 2019

மராமரம்

நொய்தின் நொய்ய சொல் நூல் கற்றேன் எனை
வைத வைவின் மராமரம் ஏழ் துளை
எய்த எய்வதற்கு எய்திய மாக்கதை
செய்த செய்தவன் சொல் நின்ற தேயத்தே
- கம்பன்
சான்றோர்கள் சபித்த சாபச் சொல்லைப் போலத் தப்பாமல், ஏழு மராமரங்களையும் துளையிட்டான் ராமன்.
ஏழுமராமரம் புரியுது ,அது என்ன பாம்பு, அது புரியலையே 🤔🤔

வரலாற்றுப்_பயணங்கள்: 57-ஆபத்சகாயேஸ்வரர் கோயில்,வாலாஜாபாத், காஞ்சிபுரம்

ஆனந்தவள்ளி சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோயில்,
தென்னேரி, வாலாஜாபாத், காஞ்சிபுரம்
ஆலயத்திற்குள் நுழையும் முன்பு பலிபீடமும், நந்தி மண்டபமும் அமைந்துள்ளன. கிழக்கு நோக்கிய வாயிலின் உள்ளே மஹா மண்டபம், அர்த்த மண்டபம் மற்றும் கருவறை அமைந்துள்ளன.
ஆலயத்தின் திருச்சுற்றில் தெற்கு நோக்கி நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மேற்கு நோக்கி மஹா விஷ்ணுவும், வடக்கு நோக்கி பிரம்மா மற்றும் ஸ்ரீ விஷ்ணு துர்க்கையும் வீற்றிருந்து அருளுகின்றார்.
மஹாவிஷ்ணுவும் எதிரில் ஆஞ்சநேயர் வீற்றிருந்து அருளுகிறார்.
ஸ்ரீ சண்டிகேஸ்வரர் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி அருளுகின்றார்.
இணையத்தில் இருந்து சில கல்வெட்டு செய்திகள்:
முதலாம் ராஜ ராஜனின் பதின்மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் (கி. பி. 995) உத்தம சோழ சதுர்வேதி மங்கலத்து உத்தம சோழ ஈஸ்வரத்தாழ்வார்க்கு ஸ்ரீ கண்டராதித்த தேவர் நம்பிராட்டியார் கண்டன் மதுராந்தக தேவரான உத்தம சோழ தேவரைத் திருவயிறு வாய்த்த உடையபிராட்டியார் அமுது தயாரிக்க சில பாத்திரங்களை வழங்கியுள்ளார். பாத்திரங்களின் பெயர்களும் எடைகளும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்து நின்றானோடு ஒக்கும் வெள்ளிக்கோலால் எடை நிறுத்தப்பட்டது.
ராஜராஜனுடைய இருபதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் ஸ்ரீ உத்தம சோழ சதுர்வேதி மங்கலத்தின் சபை கூடி எடுத்த தீர்மானம் உள்ளது.
இக்கோயில் பள்ளிப்படையாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கமுகு, வாழை போன்ற பயிர்கள் பயிரிட பாதியளவு வரிவிலக்கு பத்தாண்டுகளுக்கு அளிக்க முடிவெடுத்துள்ளார் என்றும் கல்வெட்டில் காண்கிறோம்.
வீர ராஜேந்திர சோழனுடைய கல்வெட்டும் விளக்கெரிக்க ஏற்பாடு செய்ததையே குறிப்பிடுகிறது.
இரண்டாம் ராஜாதிராஜனுடைய கல்வெட்டுகள் சபை மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையினைக் குறிப்பிடுகின்றன.
தூங்கானை மாடவடிவில் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
முதல் குலோத்துங்கனின் காலத்தில் கற்றளியாகக் கட்டப்பட்டிருக்க வேண்டும். கி. பி. 1115-இல் கோயில் திருப்பணிக்கும், திருப்பதியம் பாடவும் வெலிமாநல்லூரில் நிலங்கள் வழங்கப்பட்டன.
கி. பி. 1178-இல் திருப்பணிநாச்சியாரை எழுந்தருளப்பண்ணி வழிபாட்டுக்கு பூந்தன்மல்லி வணிகன் ஒருவன் நிலங்களை அளித்துள்ளான்.
அச்சுததேவராயரின் முகவர் காளத்திநாதன் கல்வெட்டு "ஆபத்துக்காத்தான்' என இறைவனைச் சுட்டுகிறது. சம்பந்தப் பெருமான் நாயனார் மற்றும் சுந்திரமூர்த்தி நாயனார் வழிபாட்டிற்காக நிலங்கள் வழங்கப்பட்டன.
மூன்றாம் ராஜராஜன் கி. பி. 1220 -இல் ஏகாம்பரதேவர் வழிபாட்டிற்கு இருவேலி நிலமும், சம்பந்தப்பெருமான் வழிபாட்டுக்கு 3 வேலி நிலத்தையும் வழங்கியுள்ளார்.
சுந்தரபாண்டியனுடைய இரு கல்வெட்டுகள் இறைவனை அனந்தீஸ்வரர் எனக் குறிப்பிட்டு நிலத்தானங்களையும் குறிப்பிடுகின்றன.
இவ்வூரில் காணப்படும் இரு கல்வெட்டுகளின் மூலம் பெருமழையால் ஏரியின் உடைப்பெடுத்து மிகுந்த சேதம் விளைவித்தபோது 23 மதகுகள் கட்டி எச்சூர், குமாரதாத்தாச்சாரியார் காப்பாற்றியுள்ளார் என்று அறிகிறோம்.
தென்னேரி ஏரிக்கு தாத சமுத்திரம் என்ற பெயருமிடப்பட்டது.


