Friday, December 27, 2019

வரலாற்றுப்_பயணங்கள் 42:பிரம்மதேசம்_நாட்டேரி

பசுமை போர்த்திய வயல்வெளிகளுக்கு மத்தியில்,ASI யின் பச்சை வேலிக்கு உள்ளே முழுமையாக கோடை காலத்தைப் பிரதிபலிக்கும் ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல் ஆகாயத்தை ஏக்கத்தோடு பார்த்து நிற்கும் அழகிய குளத்திற்கு அருகில் , பூவும் பிஞ்சும் ஆக தழைத்து காணப்படுகின்ற புளிய மரத்துக்கு சற்று தூரத்தில், பட்டுப்போகாமல் வளைந்து ஒய்யாரமாய் நிற்கும் பனை மரத்திற்கும் அருகில் ஒரு சிறிய அழகிய கற்றளி உள்ளது.
கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ள இந்தக் கோயிலின் மூலகோபுரமும், அர்த்தமண்டமும் கம்பவர்மன் என்ற பல்லவ மன்னன் காலத்தில் ராஜமல்லன்(817 - 853 ) என்னும் கங்க மன்னனால் மணற்பாறைகளால் கட்டப்பட்டது, அதற்கு முன்னால் உள்ள மகா மண்டபம் சோழர் காலத்தில் கற்பாறைகளால் கட்டப்பட்டு இருக்கின்றது.
இந்த முழு கோயிலைச்சுற்றி ஒன்னரை அடி ஆழத்திற்கு அகழி போன்ற ஓர் அமைப்பால் சூழப்பட்டிருப்பது இக்கோயிலுக்கு மேலும் ஒரு சிறப்பு.
ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயில் பல்லவர்கள் மற்றும் கங்கர்களின் கட்டடக்கலையை பிரதிபலிக்கிறது.
இந்தக் காலகட்டத்தில் மேற்கு கங்க அரசனான ராஜமல்லன் என்பவனின் பெயராலே இக்கோயில் ராஜமல்ல சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்பட்டதையும்,
முதலாம் ராஜராஜ சோழனின் இருபதாம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் இக்கோயில் பராக்கிரம சோழ சதுர்வேதி மங்கலம் என்று ராஜராஜரின் பட்டப் பெயரால் மாற்றப்பட்டதையும் இங்குள்ள கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.
பல்லவ மன்னன் கம்பவர்மனின் இருபதாவது ஆட்சி ஆண்டில் இக்கோயிலுக்கு நிவந்தம் அளித்த கல்வெட்டு மிகப் மிகப்பழமையானது, இவர் பிற்கால பல்லவமன்னர்களில் கடைசி மன்னனான அபராஜித வர்மனின் தந்தையாவார்.
ஒன்பதாவது நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் ஆட்சி புரிந்த அபராஜிதன் கிபி 862-63 ஆண்டு திருப்புறம்பியத்தில் நடந்த போரில் கங்க மன்னன் பிருதிவீபதி மற்றும் சோழமன்னர்கள் விஜயாலயன் மற்றும் ஆதித்திய சோழன் இவர்களுடன் இணைந்து பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுண வர்மனை(862 - 880) தோற்கடித்தான்.
பிறகு இவர் ஆதித்த சோழனால் முறியடிக்கப்பட்டதால் பல்லவர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது..
இந்தக் கோயில் பல்லவர்களின் கடைசி கற்றளியாகவும் இருக்கலாம் என்ற ஒரு அனுமானம் உள்ளது.
மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பர கேசரி முதலாம் பராந்தக சோழரின் 15 கல்வெட்டுகளும், கன்னரதேவரின்தேவரின் ஒரு கல்வெட்டும்,
சோழர்களின் ஆட்சிக்காலத்தில் பொற்காலம் என்று வர்ணிக்கப்பட்ட முதலாம் ராஜராஜ சோழனின் ஒன்பது கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளது,
பார்த்திபேந்திரனின்13 கல்வெட்டுகளும் உள்ளது .
