Friday, December 27, 2019

வரலாற்றுப்_பயணங்கள்: 57-ஆபத்சகாயேஸ்வரர் கோயில்,வாலாஜாபாத், காஞ்சிபுரம்

ஆனந்தவள்ளி சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோயில்,
தென்னேரி, வாலாஜாபாத், காஞ்சிபுரம்
ஆலயத்திற்குள் நுழையும் முன்பு பலிபீடமும், நந்தி மண்டபமும் அமைந்துள்ளன. கிழக்கு நோக்கிய வாயிலின் உள்ளே மஹா மண்டபம், அர்த்த மண்டபம் மற்றும் கருவறை அமைந்துள்ளன.
ஆலயத்தின் திருச்சுற்றில் தெற்கு நோக்கி நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மேற்கு நோக்கி மஹா விஷ்ணுவும், வடக்கு நோக்கி பிரம்மா மற்றும் ஸ்ரீ விஷ்ணு துர்க்கையும் வீற்றிருந்து அருளுகின்றார்.
மஹாவிஷ்ணுவும் எதிரில் ஆஞ்சநேயர் வீற்றிருந்து அருளுகிறார்.
ஸ்ரீ சண்டிகேஸ்வரர் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி அருளுகின்றார்.
இணையத்தில் இருந்து சில கல்வெட்டு செய்திகள்:
முதலாம் ராஜ ராஜனின் பதின்மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் (கி. பி. 995) உத்தம சோழ சதுர்வேதி மங்கலத்து உத்தம சோழ ஈஸ்வரத்தாழ்வார்க்கு ஸ்ரீ கண்டராதித்த தேவர் நம்பிராட்டியார் கண்டன் மதுராந்தக தேவரான உத்தம சோழ தேவரைத் திருவயிறு வாய்த்த உடையபிராட்டியார் அமுது தயாரிக்க சில பாத்திரங்களை வழங்கியுள்ளார். பாத்திரங்களின் பெயர்களும் எடைகளும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்து நின்றானோடு ஒக்கும் வெள்ளிக்கோலால் எடை நிறுத்தப்பட்டது.
ராஜராஜனுடைய இருபதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் ஸ்ரீ உத்தம சோழ சதுர்வேதி மங்கலத்தின் சபை கூடி எடுத்த தீர்மானம் உள்ளது.
இக்கோயில் பள்ளிப்படையாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கமுகு, வாழை போன்ற பயிர்கள் பயிரிட பாதியளவு வரிவிலக்கு பத்தாண்டுகளுக்கு அளிக்க முடிவெடுத்துள்ளார் என்றும் கல்வெட்டில் காண்கிறோம்.
வீர ராஜேந்திர சோழனுடைய கல்வெட்டும் விளக்கெரிக்க ஏற்பாடு செய்ததையே குறிப்பிடுகிறது.
இரண்டாம் ராஜாதிராஜனுடைய கல்வெட்டுகள் சபை மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையினைக் குறிப்பிடுகின்றன.
தூங்கானை மாடவடிவில் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
முதல் குலோத்துங்கனின் காலத்தில் கற்றளியாகக் கட்டப்பட்டிருக்க வேண்டும். கி. பி. 1115-இல் கோயில் திருப்பணிக்கும், திருப்பதியம் பாடவும் வெலிமாநல்லூரில் நிலங்கள் வழங்கப்பட்டன.
கி. பி. 1178-இல் திருப்பணிநாச்சியாரை எழுந்தருளப்பண்ணி வழிபாட்டுக்கு பூந்தன்மல்லி வணிகன் ஒருவன் நிலங்களை அளித்துள்ளான்.
அச்சுததேவராயரின் முகவர் காளத்திநாதன் கல்வெட்டு "ஆபத்துக்காத்தான்' என இறைவனைச் சுட்டுகிறது. சம்பந்தப் பெருமான் நாயனார் மற்றும் சுந்திரமூர்த்தி நாயனார் வழிபாட்டிற்காக நிலங்கள் வழங்கப்பட்டன.
மூன்றாம் ராஜராஜன் கி. பி. 1220 -இல் ஏகாம்பரதேவர் வழிபாட்டிற்கு இருவேலி நிலமும், சம்பந்தப்பெருமான் வழிபாட்டுக்கு 3 வேலி நிலத்தையும் வழங்கியுள்ளார்.
சுந்தரபாண்டியனுடைய இரு கல்வெட்டுகள் இறைவனை அனந்தீஸ்வரர் எனக் குறிப்பிட்டு நிலத்தானங்களையும் குறிப்பிடுகின்றன.
இவ்வூரில் காணப்படும் இரு கல்வெட்டுகளின் மூலம் பெருமழையால் ஏரியின் உடைப்பெடுத்து மிகுந்த சேதம் விளைவித்தபோது 23 மதகுகள் கட்டி எச்சூர், குமாரதாத்தாச்சாரியார் காப்பாற்றியுள்ளார் என்று அறிகிறோம்.
தென்னேரி ஏரிக்கு தாத சமுத்திரம் என்ற பெயருமிடப்பட்டது.


ஆபத்சகாயேஸ்வரர்

ஆனந்தவள்ளி அம்மன்

வெளியேயுள்ள நந்திமண்டபம்
கருவறையில் பூதகனங்கள்


தட்சிணாமூர்த்தி


கோயில் முகப்பு

பைரவர்


நர்த்தனபிள்ளையார்


விஷ்ணு மூர்த்தி

பக்த ஆஞ்சிநேயர்


நான்முகன்


வள்ளி தெய்வயனை சமேத முருகன்


மிகத்தெளிவாக வடிவமைக்கப்பட்ட சண்டேஸ்வரர்


அழகே உருவான விஷ்ணு துர்க்கை


பலிபீடம், கொடி மர பீடம் மற்றும் நந்தி மண்டபம்


குலோத்துங்க சோழர் கல்வெட்டு



No comments:

Post a Comment

Popular Posts