ஆபத்சகாயேஸ்வரர்

ஆனந்தவள்ளி அம்மன்

வெளியேயுள்ள நந்திமண்டபம்
கருவறையில் பூதகனங்கள்


தட்சிணாமூர்த்தி


கோயில் முகப்பு

பைரவர்


நர்த்தனபிள்ளையார்


விஷ்ணு மூர்த்தி

பக்த ஆஞ்சிநேயர்


நான்முகன்


வள்ளி தெய்வயனை சமேத முருகன்


மிகத்தெளிவாக வடிவமைக்கப்பட்ட சண்டேஸ்வரர்


அழகே உருவான விஷ்ணு துர்க்கை


பலிபீடம், கொடி மர பீடம் மற்றும் நந்தி மண்டபம்


குலோத்துங்க சோழர் கல்வெட்டு



வரலாற்றுப்_பயணங்கள்:55-திரிபுராந்தக சுவாமி திருக்கோவில், கூவம் கிராமம்,

திரிபுராந்தக சுவாமி திருக்கோவில்,
கூவம் கிராமம்,
திருவிற்கோலம்,தீண்டாத்திருமேனி
ஐயன்நல் அதிசயன் அயன்விண் ணோர்தொழும் மையணி கண்டனார் வண்ண வண்ணம்வான் பையர வல்குலாள் பாக மாகவுஞ் செய்யவன் உறைவிடந் திருவிற் கோலமே.
இறைவர் யாவற்றுக்கும் தலைவர். பல பல வேடம் கொள்ளும் அதிசயர். பிரமனும், மற்றுமுள்ள விண்ணோர்களும் தொழுகின்ற மை போன்ற இருண்ட கண்டத்தர். நல்ல வண்ணமுடைய, பாம்பின் படம் போன்ற அல்குலையுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு செம்மேனியராய் அவர் வீற்றிருந்தருளும் இடம் திருவிற்கோலம் ஆகும்.
ஏழாம் நூற்றாண்டில் செங்கல் கோயிலாக இருந்தது என்றும் பதினோராவது நூற்றாண்டில் கற்றளியாக திருப்பணி செய்யப்பட்தாகவும் கோயிலில்
குறிப்பு உள்ளது .


இன்னும் நீரிருக்கம் குளம்....

இராஜகோபுரம் உள் நுழைந்ததும் இரண்டு கொடிமரத்துடன் கூடிய அமைப்பு


குளக்கரையில் உள்ள தெலுங்கு கல்வெட்டு


கோயில் வெளியே உள்ள அற்புதமான ஓட்டுவீடு,இந்த மாதிரியான ஒரு வீட்டில் எனது எட்டு வயது வரை விளையாடித்திறிந்தேன். நினைத்தாலே ஒரு குதூகலம்.....🙂🙂🙂🙂


பூமியைக்கூடையம் அழகிய வராகமூர்த்தி சிற்பம் லிங்கோத்பவரில்.


