Friday, December 27, 2019

வரலாற்றுப்_பயணங்கள்:46-ஸதலசயனப்பெருமாள்,மாமல்லபுரம்

ஸதலசயனப்பெருமாள்,
மாமல்லபுரம்.
கிழக்கு கடலை நோக்கி ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆதிசேஷன் இல்லாமல் நிலத்தில் படுத்து அருள் புரியும் ஸதலசயனப் பெருமாள், கடல்மல்லையிலுள்ள அற்புதமான, கலையம்சமிக்க , பல வரலாற்று பின்ணணிகள் கொண்டு; பூதத்தாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்று.
பார்வண்ண மடமங்கை பனிநல்மா மலர்க்கிழத்தி,
நீர்வண்ணன் மார்வத்தி லிருக்கையைமுன் நினைந்தவனூர்,
கார்வண்ண முதுமுந்நீர்க் கடல்மல்லைத் தலசயனம்,
ஆரெண்ணும் நெஞ்சுடையா ரவரெம்மை யாள்வாரே.
-திருமங்கையாழ்வார்
பதினான்காம் நூற்றாண்டில் விஜயநகர அரசர் பராங்குசன் இந்தக் கோயில் கட்டி முடித்திருக்கிறார் என கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.
??இவர் விஜயநகர அரசர் என்ற விபரம் மட்டுமே அறியப்படுகிறது.
??மேலும் கல்வெட்டுக்கள் இங்குள்ள பெருமாளை உலகுய்ய நின்ற பெருமாள் என்று கூறுகிறது, ஆனால் இங்கு கருவறையில் பெருமாள் நிலத்தின் மீது பள்ளி கொண்ட நிலையில் அருளுகின்றார்.
இவ்விரண்டு தகவல்களுக்கும் தெளிவு இல்லை.
கிழக்கில் உள்ள ராஜ கோபுரத்தின் வழியே நுழையும் பொழுது இரண்டு பக்கங்களிலும் விஷ்ணு மூர்த்தியின் அவதாரங்கள் சிறிய சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது. சில தூண்போன்று நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்ப வடிவங்களும் இரண்டு பக்க சுவர்களிலும் காணப்படுகிறது, இது விஜயநகரப் பேரரசின் கட்டடக் கலையை நினைவுபடுத்துகிறது.
உள்ளே நுழைந்தவுடன் கல்லினால் ஆன ஒரு கொடிமரமும், இடதுபுறத்தில் கல் தூண்களால் ஆன ஒரு மண்டபமும் உள்ளது.
மேலும் பெருமாளை தரிச்சித்தவாறு காட்சிதரும் கருடாழ்வார் சன்னிதியும்
உள்ளது.
கர்ப்பகிரகத்தின் வலதுபுறத்தில் நிலமங்கை தாயாருக்கு தனி சன்னிதியும், இடதுபுறத்தில் ஆண்டாள் நாச்சியாருக்கு தனி சன்னிதியும் உள்ளது .
மேலும் ஆண்டாள் சன்னதியை தொடர்ந்து லக்ஷ்மி நரசிம்ம மூர்த்தி, இராம லக்ஷ்மண சீதாதேவி, அனுமன் மற்றும் மல்லையில் பிறந்ததாக நம்பப்படுகின்ற பூதத்தாழ்வார் ஆகியோர்களுக்கு சிறிய சிறிய சன்னிதிகளாக கோயிலின் வடக்கு புற வெளி சுற்றுச்சுவருக்கு உட்பக்கமாக அமைக்கப்பட்டுள்ளது.
கருவறைக்குள் நுழையும் போது ஜெயன் மற்றும் விஜயனின் கம்பீரமான சிலைகளும் உள்ளே நுழைந்தவுடன் வலது பக்கம் பன்னிரெண்டு ஆழ்வார்களின் உலோக சிலை வடிவங்கள் உள்ளன.
கருவறையில் கிழக்கு நோக்கியவாறு தெற்கில் தலை வைத்து அமைதியான முகத்துடன் தனிமையில் அருள்பாலிக்கிறார் ஸதலசயனப் பெருமாள்.
உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கையில் ஒரு தாமரை மலருடன் உள்ளது அரிய காட்சி .
108 திவ்யதேசங்களில் விஷ்ணு தரையில் படுத்திருப்பது போன்ற அமைப்பு இங்கு மட்டுமே என்று கூறப்படுகிறது.
மேலும் ஒரு கூடுதல் தகவல்..... மகிஷாசுரமர்தினி குடவரை மற்றும் பழைய கலங்கரை விளக்கத்திற்கு மேற்கே அமைந்துள்ள ஆதிவராக குடைவரைக் கோயிலில் மகேந்திர பல்லவர் மற்றும் சிம்மவிஷ்ணுவின் சிற்பங்கள் காணப்படுகிறது, எனினும் பெரும்பாலும் பூட்டப்பட்டிருக்கும் இந்த குடைவரையை ஸதலசயனப் பெருமாள் அர்ச்சகர்கள் வாரநாட்களின் 10 மணி அல்லது 11 மணியளவில் ஆதிவராகர் குடவரைக் கோயிலிலும் பூஜை செய்வதற்காக திறக்கிறார்கள்.
இந்த திவ்ய தேசம் பற்றி ஒரு சில மாற்றுக் கருத்தும் உள்ளது அதற்கான இணையதள இணைப்பு இத்துடன் இணைத்துள்ளேன்



  • ராயர் கோபுரத்தில் இருந்து ஸதலசயனப் பெருமாள் கோயில்
  • ராஜகோபுரத்தின் உட்புறத்தில் உள்ள சிலைகள்
  • கல்தூண் கொடிமரம்
  • ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்
  • ஸ்ரீ லட்சுமி நரசிம்ம மூர்த்தி
  • ஸ்ரீ சீதா இராம லட்சுமணன்



No comments:

Post a Comment

Popular Posts