இதில் பார்த்திபேந்திரன் என்பவன் பராந்தக சுந்தர சோழரின் தொண்டைமண்டல பிரதிநிதியாக ஆட்சி புரிந்தவன் என்று வரலாற்று ஆய்வாளர்களின் அனுமானம் ,
பார்த்திபேந்திரன் இரண்டாவது ஆட்சியாண்டுக் கல்வெட்டில் பாண்டியன் தலைகொண்ட பார்த்திபேந்திரன் என்ற பட்டத்துடன் கல்வெட்டு குறிப்பிடத்தக்கது.
வார்த்தைகளில் அடங்காத பெருமையை சோழ தேசத்திற்கு ஈட்டித்தந்த ராஜேந்திர சோழ தேவரின் 13 கல்வெட்டுக்கள் உள்ளன, ராஜேந்திர சோழ தேவரின் வரலாற்றை..... இந்த பிரம்மதேசம் என்ற ஊரைப் பற்றி படிக்காமல் கடந்துவிட முடியாது .....
ராஜேந்திர சோழனின் மகன் முதலாம் ராஜாதிராஜன் தன்னுடைய 26-ஆவது ஆட்சியாண்டில் 120-வது நாளில் (கி.பி.1044-ல்) எழுப்பப்பட்ட நாட்டேரி பிரம்மதேசம் கல்வெட்டில் ராஜேந்திர சோழன் இறந்த செய்தியும், அது தொடர்பாக வீரமாதேவி தமையன் பரகேசரி வேளான், பொதுச்சபையை புளியமரத்தடியில் கூட்டி நிலதானமளித்து, தண்ணீர் பந்தல் (கிணறு அல்லது குளம்)அமைத்ததும், ராஜேந்திர சோழனின் மனைவி வீரமாதேவி உடன்கட்டை ஏறிய நிகழ்வும் கூறப்பட்டுள்ளது.
ராஜேந்திர சோழரின் பள்ளிப்படைக் கோயிலாக இருக்க வாய்ப்பில்லை என்றும் அவருக்கு முந்தைய நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் தெரியவருகிறது.
எது எப்படி இருந்தாலும் ராஜேந்திர சோழன் தனது இறுதி நாட்களில் இவ்விடத்தில் இருந்தார் என்பது புலனாகிறது.
சுங்கம் தவிர்த்த சோழன் முதலாம் குலோத்துங்கனின் (1070 - 1120) 2 கல்வெட்டுகளும்,
மூன்றாம் குலோத்துங்க சோழனின் 1173 -1218) இரண்டு கல்வெட்டும் உள்ளது .
கல்கி அவர்களின் பொன்னியின் செல்வனின் கதாநாயகனான வல்லவரையன் வந்தியத்தேவன் துணைவியார் அளித்த நிவந்தங்கள் கல்வெட்டும் இங்கு உள்ளது....
மற்றும் பல அரசு அதிகாரிகளும் வணிகப் பெருமக்களும் கொடுத்த நிவந்த கல்வெட்டுகளையும் சேர்த்து 77 கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளது.
பெரும்பாலான சோழ மன்னர்களின் நிவந்தம் பெற்ற ஜெயம்கொண்ட சோழமண்டலுத்து தாமல் கோட்டத்து, ராஜமல்லசதுர்வேதி மங்கலத்து போந்தை மாஹாதேவர் ..... பெரும் அமைதியை விரும்புகிறார் போலம்....... அதனாலேயே யாரும் அங்கு செல்லாமல் இருக்கிறார்கள் போலும்,இவ்வளவு செழிப்பும், பெருமையும் வரலாற்று சிறப்பும் வாயந்த இக்கோயிலுக்கு சென்று மகாதேவரை தொந்தரவு செய்ய வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது அல்லவா???
சாலை வசதிகள் இப்போது ஓரளவு செய்யப்பட்டுள்ள இந்த கோயிலை சுற்றி மரங்கள் அமைத்து இயற்கை சூழ்நிலையை மேம்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.....
காஞ்சிபுரம் அடுத்து பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓச்சேரிக்கு அருகில் இடது புறமாக 7.5 கிலோ மீட்டர் சென்றால் இந்த நாட்டேரி பிரம்மதேச போந்தை மகாதேவர் கோயிலை அடையலாம்....



  • வல்லவரையன் தேவியர்
  • ராஜமல்ல சதுர்வேதிமங்கலத்து
  • ஜெயங்கொண்ட சோழமண்டலத்து, தாமல் கோட்டத்து ,ராஜமல்ல சதுர்வேதி மங்கலத்து போந்தை மகாதேவர்
  • ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை

No comments:

Post a Comment

Popular Posts