கஜலட்சுமி


பிரம்மன் வடக்கு நோக்கி


ஆழ்ந்த சிற்ப வேலைப்பாடுகளுடன் லிங்கோத்பவர்.


வள்ளி தெய்வயனை உடன் முருகனும் மயிலும்.


திரிபரத்தை அழிக்க தேரில் ஏற சிவபெருமான் காலை வைத்ததும் தேரின் அச்சு முறிந்தது. புறப்படும்முன் விநாயகரைத் துதிக்காததே அச்சு முறிந்ததற்குக் காரணம் என்று விநாயகரை அனைவரும் வணங்க அச்சு நேராயிற்று.

இவர் தான் அவர்.....😊


சிரித்த அழகிய முகத்துடன் தட்சிணுக்கு அருளிய தட்சிணாமூர்த்தி.



லிங்கம் ஒரு சுயம்பு லிங்கம். இங்குள்ள இறைவனை, லிங்கத் திருமேனியை யாரும் தொடுவதில்லை. அதனால் இறைவன் தீண்டாத் திருமேனி நாதர் என்றும் பெயர் கொண்டுள்ளார்.
இங்குள்ள லிங்கம் காலத்திற்கு ஏற்ப நிறம் மாறுவதாக கூறப்படுகிறது. அதிக மழைபெய்வதாக இருந்தால் இறைவரின் திருமேனியில் வெண்மை நிறம் தோன்றுவதும், யுத்தம் ஏற்படுவதாயிருந்தால் சிவப்புநிறம் தோன்றுமாம், இப்போது அப்படி மாறவில்லை என கூறுகிறார்கள்.

அருமையான புராணக்கதை

தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்ற மூன்று அசுரர்கள் பிரம்மனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார்கள். தவத்தை மெச்சிய நான்முகன் அவர்கள் முன் தோன்ற, அவர்கள் விந்தையான வரம் ஒன்றைக் கேட்டார்கள்!

மண் உலகில் இரும்பால் ஆன கோட்டை, பாதாள உலகில் வெள்ளியாலும், விண்ணுலகில் பொன்னால் ஆன கோட்டையும் வேண்டும். சகல வளங்களும் இந்த முப்புரங்களில் அமைய வேண்டும். அவர்கள் மூவரும் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்கு இந்தக் கோட்டைகளுடன் பறந்து செல்ல வேண்டும். ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை சிறிது நேரம் இந்த மூன்று கோட்டைகளும் ஒரே நேர்க்கோட்டில் அமையும்போது, சிவபெருமான் ஒரே ஓர் அம்பினால் அவற்றைப் பொடியாக்கி தங்களுக்கு மோட்சம் அளிக்க வேண்டும்! இதுதான் அவர்கள் கேட்ட வரம்! பிரம்மனும் அருள்புரிந்து விட்டு மறைந்தான்.

அந்த மூன்று கோட்டைகளையும் விண்ணில் அட்டகாசமாய் பறக்கவிட்டு வைகுந்தம் போன்ற தேவ நகரங்களையும் பல புண்ணிய ஷேத்திரங்களையும் இந்த அசுரர்கள் பாழ்படுத்தி தேவர்களுக்குப் பெருந்துயர் விளைவித்தனர்.

தேவர்கள் அனைவரும் நாராயணரிடம் சென்று முறையிட, அவர் தனக்கே உரித்தான தேவதந்திரத்துடன் செயல்பட்டார். தனது மாயா சக்தியால் புதிய வடிவு கொண்டு நாரதமுனிவர் சீடராக உடன்வர, திரிபுரமடைந்து அந்த அசுரர்களை சிவநிந்தனை செய்யும்படி செய்தார்!

அந்த அசுரர்களும் திருமாலின் மாயவலைக்கு ஆட்பட்டு சிவபெருமானை நிந்தித்தார்கள். இத்தனைக்கும் அந்த அசுரர்கள், தேவர்களைத் துன்புறுத்தினார்களே தவிர, தினமும் தவறாமல் சிவபூஜை செய்து வந்தார்கள்.

அசுரர்கள் சிவநிந்தனை செய்வதைத் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டு அவர்களை அழித்துத் தங்களைக் காக்கும்படி வேண்டினார்கள். சிவனும் மனமிரங்கி அவ்வாறே செய்வதாய் அவர்களுக்கு உறுதி அளித்து போருக்குப் புறப்பட பிரம்மாண்டமான தேர் ஒன்றினை நிர்மாணிக்கக் கூறினார்.

தேவர்கள் படுஉற்சாகமாக வேலை செய்தனர். சூரிய பகவானும் சந்திர பகவானும் தேரின் சக்கரங்கள் ஆயினர்! நான்கு வேதங்களும் குதிரைகள் ஆயின. பிரம்ம தேவனே சாரதி! மேருமலை வில்லாகவும், நாகங்களின் தலைவி வாசுகி நாணாகவும், திருமால் அம்பாகவும், அக்னிதேவன் அந்த அஸ்திரத்தின் முனையாகவும் மாறினர்.

தேரில் ஏற சிவபெருமான் காலை வைத்ததும் தேரின் அச்சு முறிந்தது. உடனே திருமால் ரிஷபமாக மாறி சிவபெருமானைத் தாங்கி நின்றார். புறப்படும்முன் விநாயகரைத் துதிக்காததே அச்சு முறிந்ததற்குக் காரணம் என்று விநாயகரை அனைவரும் வணங்க அச்சு நேராயிற்று.

சிவபெருமான் திரிபுரங்களை அழிக்கத் தேரில் கிளம்பினார். தேவர்களுக்கு ஒரே கர்வம். தாங்கள் உருவாக்கின தேர் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தித்தான் சிவன், அசுரர்களை வெல்லப் போகிறார் என்று! ஆனால் சிவபெருமான் தேவர்களின் இந்தக் கர்வத்தை ஒழிக்க நினைத்தார்.

கோட்டைகள் ஒரே நேர்க்கோட்டில் வந்தவுடன் அவற்றைப் பார்த்துப் புன்னகைப் புரிந்தார்.

அடுத்த கணமே அந்தக் கோட்டைகள் பற்றி எரிந்து சாம்பலாயின! தனக்கு எந்த ஆயுதமும் படையும் எதிரிகளை அழிக்கத் தேவையில்லை. வெறுமனே நினைத்த மாத்திரத்தில் அவர்களை அழிக்கத் தன்னால் முடியும் என்று தேவர்களுக்கு நிரூபித்தார் சிவபெருமான்.

தான் கொண்டு சென்ற ஒரே ஓர் அம்பைக் கூட அவர் பயன்படுத்தவில்லை. தேவர்கள் தங்களின் வீணான கர்வத்தை நினைத்து வருந்தி சிவனைப் பணிந்து நின்றார்கள்.

இப்படி சிவபெருமான் திரிபுரம் எரித்த புராண நிகழ்வை, “திரிபுரமுந்திரி வென்றிட வின்புடன் அழலுந்த நகுந்திறல் கொண்டவர் புதல்வோனே” என்ற அடிகள் மூலம் குறிப்பிடுகிறார்

உதவி: இணையம்


காத்தல் நடனமாடும் நடராஜர் முகப்பு கோபுரத்திற்கு நேர் எதிரான, மூலஸ்தான நுழைவாயில் அருகே.


திரிபுரசுந்தரி அம்மன்

தெற்கு திசையில் உள்ள ஐந்து அடுக்கு முகப்பு கோபுரம்,மூலஸ்தான கோபுரம், அம்மன் கோபுரமும்.



வரலாற்றுப்_பயணங்கள்:56- பூதங்கள் செய்யும் அட்டகாசம்


நந்தி தேவர்



நான்கு கரங்களில் இரண்டில் மத்தளம், ஒரு கையில் மான் ஒரு கையில் சங்கு, தலையில் கிரிடமும் ,வானரம் போல முகமுடை இந்த சிற்பம் யாராக இருக்கும், இதன் விளக்கம் என்னவா இருக்கும்.
இடம் #கச்சபேஸ்வரர் கோயில் மண்டபம்

வரலாற்றுப்_பயணங்கள்:54-ஹோய்சாலேஸ்வரர்,கர்நாடகம்

அலங்கரிக்கப்பட்ட போர் யானைகள் கீழ்வரிசையில்,
அதற்கடுத்தாற்போல் சிங்கங்களின் வரிசை,
அதற்கு சற்று மேலே குதிரைகள் போர் வீரர்களுடன் போர் செய்யத் தயாரான நிலையில் மேலும் கீழும் அலங்கார தோரணங்களுடன் ,
அதற்கு மேலே நடன மங்கைகளும் நடனக்காரர்களும் வாத்தியக்காரர்களும் வேறு வேறு நிலைகளில்,
அதற்கு அடுத்தாற்போல் சிங்கமுக தோரணங்களும் யாழிஅமைப்பு தோரணங்களும் ,
அதற்கு மேல் அழகிய அன்னப்பறவைகளின் அணிவகுப்பு,
கைலாயத்தில் வீற்றிருக்கும் சிவன் பார்வதியும் அவர்களை வணங்கி நிற்கும் பூதகணங்கள் தேவர்கள் முனிவர்கள் மக்கள் விலங்குகள் இவை அனைத்தையும் தன்னுடைய பத்து தலைகள் தூக்கி நிற்கும் தசகண்ட ராவணன், அருகே உள்ள ஒரு சிலையில் சிவன் பார்வதி ரிஷபத்தில்....
#ஹோய்சாலேஸ்வரர் , திருக்கோயில்,
#ஹளபீடு, கர்நாடகம்

வரலாற்றுப்_பயணங்கள்:53-சென்னகேசவர்_கோயில்,பேளூர்,கர்நாடகம்

சென்னகேசவர் கோயில் ,
பேளூர்.
12 ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில் ஹோய்சால பேரரசின் மன்னனான விஷ்ணுவர்தனால் கி.பி(1108 -1152) இந்த கோயில் கட்டப்பட்டது,
விஜயநகரப் பேரரசர்களால் கட்டப்பட்ட ராஜகோபுரத்தின் வழியாக உள்நுழையும் போது ஒரு மிகப்பெரிய கொடிமரமும்,
அதற்கு முன்னால் கருடாழ்வார் அழகிய கேசவனை வணங்கி நிற்கிறார்.
உள்நுழைந்ததும் இதுவரை காணாத ஒரு கோயில் அமைப்பை கண்டு நாம் வியக்க, மேலும் நெருங்கி சென்றுபார்த்தால் வியப்பு மென்மேலும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
சற்று இடதுபுறத்தில் 40 அடி உயரமுள்ள ஒரு ஜயஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது மிகவும் அழகான வேலைப்பாடுகளுடன்
நட்சத்திர வடிவ பீடத்தின் மீது சென்னகேசவ பெருமாள் கோவிலும் ,
வலது புறத்தில் காப்பேசென்னிக்கிராயர் கோயிலும்,
ஒரு சிறிய லட்சுமி கோயிலும், பின்புறத்தில் ஆண்டாள் கோயிலும் அமைந்துள்ளது.
இந்த கோயில்களில் வெளிச்சுவர்களில் மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய மகாபாரதம் மற்றும் ராமாயணம் கதைகள் அழகாக சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன, தசாவதாரகதைகள், மகாகாளி சிலை, அழகிய மோகினி சிலை, பிச்சாண்டவர் சிலை ,போர்புரியும் யானைகள் மற்றும் வீரர்களின் சிலை, காலசம்ஹார மூர்த்தி, கஜசம்ஹார மூர்த்தி சிலைகளும் மிக நேர்த்தியாக கண்ணைக் கவரும் வகையில் காணப்படுகிறது.
கோயிலின் வடகிழக்கு மூலையில் அழகிய சிறிய சிறிய கோபுரங்களுடன் கூடிய ஒரு குளம் உள்ளது.
ஹோய்சால கட்டடக்கலையில் மிகவும் ரசிக்கத்தக்க ஒன்று கோயிலின் தூண்கள். வட்டமாக கடையப்பட்ட தூண்கள் சிறுசிறு முக்கோண வடிவமாக கடையப்பட்ட தூண்கள் மிகவும் நெருக்கமான நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் மிகவும் அழகானவை,
மேலும் ஒரு சிறப்பான அழகான விஷயம் அனைத்து சிலைகளுக்கும் ஆபரணங்களை சூட்டி அழகு பார்த்திருக்கிறார்கள் இப்போது செய்யும் தங்க ஆபரணங்களின் நுணுக்கமான வேலைப்பாடுகளையும் போட்டி போடக் கூடியவை இந்தக் கல் ஆபரணங்கள்.
ஏறக்குறைய சூரியன் உச்சியில் வந்து வேளையில் உள்நுழைந்து வெளியே வரும் போது தான் கவனித்தேன் மணி மூன்று.
இந்தக் கோயிலின் சிற்ப அழகும் நுட்பமும் நேரில் பார்த்தால் மட்டுமே உணர முடியும்.


சென்னகேசவ பெருமாள் திருக்கோயில்

சென்ன கேசவ பெருமாள் மேற்குப்புறம்

கற்பனையாக நாம் வீடு வரையும்போது நிறைய அலங்காரங்களும் சிறிய சிறிய வாசல்களும் சிறிய சிறிய கைப்பிடிகளும் வைத்து வரைந்து விளையாடி இருப்போம் , இங்கு சிற்ப கலைஞர்கள் அதற்கும் ஒருபடி மேலே சென்று உள்ளனர்


மேற்கூரையில் அழகாக செதுக்கப்பட்ட நரசிம்மமூர்த்தியின் சிற்பம்


மாய , மாயமானாக மாறிய மாரிச்சன் ,இராமன் லட்சுமணன், சீதை


உலகளந்த பெருமாள்



போர் யானைகள் , அலங்கார பட்டைகள் , சாளரங்கள் , புடைப்புச் சிற்பங்கள் , தனி சிற்பங்கள் .


எட்டு கைகளில் பல்வேறு ஆயுதங்களுடனும் ,ஒரு வெட்டிய தலையுடனும் ,அழகிய ஆபரணங்களுடனும் பேளூர் சென்னகேசவ பெருமாள் கோவில் காலபைரவன்....


பக்த ஆஞ்சநேயர்




வரலாற்றுப்_பயணங்கள்:52-ஹோய்சளஸ்வரர்_திருக்கோயில்,கர்நாடகம்.

ஹோய்சாலேஸ்வரர் திருக்கோவில் ,ஹளபீடு,கர்நாடகம்.
ஹோய்சாள கட்டடக்கலையின் மற்றுமொரு அதிசயமான படைப்பு இந்த திருக்கோவில், பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹோய்சாளபேரரசை ஆட்சி செய்த விஷ்ணுவர்தன் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.
ஹளபீடு அல்லது துவாரசமுத்திர என்னும் இந்த ஊர் ஏறக்குறைய 300 ஆண்டுகளாக ஹோய்சாள அரசின் தலைநகரமாக இருந்துள்ளது.
இந்த ஒரே கோயிலில் ஹோய்சாலேஸ்வரர்,
சாந்தலேஸ்வரர் இருவருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன, இந்த இரண்டு சிவன் சன்னதிகளின் நேரே கோயிலுக்கு வெளியே இரண்டு நந்தி மண்டபம் , கூரைகளில் அழகான சிற்ப வேலைப்பாடுகளுடன் கலை நுணுக்கத்துடனும் வடிவமைக்கப் பட்டுள்ளன ,
ஹோய்சாலேஸ்வரர் நந்தி மண்டபத்தின் பின்னால் சூர்யநாரயணன் சன்னதியும் ஒட்டியே உள்ளது.
இந்தக் கோயிலின் சிற்ப வேலைப்பாடுகள் அதி நுணுக்கமானவை, தற்காலத்தில் உள்ள லேசர் கட்டிங் என்று சொல்லப்படுகின்ற அளவிற்கு மிகவும் நுணுக்கமான ஆபரண வடிவமைப்புச் சிற்பங்கள்....
கற்பாறைகளில் இத்தகைய சிலைகள் வடிப்பது மிகவும் கடினமான காரியமாக இருக்கும் போது இவர்கள் அதற்கான பிரத்யோகமான சோப்புகல் எனும் மக்னீசியம் சிலிகேட் பாறைகளை பயன்படுத்தி இருக்கிறார்கள்,இந்த நுணுக்கமான வேலைப்பாடுகள் செய்ய திட்டமிட்டு அதற்கான சரியான கற்களை தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள்.....
14ஆம் நூற்றாண்டிலேயே ஹளபீடு, டெல்லியை ஆட்சி செய்த சுல்தான்களின் தாக்குதலுக்கு உள்ளாகி இந்த கோயில் சற்று சிதிலமடைந்துள்ளது ,
அலாவுதீன் கில்ஜி, முகமது பின் துக்ளக் போன்ற சுல்தான்கள் ஹோய்சாள பேரரசின் மீது படையெடுத்து இந்த கோயிலின் மீதும் தாக்குதல் நடத்தி உள்ளார்கள்,
கடைசியாக மூன்றாம் வல்லாளன் என்ற அரசன் முஸ்லீம் தளபதி மாலிக் கபூர் என்பவனால் கொல்லப்படுகிறார்.
அரசனைக் கொன்ற பிறகு மாலிக்கபூரின் வெறி எதன்மீது திரும்பி இருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும், அதன் வெளிப்பாடு இந்த கோயில்களிலும் காணலாம்.
ஹோய்சாள கட்டடக் கலையின் சிறப்பு அம்சமான கடைந்தெடுத்த தூண்களும், பல அடுக்கு சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய சுற்றுச் சுவர்களும், ஒரே மேடை மீது அமைக்கப்பட்ட முழு கோயிலும் இங்கு காணலாம்...
மேலும் இக்கோயிலின் வெளிப்புற சுற்றுச்சுவரில் பாகவத கதைகளிலும், ராமாயண கதைகளிலும்,மகாபாரதக் கதைகளையும் வரும் போர்க் காட்சிகளை தத்ரூபமாக சிலைவடித்துள்ளார்கள்.



இந்த சிற்பத்தில் உள்ள ஒரு பெண்ணின் முகம் நாம் இப்போது படங்களில் பார்க்கும் ஏலியன் முகம் போல உள்ளது, இதை எவ்வாறு கற்பனை செய்து வடிவமைத்திருப்பார்கள் தெரியவில்லை
(Ashvamukhi means "horse face" in Sanskrit. The name usually refers to type of Yakshini, or nymph, that has the head of a horse. These nymphs are regarded as violent and predatory.
One tale of the Ashvamukhi concerns a queen who once lived in the city of Varanasi. This queen was unfaithful to her husband, the king, prompting him to accuse her of betrayal. The queen refuted the accusation, insisting that if she was guilty, she may be reincarnated as a Yakshini with a horse’s head. The queen was reborn in her next life as an Ashvamukhi, exactly as she had said. Having a horse’s head, she was not able to seduce men with her looks. Therefore, she resorted to evil ways, taking men by force and devouring them. She also left the forest to live in the desert, perhaps because the other Yakshinis did not want her among them, and she made her dwelling in a cave. One day the Ashvamukhi abducted a travelling Brahmin. She was going to kill him, yet she fell in love with him instead. She held him prisoner in her cave and had a son with him. She loved this son dearly. Eventually the Brahmin escaped and took the son with him, never to return. The Ashvamukhi died heartbroken. This incident fulfilled her karmic debt and she could be human again in the following life.
This illustration, and this story, will appear in my upcoming bestiary of mythical creatures from around the world.)



கோயிலின் மேற்குப் பகுதி தோற்றம்
பத்மபீடத்தில் நடனமாடும் விநாயகரும், கையில் உடுக்கையுடனும் சூலத்துடனும் மகாகாளியும், புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணரும், கடைசியாக மகாபலியிடம் தானம் பெறும் குடையுடன் கூடிய சிறிய வாமனன்... தானம் பெற்ற பிறகு உலகம் உலகளந்த பெருமாள்.
இந்தப் பகுதியை சிற்பத்தில் அமைக்க வரைபடம் வரைந்தவனை என்ன சொல்வது....

கோவிலின் தெற்குப் பகுதியில் தனியாக அமர்ந்திருக்கும் விநாயகர்

அழகிய சாளரங்கள் அதற்கு சற்று கீழே களவியலில் களிப்புறுபவர்கனையும் சிற்பங்களாக வடிவமைத்து மகிழ்ந்திருக்கிறார்கள். அந்தச் சிற்பங்கள் சற்று பெரியதாக வடிவமைக்கப்பட்டிருந்தால் தென்னாட்டின் கஜுராஹோ என சொல்லும் அளவிற்கு அமைந்திருக்கலாம்....


காலில் உயரமான காலனி கையில் ஒரு பாம்பு கழுத்தில் ஒரு பாம்பு இரண்டு காலையும் சேர்த்து கட்டினார் போல ஒரு பாம்பு சிகையில் முழுவதும் பாம்புகள் இது யாராக இருக்கும் என்று தெரியவில்லை....
(கையில ஒரு கபாலம் அந்த கபாலத்தில் உள்ள ஒரு பாம்பு போய் கண்ணு வழியே வெளியே வருது எவ்வளவு யோசிச்சு இருப்பாங்க பாருங்க நமக்கு ட்ராயிங் போடனும்னு நினைக்கும் போதே தலை சுத்துது)


கஜேந்திரன் மீது இந்திரனும் இந்திராணியும், அதேபோல கருடன்மீது விஷ்ணுவும் விஷ்ணுவின் மடியில் மகாலட்சுமியும்...

Amazing Vedic architecture photo series:A Sculpture depicting the battle, when Krishna along with Satyabhama stole Parijata from the garden of Lord Indra. 900 year old carving at Hoysaleswara temple: Source:Wonderful Indian Architecture


கருட வாகனத்தில் மகாவிஷ்ணு கஜேந்திரமோட்சம் மோட்சம் அளிக்கும் காட்சி.

கோவர்தன மலையை தூக்கிப்பிடிக்கும் கண்ணன் மலைக்கு அடியில் காணப்படும் விலங்குகள் பாம்புகள் மனிதர்கள் 

அடுத்தாற்போல் மோகினி

மகிஷாசுரமர்த்தினி


ஹோய்சாலேஸ்வரர் நந்தி மண்டபம்


பாசுபதாஸ்திரம் வேண்டி தவம் புரியும் அர்ஜுனனுக்கும் சிவனுக்கும் நடைபெற்ற சண்டைக் காட்சி ...


மகா விஷ்ணு ருத்ரன் மோகினி சிலைகள்,
ராமன் சுக்ரீவனிடம் வாலியை கொன்று உன்னைக் காப்பாற்றுகிறேன் என்று வாக்களிக்கும்போது நம்பாத சுக்ரீவன் ஏழு மரா மரங்களைத் துளைக்குமாறு ராமனிடம் வேண்டினான் அவன் வேண்டுகோளுக்கிணங்க இராமன் மரா மரங்களைத் துளைக்கும் காட்சி, அதை கண்டு ஆனந்தப்படும் வானரங்கள்...



கீழிருந்து மேல் ஏறக்குறைய 14 வரிசைகளில் அலங்கரிக்கப்பட்ட சிலைகள் புராண கதைகள் கொண்டு வெளிப்புற சுவர் அமைக்கப்பட்டுள்ளது, ஆறாவது அடுக்கில் ,5 அங்குலம் கொண்ட சிலைகளால் வெளிப்புற சுவர் முழுவதும் ராமாயணம் , மகாபாரதம் , பாகவதம் கதைகளில் அதுவும் குறிப்பாக போர்க் காட்சிகள் சிலையாக வடிவமைக்கப் பட்டுள்ளது.


என்ன ஒரு ஒய்யாரமாக போஸ்😜😜


மேற்குப்புற சுற்றுச் சுவரின் ஒரு பகுதி


கலைவாணியும் பிரம்மதேவனும் ,நாட்டியமாடும் சிவனும் ,விஷ்ணுவும் மகாலட்சுமியும்.


அழகிய தூண்களுடன் நந்தி மண்டபம்


காலபைரவர்


பிரகலாதன் வணங்கி நிற்க இரண்யனை தன் மடியில் கிடத்தி அவன் வயிற்றைக் கிழித்து குடலை மாலையாக அணிந்து கொள்ளும் நரசிம்மமூர்த்தி அருகில் பிரம்மாவும் விஷ்ணு துர்க்கையும்....


கிழக்குப் புற சுற்றுச் சுவரின் ஒரு பகுதி


தெற்கு வாயிலின் இடது புறத்தில் அமைந்துள்ள சுவற்றில் விநாயகமூர்த்தி பிரம்மாவும் நுட்பமான வேலைப்பாடுகளுடன் கூடிய நகை அலங்காரங்களுடன்,
மனிதர்களுக்கும் கடவுள் சிலைகளுக்கும் மட்டுமல்ல விநாயகரின் வாகனத்திற்கும் பிரம்மாவின் வாகனத்திற்கும் நகைகள் அலங்கரித்துள்ளார் இந்த சிற்பிகள்...


கஜசம்ஹாரமூர்த்தி


கோவிலின் தெற்கு வாயிலில் காவல் புரியும் உச்சி முதல் பாதம் வரை அணி அலங்காரங்களுடன் துவாரபாலகர்.


video

கோயிலின் முகப்பு


ஹோய்சாலேஸ்வரர்


சாந்தலேஸ்வரர்





Popular Posts